பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் பிப்ரவரி 22, 23 ஆகிய நாட்களில் குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்


குஜராத்தில் ரூ.60,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைக்கிறார்

கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

குஜராத்தில் சாலை, ரயில், எரிசக்தி, சுகாதாரம், இணையதள இணைப்பு, நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் மேம்படும்

வதோதரா மும்பை விரைவுச் சாலை, பாரத் நெட் இரண்டாம் கட்டத் திட்டத்தின் முக்கிய பகுதிகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

நவ்சாரியில் பிரதமரின் மித்ரா பூங்கா கட்டுமானப் பணிகளைப் பிரதமர் தொடங்கிவைக்கிறார்

அம்பாஜியில் ரிச்சாடியா மகாதேவ் கோயில், ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

அகமதாபாத்தில் நடைபெறும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்

மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் கோவிலில் பிரதமர் பூஜை, தரிசனம் செய்கிறார்

வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை மாற்றியமைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

வாரணாசியில் சாலை, தொழில், சுற்றுலா, ஜவுளி, சுகாதாரத் துறைகள் பெரும் உத்வேகம் பெறும்
துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பிரதமர் பூஜை, தரிசனம் செய்கிறார்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர்ராதா சபாகரில் பரிசளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 21 FEB 2024 11:41AM by PIB Chennai

பிரதமர் பிப்ரவரி 22,23 ஆகிய நாட்களில் குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 22 அன்று காலை 10.45 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 12:45 மணியளவில் மெஹ்சானா சென்றடையும் பிரதமர் வாலிநாத் மகாதேவ் கோயிலில் பூஜை, தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 1 மணியளவில், மெஹ்சானாவின் தாராப்பில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ரூ.13,500 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மாலை 4:15 மணியளவில், பிரதமர் நவ்சாரிக்கு செல்கிறார். சுமார் ரூ.47,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மாலை 6.15 மணியளவில் காக்ரபார் அணுமின் நிலையத்தைப் பார்வையிடுகிறார்.

பிப்ரவரி 23 அன்று, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். காலை 11:15 மணிக்கு, பிரதமர் துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பூஜை, தரிசனம் செய்வார். காலை 11:30 மணிக்கு, துறவி குரு ரவிதாஸின் 647-வது பிறந்த நாளை நினைவுகூரும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 1:45 மணிக்கு, வாரணாசியில் ரூ .13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

குஜராத்தில் பிரதமர்

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். அகமதாபாத்தின் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்  பொன்விழாக் கொண்டாட்டத்தில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு  என்பது தொழில்முனைவோர், விவசாயிகளின் உத்வேகம், வலுவான உறுதிப்பாடு ஆகியவற்றின் சான்றாகும். இது அமுல் ரக பால் பொருட்களை உலகின் வலிமைமிக்க ஒன்றாக மாற்றியுள்ளது.

குஜராத்தில் மெஹ்சானா, நவ்சாரியில் நடைபெறும் இரண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், சாலை, ரயில், எரிசக்தி, சுகாதாரம், இணையதள இணைப்பு, நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை, குஜராத்  மாநிலத்தில் பழங்குடியினர் மேம்பாடு ஆகியவற்றுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், 8000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் பாரத் நெட் கட்டம்-2 – குஜராத் கண்ணாடி இழை தொகுப்பு கட்டமைப்பு நிறுவனம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மகேசனா, பனஸ்கந்தா மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை, பாதை மாற்றம், புதிய அகல ரயில் பாதை ஆகியவற்றிற்கான பல திட்டங்கள், கேடா, காந்திநகர், அகமதாபாத், மகேசனாவில் பல சாலை திட்டங்கள், காந்திநகரில் உள்ள குஜராத் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முக்கிய கல்வி கட்டிடம், பனஸ்கந்தாவில் பல நீர் விநியோகத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஆனந்த் மாவட்டத்தில் புதிய மாவட்ட அளவிலான மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவமனை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி பிராந்தியத்தில் ரிஞ்சடியா மகாதேவ் கோயில், ஏரியின் புனரமைப்பு, காந்திநகர், அகமதாபாத், பனஸ்கந்தா, மகேசனாவில் பல சாலைத் திட்டங்கள், தீசாவில் உள்ள விமானப்படை நிலையத்தின் ஓடுபாதை, அகமதாபாத்தில் உள்ள மனித, உயிரியல் அறிவியல் காட்சியகம்,  குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில்   குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடம், காந்திநகர், அகமதாபாத், பனஸ்கந்தா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.  

நவ்சாரியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், வதோதரா மும்பை விரைவுச் சாலையின் பல்வேறு தொகுப்புகள் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பரூச், நவ்சாரி, வல்சாத் ஆகிய இடங்களில் பல சாலைத் திட்டங்கள், தாபியில் கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம், பரூச்சில் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை இதில் அடங்கும். நவ்சாரியில் பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி, ஆடை பூங்கா கட்டுமானப் பணிகளையும் பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது, பரூச்-தஹேஜ் விரைவுச் சாலை கட்டுமானம், வதோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையில் பல திட்டங்கள், வதோதராவில் பிராந்திய அறிவியல் மையம், சூரத், வதோதரா,பஞ்சமஹாலில் ரயில்வே பாதை மாற்றத்திற்கான திட்டங்கள், பரூச், நவ்சாரி, சூரத்தில் பல சாலை திட்டங்கள், வல்சாத்தில் பல்வேறு நீர் விநியோகத்திட்டங்கள், நர்மதா மாவட்டத்தில் பள்ளி, விடுதி கட்டிடம் மற்றும் பிற திட்டங்கள் போன்றவை தொடங்கப்படவுள்ளன.

