பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ன் நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமான மதிப்பிலான 14000 திட்டங்களை தொடங்கி வைத்தார்

"உத்தரப்பிரதேசத்தின் இரட்டை என்ஜின் அரசு மாநில மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இரவும் பகலும் உழைத்து வருகிறது"

"கடந்த 7 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசத்தில் வணிகம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது"

"மாற்றத்திற்கான உண்மையான நோக்கம் இருந்தால், அதை யாராலும் தடுக்க முடியாது என்பதை இரட்டை என்ஜின் அரசு நிரூபித்துள்ளது"

"உலக அளவில், இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத நன்மதிப்பு உள்ளது"

" உத்தரப்பிரதேசத்தில் வாழ்க்கையை எளிதாக்குதல், மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு நாங்கள் சமமான முக்கியத்துவம் அளித்துள்ளோம்"

"அரசு திட்டங்களின் பலன்கள் அனைவரையும் சென்றடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்"

"அதிக எண்ணிக்கையிலான அதிவேக விரைவுச்சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உத்

Posted On: 19 FEB 2024 4:36PM by PIB Chennai

லக்னோவில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 பிப்ரவரியில் நடைபெற்ற உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ன் நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேசம் முழுவதும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள 14000 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி போன்ற துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இன்றைய அமைப்பு வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தை மேம்படுத்துவது வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை நோக்கிய ஒரு முன்னெடுப்பாகும் என்று கூறினார். காணொலிக் காட்சி மூலம் உத்தரபிரதேசத்தின் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இணைந்திருப்பதை பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களை வரவேற்று, 7-8 ஆண்டுகளுக்கு முன்பு இதையெல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சூழலில்  தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்கள் இப்போது இணைந்திருக்க முடிகிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். முந்தைய ஆட்சிக்காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் காரணமாக மாநிலத்தில் நேர்மறையான சூழல் உருவானதாக குறிப்பிட்டார். "இன்று, உத்தரப்பிரதேசம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளைக் காண்கிறது" என்று கூறிய பிரதமர், தானும் வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் பற்றிப் பேசிய பிரதமர், இது உத்தரப்பிரதேசத்தின் முகத்தையே மாற்றும் என்று கூறியதுடன், முதலீட்டாளர்களையும், இளைஞர்களையும் பாராட்டினார்.

உத்தரப்பிரதேசத்தில் ஏழு ஆண்டுகளாக இரட்டை என்ஜின் அரசு நடந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தக் காலகட்டத்தில் அதிகார கலாச்சாரத்திற்கு பதிலாக சிவப்புக் கம்பள கலாச்சாரம் வந்துள்ளது என்றார். கடந்த 7 ஆண்டுகளில் உ.பி.யில் குற்றங்கள் குறைந்து வணிக கலாச்சாரம் செழித்துள்ளது என்று அவர் கூறினார். "கடந்த 7 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் வர்த்தகம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான சூழ்நிலை உருவாகியுள்ளது" என்று பிரதமர் கூறினார். மாற்றத்திற்கான உண்மையான விருப்பம் இருந்தால் இரட்டை என்ஜின் அரசு தவிர்க்க முடியாதது என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளதை அவர் குறிப்பிட்டார். மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார். "இன்று, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. நாட்டின் முதல் துரித ரயில் ஓடும் மாநிலம் இது" என்று கூறிய பிரதமர், மாநிலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச் சாலைகள் பெருமளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் நதி நீர்வழிகளின் பயன்பாட்டைப் பற்றி கூறிய பிரதமர் மோடி, மாநிலத்தின் போக்குவரத்து இணைப்பு மற்றும் பயணத்தின் எளிமையைப் பாராட்டினார்.

இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் முதலீடு என்ற அடிப்படையில் மட்டும் மதிப்பிடப்படவில்லை என்றும், அவை சிறந்த எதிர்காலத்திற்கான முழுமையான தொலைநோக்குப் பார்வையாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாருக்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், உலகம் முழுவதும் இந்தியா மீது முன்னெப்போதும் இல்லாத நேர்மறை எண்ணம் இருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு நாடும் உறுதியையும், நம்பிக்கையையும் உணர்கிறது என்றார். மோடியின் உத்தரவாதம் இன்று நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சிறந்த வருமானத்திற்கான உத்தரவாதமாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது" என்று பிரதமர் கூறினார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், தேர்தல்கள் கதவுகளைத் தட்டும் போது, முதலீடுகளிலிருந்து அரசுகள் விலகிச் செல்லும் போக்கை இந்தியா உடைத்துள்ளது என்று கூறினார். "உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் ஸ்திரத்தன்மையை நம்புகிறார்கள்" என்று குறிப்பிட்ட பிரதமர், உத்தரப்பிரதேசத்திலும் இதேபோன்ற போக்கு தோன்றியதை சுட்டிக்காட்டினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்திற்கு புதிய சிந்தனை மற்றும் திசையின் அவசியத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். குறைந்தபட்ச இருத்தலுடன் மக்களை பிராந்திய ஏற்றத்தாழ்வுகளுடன் வைத்திருக்கும் முந்தைய அணுகுமுறை நாட்டின் வளர்ச்சிக்கு பொருத்தமானதல்ல என்று அவர் கூறினார். இந்த அணுகுமுறையால் உத்தரப்பிரதேசமும் முன்பு பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் எளிமையாக்குவதில் இரட்டை என்ஜின் அரசு ஈடுபட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு வழிவகுக்கும் என்றார். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ, 4 கோடி பக்கா வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், நகர்ப்புற நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நனவாக்க ரூ.7 ஆயிரம் கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம், உ.பி.யைச் சேர்ந்த 1.5 லட்சம் குடும்பங்கள் உட்பட 25 லட்சம் பயனாளி குடும்பங்களுக்கு வட்டியில் தள்ளுபடி கிடைத்ததாக அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டில் வருமான வரி விலக்கு வரம்பை 2 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்துவது போன்ற வருமான வரி சீர்திருத்தங்கள் இப்போது நடுத்தர மக்களுக்கு உதவியுள்ளன.

எளிதாக வாழ்வதற்கும், எளிதாக வர்த்தகம் செய்வதற்கும் அரசு சமமான முக்கியத்துவத்தை அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒவ்வொரு பயனாளிக்கும் அனைத்து பயன்களும் கிடைக்கச் செய்ய இரட்டை என்ஜின் அரசு பாடுபடுகிறது என்றார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ள நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  யாத்திரையின் பலன்களை பயனாளிகளின் இருப்பிடங்களுக்கே கொண்டு சென்றது குறித்து அவர் குறிப்பிட்டார். "மோடியின் உத்தரவாத வாகனம் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களையும் சென்றடைந்துள்ளது" என்று பிரதமர் கூறினார். அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவது தான் சமூக நீதியின் உண்மையான வடிவம் என்று பிரதமர் வலியுறுத்தினார். "இதுதான் உண்மையான மதச்சார்பின்மை" என்று கூறிய பிரதமர் மோடி, முந்தைய அரசின் போது ஊழல் நடைமுறைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் நிலவியதைச் சுட்டிக்காட்டினார், இது பயனாளிகளுக்கு கடினமான செயல்முறைகளுக்கு வழிவகுத்தது. "உறுதியான வீடுகள், மின்சார விநியோகம், எரிவாயு இணைப்பு அல்லது குழாய் நீர் என ஒவ்வொரு பயனாளியும் அவர்களுக்கு தகுதியானதைப் பெறும் வரை அரசு ஓய்வெடுக்காது என்பதே மோடியின் உத்தரவாதம்" என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

