பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 03 FEB 2024 12:19PM by PIB Chennai

மதிப்புமிக்க சட்ட வல்லுநர்களே, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, மதிப்பிற்குரிய பார்வையாளர்களே. உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

 

நண்பர்களே

இந்த மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதிலுமிருந்து முன்னணி சட்ட மேதைகள் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக நமது சர்வதேச விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அற்புதமான இந்தியாவை முழுமையாக அனுபவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

நண்பர்களே

ஆப்பிரிக்காவிலிருந்து பல நண்பர்கள் இங்கு வந்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க யூனியனுடன் இந்தியா சிறப்பான உறவைக் கொண்டுள்ளது. இந்தியா தலைமையில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பின் ஒரு பகுதியாக ஆனது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஆப்பிரிக்க மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பெரிதும் உதவும்.

 

நண்பர்களே

கடந்த சில மாதங்களில், சட்டத் துறையினருடன் நான் பல சந்தர்ப்பங்களில் உரையாடினேன். சில நாட்களுக்கு முன்பாக நான் உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தேன். கடந்த செப்டம்பரில், இதே இடத்தில், நான் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு வந்தேன். இத்தகைய தொடர்புகள் நமது நீதி அமைப்பின் பணிகளை நாம் அனைவரும் பாராட்ட உதவுகின்றன. சிறந்த மற்றும் விரைவான நீதி வழங்கலுக்கு தீர்வு காண இவை வாய்ப்புகளாகும்.

 

நண்பர்களே

இந்திய சிந்தனைகளில் நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்திய சிந்தனையாளர்கள் கூறியதாவது: நீதி என்பது சுதந்திரமான சுயராஜ்யத்தின் அடிநாதம், நீதி இல்லாமல் ஒரு தேசத்தின் இருப்பு கூட சாத்தியமில்லை என்பதாகும்.

 

நண்பர்களே

இந்த மாநாட்டின் கருப்பொருள் 'நீதி வழங்கலில் எல்லை தாண்டிய சவால்கள்'. மிகவும் இணைக்கப்பட்ட, வேகமாக மாறிவரும் உலகில், இது மிகவும் பொருத்தமான தலைப்பு. சில நேரங்களில், ஒரு நாட்டில் நீதியை உறுதிப்படுத்த மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நாம் ஒத்துழைக்கும்போது, ஒருவருக்கொருவர் அமைப்புகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதிக புரிதல் அதிக ஒத்திசைவைக் கொண்டுவருகிறது. இணைந்து பணியாற்றுவது சிறந்த மற்றும் விரைவான நீதி வழங்கலை ஊக்குவிக்கிறது. எனவே, இதுபோன்ற மேடைகள் மற்றும் மாநாடுகள் முக்கியமானவை.

 

நண்பர்களே

எங்கள் அமைப்புகள் ஏற்கனவே பல களங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுகின்றன. உதாரணமாக, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் கடல் போக்குவரத்து. அதேபோல், விசாரணை மற்றும் நீதி வழங்குவதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் அதிகார வரம்பை மதிக்கும்போது கூட ஒத்துழைப்பு ஏற்படலாம். நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, நீதியை வழங்குவதற்கான ஒரு கருவியாக அதிகார வரம்பு மாறுகிறது, அதைத் தாமதப்படுத்தக்கூடாது.

 

நண்பர்களே

சமீப காலங்களில், குற்றங்களின் தன்மை மற்றும் நோக்கம் ஒரு தீவிர மாற்றத்தைக் கண்டுள்ளது. குற்றவாளிகள் பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரந்த கட்டமைப்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் நிதி மற்றும் செயல்பாடுகள் இரண்டிற்கும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒரு பிராந்தியத்தில் நடக்கும் பொருளாதார குற்றங்கள் மற்ற பிராந்தியங்களில் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படுகின்றன. கிரிப்டோ கரன்சி மற்றும் சைபர் அச்சுறுத்தல்களின் எழுச்சி புதிய சவால்களை முன்வைக்கிறது. 21 ஆம் நூற்றாண்டு சவால்களை 20 ஆம் நூற்றாண்டு அணுகுமுறையுடன் எதிர்த்துப் போராட முடியாது. மறுபரிசீலனை, மறுகற்பனை மற்றும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நீதியை வழங்கும் சட்ட அமைப்புகளை நவீனமயமாக்குவதும் இதில் அடங்கும். நமது அமைப்புகளை மிகவும் நெகிழ்வானதாகவும் மாற்றியமைக்கக்கூடியதாகவும் மாற்றுவதும் இதில் அடங்கும்.

 

நண்பர்களே

சீர்திருத்தங்களைப் பற்றி நாம் பேசும்போது, நீதி அமைப்புகளை மக்களை மையமாகக் கொண்டதாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். நீதி வழங்குவதில் எளிதான நீதி ஒரு தூணாகும். இந்த இடத்தில், இந்தியா பகிர்ந்து கொள்ள பல கற்றல்கள் உள்ளன. 2014-ல் பிரதமராகும் பொறுப்பை இந்திய மக்கள் எனக்கு அளித்தனர். அதற்கு முன்பு, நான் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராகப் பணியாற்றினேன். அப்போது, மாலை நேர நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்தோம். இது மக்கள் தங்கள் வேலை நேரத்திற்குப் பிறகு நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ள உதவியது. இது நீதியைக் கொடுத்தது, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தியது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்தனர்.

