பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலின்போது நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 JAN 2024 5:46PM by PIB Chennai

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்களே, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் அவர்களே, அதிகாரிகளே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, ஆசிரியர்களே, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த எனது இளம் நண்பர்களே!

நீங்கள் இங்கே நிகழ்த்திய கலாச்சார செயல்விளக்கம் பெருமித உணர்வைத் தூண்டுகிறது. ராணி லட்சுமிபாயின் வரலாற்று ஆளுமையையும், வரலாற்று நிகழ்வுகளையும் ஒரு சில நொடிகளில் உயிர்ப்பித்தீர்கள். இந்த நிகழ்வுகளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் அதை வழங்கிய விதம் உண்மையிலேயே அற்புதமானது. நீங்கள் குடியரசு தின அணிவகுப்பில் அங்கம் வகிக்கவிருக்கிறீர்கள்.  இந்த முறை இந்நிகழ்வு இரண்டு காரணங்களுக்காக இன்னும் சிறப்பானதாகிவிட்டது. இது 75 வது குடியரசு தினம் மற்றும் முதல் முறையாக, குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் 'மகளிர் சக்திக்கு' அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

எனதருமை நண்பர்களே,

நேற்று நாடு ஒரு முக்கியமான முடிவை எடுத்ததை நீங்கள் அனைவரும் கவனித்திருக்கலாம். மக்கள் நாயகர் திரு  கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கர்பூரி தாக்கூர் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும், அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. தீவிர வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர் தேசிய வாழ்க்கையில் பெரும் உச்சன்ங்களை அடைந்தார். இரண்டு முறை பீகார் முதல்வராகப் பதவி வகித்துள்ளார். இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் தனது எளிமையான இயல்பைக் கைவிடவில்லை. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் தொடர்ந்து பணியாற்றினார். அவர்  எப்போதும் தனது எளிமைக்குப் பெயர் பெற்றவர். அவரது முழு வாழ்க்கையும் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. இன்றும் அவர் நேர்மைக்கு உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறார்.

எனதருமை நண்பர்களே,

உங்கள் தலைமுறை பெரும்பாலும் 'ஜென் இசட்' என்று குறிப்பிடப்படுகிறது, ஆனால் நான் உங்களை 'அமிர்தத் தலைமுறை' என்று கருதுகிறேன். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற பாரதம் உறுதி பூண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கும் உங்கள் எதிர்காலத்திற்கும் முக்கியமானது. அமிர்தத் தலைமுறையின் ஒவ்வொரு கனவும் நனவாகும் என்பதே எங்கள் உறுதிப்பாடு. உங்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் உறுதிப்பாடு. அமிர்த காலத்தின் இந்தப் பயணத்தில், நீங்கள் ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: நீங்கள் எதைச் செய்தாலும், அது நாட்டுக்காகச் செய்யப்பட வேண்டும்.'தேசம் முதலில்' என்பது உங்கள் வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எதை மேற்கொண்டாலும், அது நாட்டிற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை முதலில் சிந்தியுங்கள். இரண்டாவதாக, உங்கள் வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு ஒருபோதும் மனம் தளராதீர்கள். நமது சந்திரயான் ஆரம்பத்தில் நிலவில் தரையிறங்க முடியவில்லை. இருப்பினும், முதல் முறையாக நிலவின் தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்தோம். எனவே, வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், நீங்கள் விடாமுயற்சியைக் கடைப்பிடிக்க வேண்டும். நமது நாடு மிகப்பெரியது, ஆனால் சிறிய முயற்சிகள் தான் அதை வெற்றிகரமாக ஆக்குகின்றன. ஒவ்வொரு சிறிய முயற்சியும் முக்கியமானது; ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது.

உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நான் உங்களை நம்புகிறேன். நன்றாகப் படியுங்கள், பொறுப்புள்ள குடிமகனாகுங்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தீயப் பழக்கங்களைத் தவிர்த்திடுங்கள். உங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் பெருமை கொள்ளுங்கள். உங்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அணிவகுப்பின் போது நீங்கள் வெற்றி பெற்று அனைவரின் இதயங்களையும் வென்றிடுங்கள்.

***

(Release ID: 1999196)

ANU/SMB/BR/RR



(Release ID: 2000744) Visitor Counter : 52