மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேர்வு குறித்த உரையாடல் பங்கேற்பாளர்களுடன் தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார்

Posted On: 29 JAN 2024 8:05PM by PIB Chennai

தேசிய பாலர் பவனில் இன்று நடைபெற்ற தேர்வு குறித்த உரையாடலின் 7-வது நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்  கலந்துரையாடினார். கல்வித்துறை இணைமைச்சர்கள் திருமதி அன்னபூர்ணா தேவி,  டாக்டர் சுபாஷ் சர்க்கார்; வெளியுறவு மற்றும் கல்வித்துறை இணைமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்; பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார்; ஏனைய பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின், குறிப்பாக பாரத மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்திய மாணவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். அறிவியல் மட்டுமின்றி, கலை மற்றும் சமூக அறிவியல் துறைகளில் மாணவர்களிடமிருந்து வரும் புதிய சிந்தனைகள் இளைய தலைமுறையினரிடையே கற்பனையின் சக்தியை வெளிப்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து அவரது வழிகாட்டுதலைப் பெற்றது மாணவர்களுக்கு எவ்வளவு உற்சாகமான, வாழ்க்கையை மாற்றும் அனுபவம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்ட குறிப்புகளிலிருந்து மற்ற மாணவர்கள் கற்றுக்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு குறித்த உரையாடலில் கலந்துகொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய சுமார் 50 கோடி மக்களைக் கொண்ட பெரிய சமூகத்திற்கு மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான இதுபோன்ற உதவிக்குறிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரையும் ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

கலா உத்சவ் வெற்றியாளர்கள், ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் மாணவர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் திரு பிரதானுடன் கலந்துரையாடினர். தேர்வு குறித்த உரையாடலில் பங்கேற்ற அனுபவங்களையும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, பிரதமரின் வார்த்தைகளிலிருந்து தாங்கள் எவ்வாறு மகத்தான உத்வேகத்தைப் பெற்றோம் என்பதை விவரித்தனர். மேலும் பலர், தாங்கள் தில்லியில் தங்கியதையும், புதிய நண்பர்களைப் பெற்றதையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் பிற மாநிலங்களின் கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொண்டதையும் விவரித்தனர். தேர்வுகளுடன் தொடர்புடைய மன அழுத்தத்தை சரி செய்வதற்கும், வாழ்க்கையை நோக்கிக் கொண்டாட்டமான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கும், 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற பெரிய இயக்கத்துடன் இணைந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒரு தனித்துவ முயற்சியே தேர்வு குறித்த உரையாடல் ஆகும். தற்போதைய 7 வது நிகழ்வு மைகவ் போர்ட்டலில் குறிப்பிடத்தக்க வகையில் 2.26 கோடி பதிவுகள் உள்ளன. இது நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே காணப்படும் பரவலான உற்சாகத்தை எடுத்துக்காட்டுகிறது.

***

(Release ID: 2000439)



(Release ID: 2000836) Visitor Counter : 51