"முன்பு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களை மோடி கவனித்துக் கொள்கிறார்" என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் குறித்து விவரித்த பிரதமர், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டதற்கான உதாரணங்களை எடுத்துரைத்தார். உ.பி.யில், சுமார் 22 லட்சம் சாலையோர வியாபாரிகள் பலன்களைப் பெற்றனர். இத்திட்டத்தின் பயனாளிகள் 23,000 மதிப்புள்ள கூடுதல் ஆண்டு வருமானத்தை அனுபவித்ததாக அவர் குறிப்பிட்டார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் 75 சதவீத பயனாளிகள் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பாதி பேர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார். "முன்பு வங்கிகளுக்கு உத்தரவாதம் கொடுக்க அவர்களுக்கு ஏதும் இருந்ததில்லை. இன்று அவர்கள் மோடியின் உத்தரவாதத்தைப் பெற்றுள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார். இதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோகியாவின் கனவுகளின் சமூக நீதி என்று அவர் கூறினார்.

லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் பற்றி பேசிய பிரதமர், இரட்டை என்ஜின் அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் சமூக நீதி மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கின்றன என்று கூறினார். சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும், இதுவரை ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி  சகோதரிகளாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் அவர் எடுத்துரைத்தார்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களின் வலிமையைப் பற்றி பேசிய பிரதமர், மாநிலத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள விரிவாக்கம் மற்றும் ஆதரவுடன், பாதுகாப்பு வழித்தடம் போன்ற திட்டங்களின் பலன்களையும் குறிப்பிட்டார். ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி வலுப்படுத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதேபோல், ரூ.13,000 கோடி பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான விஸ்வகர்மா குடும்பங்களை நவீன நடைமுறைகளுடன் இணைக்கும்.

அரசின் துரிதமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் பொம்மை உற்பத்தித் துறையைப் பற்றி குறிப்பிட்டார். வாரணாசியில் தயாரிக்கப்படும் மர பொம்மைகளை அப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக  அதன்  வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும் அவர் தெரிவித்தார். பல தலைமுறைகளாக பொம்மைகளை தயாரிப்பதில் மக்கள் திறமை பெற்றிருந்தாலும், நாடு வளமான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து திரு மோடி வருத்தம் தெரிவித்தார். இந்திய பொம்மைகள் ஊக்குவிக்கப்படாததாலும், நவீன உலகிற்கு ஏற்ப கைவினைஞர்களுக்கு உதவி வழங்கப்படாததாலும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளால் இந்திய பொம்மைகள் சந்தைகள் பின்தங்கியிருந்தன என்று அவர் சுட்டிக்காட்டினார். இதை மாற்ற வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டிய பிரதமர், பொம்மைகளின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்த இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு நாடு முழுவதும் உள்ள பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை நினைவு கூர்ந்தார்.

"இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறுவதற்கான ஆற்றல் உத்தரப்பிரதேசத்திற்கு உள்ளது" என்று கூறிய பிரதமர், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் இன்று வாரணாசி மற்றும் அயோத்திக்கு செல்ல விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக, உத்தரப்பிரதேசத்தில் சிறு தொழில்முனைவோர், விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்-உணவக உரிமையாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். உ.பி.யின் மேம்பட்ட உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச இணைப்புகளையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். வாரணாசி வழியாக நதியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட உலகின் மிக நீண்ட கப்பல் சேவையையும் அவர் எடுத்துரைத்தார். 2025 ஆம் ஆண்டில் கும்பமேளாவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது, இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.  வரும் காலங்களில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.

மின்சார இயக்கம் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற அரசு முக்கியத்துவம் அளிப்பதை எடுத்துரைத்தார். "நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு குடும்பமும் சூரிய சக்தி ஜெனரேட்டராக மாற வேண்டும் என்பதே எங்கள் முயற்சி" என்று பிரதமர் மோடி சூரிய சக்தி இலவச மின்சாரத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டார், இந்தத் திட்டத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும், மேலும் மக்களும் அதிகப்படியான மின்சாரத்தை அரசுக்கு விற்க முடியும். தற்போது 1 கோடி குடும்பங்களுக்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ .30,000 முதல் ரூ .80,000 வரை நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்று திரு மோடி தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு ரூ .30,000 மற்றும் 300 யூனிட் அல்லது அதற்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு சுமார் ரூ.80,000 உதவித்தொகை கிடைக்கும் என்று அவர் மேலும் விளக்கினார்.