சூரத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், சூரத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், கனவு நகரம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

கக்ரபார் அணு மின் நிலையத்தின் அலகு 3, 4-ல் அமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 1400 (700*2) மெகாவாட் ஒட்டுமொத்த திறன் கொண்ட கக்ரபார் அணுமின் நிலையம் -3 மற்றும் கக்ரபார் அணுமின் நிலையம் -4 திட்டங்கள் இந்திய அணுமின் கழக நிறுவனம் மூலம் ரூ.22,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டது. அவை உலகின் மிகச் சிறந்த அணு உலைகளுடன் ஒப்பிடக்கூடிய மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட முதல் அணு உலைகள் ஆகும். இந்த இரண்டு அணு உலைகளும் சேர்ந்து ஆண்டுக்கு சுமார் 10.4 பில்லியன் யூனிட் தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், மேலும் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, தாத்ரா, நாகர் ஹவேலி , டாமன் மற்றும் டையூ போன்ற பல மாநிலங்களின் நுகர்வோருக்கு பயனளிக்கும்.

வாரணாசியில் பிரதமர்

2014-ம் ஆண்டு முதல், சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சுற்றுலா, கல்வி, சுகாதாரம், குடிநீர், நகர்ப்புற மேம்பாடு, தூய்மைப்பணி போன்ற முக்கியமான துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை மாற்றியமைப்பதில் பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வகையில் பிரதமர், வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் சாலை இணைப்பை மேலும் மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை எண் 233-ல் கர்க்ரா-பாலம் வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது உட்பட பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 56-ல் சுல்தான்பூர்-வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தொகுப்பு-1; தேசிய நெடுஞ்சாலை 19-ல் வாரணாசி அவுரங்காபாத் பிரிவின் முதல் கட்டத்தை ஆறு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 35-ல் தொகுப்பு-1 வாரணாசி-ஹனுமான் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; மற்றும் பபத்பூர் அருகே வாரணாசி ஜான்பூர் ரயில் பிரிவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். வாரணாசி ராஞ்சி கொல்கத்தா விரைவுச் சாலை தொகுப்பு-1 கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

இந்தப் பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், சேவாபுரியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கழக நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். வேளாண் பூங்காவில் பனாஸ் காஷி சங்குல் பால் பதப்படுத்தும் பிரிவு, கர்கியான் உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணைய வேளாண் பூங்காவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள், பட்டுத் துணி  நெய்தலில் நெசவாளர்களுக்கான பொது வசதி மையம் ஆகியவை இதில் அடங்கும்.

ரமணாவில் என்டிபிசி நிறுவனத்தின் நகர்ப்புற கழிவுகளை கரி ஆலையாக மாற்றுவது உட்பட வாரணாசியில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சிஸ்-வருணா பகுதியில் நீர் விநியோக அமைப்பை மேம்படுத்துதல்; குளங்களை புனரமைத்தல், பூங்காக்களை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட வாரணாசியை அழகுபடுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

வாரணாசியில் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா தொடர்பான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். பத்து ஆன்மீக யாத்திரைகளுடன் பஞ்ச்கோஷி பரிக்கிரமா மார்க் மற்றும் பவன் பாதையின் ஐந்து இடங்களில் பொது வசதிகளை மறுவடிவமைப்பு செய்வது இந்தத் திட்டங்களில் அடங்கும். வாரணாசி, அயோத்திக்கு இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையம் வழங்கிய மின்சார கட்டுமரப் படகு சேவை தொடங்குதல், படகுத் துறையில் ஏழு உடை மாற்றும் அறைகள், நான்கு சமூக படகுத்துறைகள். பசுமை எரிசக்தியைப் பயன்படுத்தி கங்கையில் சுற்றுலா அனுபவத்தை மின்சாரக் கட்டுமரம் மேம்படுத்தும். பல்வேறு நகரங்களில் இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையத்தின் 13 சமுதாய படகுத்துறைகளுக்கும், பல்லியாவில் பான்டூன் படகை விரைவாக அமைப்பதற்கான பொறி முறைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

புகழ்பெற்ற வாரணாசியின் ஜவுளித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வாரணாசியில் தேசிய ஆடை வடிமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தப் புதிய நிறுவனம் ஜவுளித் துறையின் கல்வி, பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

வாரணாசியில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதியோருக்கான தேசிய மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். நகரில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக சிக்ரா விளையாட்டு அரங்கம் கட்டம் -1 மற்றும் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் ஸ்வதந்த்ரதா சபாகரில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், காஷி சன்சாத் கியான் பிரதியோகிதா, காஷி சன்சாத் புகைப்படக்கலை பிரதியோகிதா, காஷி சன்சாத் சமஸ்கிருத பிரதியோகிதா ஆகிய விருதுகளை வென்றவர்களுக்கு பிரதமர் விருதுகளை வழங்குவார். வாரணாசியில் சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக்கருவிகள், கல்வி உதவித்தொகைகளையும் அவர் வழங்குவார். காசி சன்சாத் புகைப்படக் கலை பிரதியோகிதா காட்சியகத்தைப் பார்வையிடும் பிரதமர், "காசியை சீரமைத்தல்" என்ற கருப்பொருளில் பங்கேற்பாளர்களுடன் புகைப்படக் குறிப்புகளுடன் கலந்துரையாடுகிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அருகே சீர் கோவர்தன்புரில் உள்ள துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில், அருகே உள்ள ரவிதாஸ் பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துறவி ரவிதாஸ் சிலையை பிரதமர் திறந்து வைப்பார். சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான துறவி ரவிதாஸ் பிறந்த இடத்தைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கும் அவர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகம், சுமார் ரூ.62 கோடி மதிப்பில் பூங்காவை அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கும்  அடிக்கல் நாட்டவுள்ளார்.

***

ANU/PKV/IR/AG/KRS/DL

 


(Release ID: 2007686) Visitor Counter : 129