மத்திய அமைச்சரவை

கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 FEB 2024 11:35AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 29,610.25 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் திட்டங்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு (2025-26 வரை) தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பால்பண்ணைப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்களை பன்முகப்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் விளைபொருட்களை பன்முகப்படுத்துதல், கால்நடை தீவன ஆலை, இனப்பெருக்கப் பண்ணை, கால்நடைக் கழிவுகளிலிருந்து வள மேலாண்மை (வேளாண் கழிவு மேலாண்மை) மற்றும் கால்நடை தடுப்பூசி, மருந்து உற்பத்தி வசதிகள் ஆகியவற்றுக்கான முதலீடுகளை இத்திட்டம் ஊக்குவிக்கும்.

பட்டியலிடப்பட்ட வங்கி மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம், நபார்டு போன்றவற்றிடமிருந்து 90 சதவீதம்  வரையிலான கடனுக்கான வட்டியை இரண்டு ஆண்டுகள் வரை ஒத்தி வைப்பது உட்பட 8 ஆண்டுகளுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கும். தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன சட்டத்தின்  8-வது ஷரத்துப்படி உள்ள நிறுவனங்கள் இதற்கு தகுதியானவை.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன் உத்தரவாத நிதியிலிருந்து பெறப்பட்ட 750 கோடி ரூபாய் கடனில் 25 விழுக்காடு வரை மத்திய அரசு கடன் உத்தரவாதம் அளிக்கும்.

இத்திட்டம், தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு தளமாக அமையும். அத்துடன் கால்நடைத் துறையில் செல்வத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2001053)

ANU/SMB/PLM/RS/RR



(Release ID: 2001146) Visitor Counter : 76