மின்னணு வாகனத் துறையை நோக்கிய அரசின் உந்துதலையும் பிரதமர் மோடி எடுத்துரைத்து, உற்பத்தி கூட்டாளர்களுக்கான ஊக்குவிப்பு திட்டம் மற்றும் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான வரி விலக்குகள் ஆகியவற்றையும் குறிப்பிட்டார். இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 34.5 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன" என்று அவர் மேலும் கூறினார். "நாங்கள் மின்சார பேருந்துகளை வேகமாக வெளியிட்டு வருகிறோம். சூரிய சக்தி அல்லது மின்சார வாகனமாக இருந்தாலும், உத்தரபிரதேசத்தில் இரண்டு துறைகளிலும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்குவதற்கான சமீபத்திய முடிவைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "உத்தரபிரதேசத்தின் மண்ணின் மைந்தரான சவுத்ரி சாஹேப்பை கௌரவிப்பது நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் விவசாயிகளுக்கு ஒரு மரியாதை" என்று கூறினார். அரசு சலுகைகளை வழங்குவதில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான நடைமுறைகள் குறித்தும் அவர் பேசினார். சிறு விவசாயிகளுக்கு சவுத்ரி சரண் சிங் அளித்த பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், "சவுத்ரி சஹாபின் உத்வேகத்துடன் நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து வருகிறோம்" என்றார்.

விவசாயத்தில் புதிய வழிகளைக் கண்டறிவதில் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், "நமது நாட்டின் விவசாயத்தை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல விவசாயிகளுக்கு நாங்கள் உதவுகிறோம் மற்றும் ஊக்குவிக்கிறோம்" என்றார். உத்தரப்பிரதேசத்தில் கங்கைக் கரையோரங்களில் பெரிய அளவிலான இயற்கை விவசாயம் தோன்றியுள்ளதை மேற்கோள் காட்டி, இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானியங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், இது விவசாயிகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், நமது புனித நதிகளின் தூய்மையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களின் முயற்சிகளில் "பூஜ்ஜிய விளைவு, குறைபாடு இல்லாதது" என்ற மந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர்களை வலியுறுத்தினார். உலகெங்கிலும் உள்ள உணவு மேஜைகளில் இந்திய உணவுப் பொருட்கள் இடம்பெற வேண்டும் என்ற பொதுவான இலக்கை நோக்கி பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், சித்தார்த் நகரின் காலா நமக் அரிசி மற்றும் சந்தௌலியின் கருப்பு அரிசி போன்ற தயாரிப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

சிறுதானியங்கள் சிறந்த உணவுகளாக வளர்ந்து வரும் போக்கை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இந்தத் துறையில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "சிறுதானியங்கள் போன்ற சிறந்த உணவுகளில் முதலீடு செய்ய இது சரியான நேரம்" என்று அவர் கூறினார். விவசாயிகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்குமாறு தொழில்முனைவோரை ஊக்குவித்த பிரதமர், பரஸ்பரம் பயனளிக்கும் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகளை அளிக்கும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு அளவிலான விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை சுட்டிக் காட்டினார். "விவசாயிகளுக்கு நன்மை மற்றும் விவசாயம் உங்கள் வணிகத்திற்கும் நல்லது" என்று பிரதமர் மோடி முதலீட்டாளர்களிடம் கூறினார்.

இந்தியாவின் ஊரகப் பொருளாதாரம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் உத்தரப்பிரதேசத்தின் முக்கிய பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் பேசிய பிரதமர் திரு மோடி, இந்த வாய்ப்பின் பலன்களை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்தார். உத்தரப்பிரதேச மக்களின் திறன்கள் மீதும், மாநிலம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் இரட்டை என்ஜின் அரசின் முயற்சிகள் மீதும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்கள், சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் உட்பட சுமார் 5000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

***

ANU/AD/BS/RS/ DL



(Release ID: 2007194) Visitor Counter : 75