 

நண்பர்களே

லோக் அதாலத் என்ற தனித்துவமான கருத்தாக்கத்தையும் இந்தியா கொண்டுள்ளது. அதாவது மக்கள் நீதிமன்றம். இந்நீதிமன்றங்கள் பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான சிறிய வழக்குகளுக்கு தீர்வு காண வழிவகை செய்கின்றன. இது ஒரு வழக்குக்கு முந்தைய செயல்முறையாகும். இத்தகைய நீதிமன்றங்கள் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்குத் தீர்வு கண்டு, எளிதான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளன. இதுபோன்ற முன்முயற்சிகள் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் பெரும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

 

நண்பர்களே

நீதி வழங்குவதை ஊக்குவிப்பதில் சட்டக் கல்வி ஒரு முக்கிய கருவியாகும். கல்வி என்பது ஆர்வம் மற்றும் தொழில்முறை திறன் இரண்டையும் இளம் மனதில் அறிமுகப்படுத்துகிறது. உலகளவில், ஒவ்வொரு களத்திலும் அதிகமான பெண்களை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்த விவாதம் உள்ளது. அதற்கான முதல் படி, கல்வி மட்டத்தில் ஒவ்வொரு களத்தையும் உள்ளடக்கியதாக மாற்றுவதாகும். சட்டப் பள்ளிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வழக்கறிஞர் தொழிலில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் சட்டக் கல்விக்கு அதிகமான பெண்களை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

 

நண்பர்களே

மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட இளம் சட்ட மேதைகள் உலகிற்கு தேவை. மாறிவரும் காலத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப சட்டக் கல்வியும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். குற்றங்கள், புலனாய்வு மற்றும் ஆதாரங்களின் சமீபத்திய போக்குகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவது உதவியாக இருக்கும்.

 

நண்பர்களே

இளம் சட்ட வல்லுநர்களுக்கு அதிக சர்வதேச வெளிப்பாடு கொண்ட அவர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளது. நமது மிகச்சிறந்த சட்டப் பல்கலைக்கழகங்கள் நாடுகளுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்த முடியும். உதாரணமாக, தடய அறிவியலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கூட இங்கு குறுகிய கால படிப்புகளை ஆராய உதவலாம். மேலும், நீதி வழங்கலுடன் தொடர்புடைய பல சர்வதேச நிறுவனங்கள் உள்ளன. வளரும் நாடுகள் ஒன்றிணைந்து அவற்றில் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும். இதுபோன்ற நிறுவனங்களில் நமது மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் கிடைப்பதற்கும் உதவ முடியும். இது நமது சட்ட அமைப்புகள் சர்வதேச சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொள்ள உதவும்.

 

நண்பர்களே

இந்தியா காலனித்துவ காலத்திலிருந்து ஒரு சட்ட அமைப்பை மரபுரிமையாகப் பெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அதில் பல சீர்திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம். உதாரணமாக, காலனித்துவ காலத்திலிருந்து காலாவதியான ஆயிரக்கணக்கான சட்டங்களை இந்தியா அகற்றியுள்ளது.

இந்த சட்டங்களில் சில மக்களை துன்புறுத்தும் கருவிகளாக மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தன. இது வாழ்க்கையை எளிதாக்குவதையும், தொழில் செய்வதை எளிதாக்குவதையும் அதிகரித்துள்ளது. தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவும் சட்டங்களை நவீனப்படுத்தி வருகிறது.

 

 

இப்போது, 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான காலனித்துவ குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய சட்டங்கள் வந்துள்ளன. முன்னதாக, தண்டனை மற்றும் தண்டனை அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இப்போது, நீதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, குடிமக்களுக்கு பயத்தை விட உறுதியான உணர்வு உள்ளது.

 

நண்பர்களே

தொழில்நுட்பம் நீதி அமைப்புகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளில், இடங்களை வரைபடமாக்குவதற்கும், கிராமப்புற மக்களுக்கு தெளிவான சொத்து அட்டைகளை வழங்குவதற்கும் இந்தியா ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளது. இதனால் பிணக்குகள் குறையும். வழக்கு தொடரும் வாய்ப்பு குறையும். மேலும் நீதி அமைப்பின் சுமை குறைகிறது, இது மிகவும் திறமையானது.

டிஜிட்டல்மயமாக்கல் இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்கள் ஆன்லைனில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியுள்ளது. இது தொலைதூர இடங்களிலிருந்தும் மக்களுக்கு நீதி கிடைக்க உதவியது. இந்த விஷயத்தில் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. மற்ற நாடுகளிலும் இதே போன்ற முயற்சிகள் பற்றி அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

 

நண்பர்களே

நீதி வழங்குவதில் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும். ஆனால் பயணம் ஒரு பகிரப்பட்ட மதிப்புடன் தொடங்குகிறது. நீதிக்கான ஆர்வத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு இந்த உணர்வை வலுப்படுத்தட்டும். ஒவ்வொருவருக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்கும் வகையிலும், யாரும் பின்தங்கி விடாத வகையிலும் உலகை உருவாக்குவோம்.

 

நன்றி.

----

 

ANU/AD/BS/DL


(Release ID: 2002334) Visitor Counter : 61