பிரதமர் அலுவலகம்
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்
"பல நூற்றாண்டுகளின் பொறுமை, எண்ணற்ற தியாகங்கள், துறவு, தவத்திற்குப் பிறகு, நமது ஸ்ரீ ராமர் இங்கே இருக்கிறார்"
"2024, ஜனவரி 22 என்பது நாட்காட்டியில் ஒரு தேதி மட்டுமல்ல, இது ஒரு புதிய 'காலச் சக்கரத்தின்’ தோற்றம்"
"நீதியின் கண்ணியத்தைப் பாதுகாத்ததற்காக இந்திய நீதித்துறைக்கு நான் நன்றி கூறுகிறேன். நீதியின் சின்னமான ராமர் கோயில் நியாயமான முறையில் கட்டப்பட்டது"
"எனது 11 நாள் விரதம், சடங்கில், ஸ்ரீ ராம் நடந்து சென்ற இடங்களை அடைய முயற்சித்தேன்"
"கடல் முதல் சரயு நதி வரை, ராமர் பெயரின் அதே பண்டிகை உணர்வு எல்லா இடங்களிலும் உள்ளது"
"ராமரின் கதை எல்லையற்றது, ராமாயணமும் முடிவற்றது. ராமரின் கொள்கைகள், மதிப்புகள், போதனைகள் எல்லா இடங்களிலும் ஒன்றாகும்”
"இது ராமர் வடிவில் உள்ள தேசிய உணர்வின் கோயில். ராமர் இந்தியாவின் நம்பிக்கை, அடித்தளம், யோசனை, சட்டம், உணர்வு, சிந்தனை, கௌரவம், மகிமை"
“காலச் சக்கரம் மாறிக் கொண்டிருப்பதைத் தூய மனதுடன் உணர்கிறேன். இந்த முக்கியமான பாதையின் சிற்பியாக நமது தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்டி
Posted On:
22 JAN 2024 4:07PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பல நூற்றாண்டுகளுக்குப் பின் இறுதியாக நமது ராமர் வந்துள்ளார் என்று கூறினார். "பல நூற்றாண்டுகளின் பொறுமை, எண்ணற்ற தியாகங்கள், துறவு, தவத்திற்குப் பின், நமது கடவுள் ராமர் இங்கே இருக்கிறார்" என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். கோயில் கருவறைக்குள் தெய்வீக உணர்வை அனுபவித்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், தமது உடல் ஆற்றலால் துடித்தது என்றும், பிராண பிரதிஷ்டையின் தருணத்திற்காக மனம் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது என்றும் பிரதமர் கூறினார். "நமது குழந்தை ராமர் இனி கூடாரத்தில் இருக்க மாட்டார். இந்த தெய்வீகக் கோயில் இனி அவரது இல்லமாக இருக்கும்" என்று கூறிய பிரதமர், இன்றைய நிகழ்வுகளை நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்களால் உணர முடியும் என்று கூறி நம்பிக்கையையும் பயபக்தியையும் வெளிப்படுத்தினார். "இந்தத் தருணம் இயற்கைக்கு அப்பாற்பட்டு, புனிதமானது, வளிமண்டலம், சுற்றுச்சூழல், ஆற்றல் ஆகியவை ராமரின் ஆசீர்வாதத்தை நம்மீது குவிக்கின்றன" என்று திரு மோடி கூறினார். ஜனவரி 22-ஆம் தேதி காலை சூரியன் புதிய ஒளியையும் தன்னுடன் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார். "2024, ஜனவரி 22, என்பது நாட்காட்டியில் ஒரு தேதி மட்டுமல்ல, இது ஒரு புதிய 'காலச் சக்கரத்தின்’ தோற்றம்" என்று கூறிய பிரதமர், ராம ஜன்மபூமி கோயிலின் 'பூமி பூஜை' செய்யப்பட்டதிலிருந்து ஒட்டுமொத்த நாட்டின் மகிழ்ச்சியான, பண்டிகை மனநிலை தொடர்ந்து அதிகரித்தது என்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம், குடிமக்களுக்கு ஒரு புதிய சக்தியை ஏற்படுத்தியது என்றும் கூறினார். "பல நூற்றாண்டுகால பொறுமையின் பாரம்பரியத்தை இன்று நாம் பெற்றுள்ளோம், இன்று நமக்கு ஸ்ரீ ராமர் கோவில் கிடைத்துள்ளது" என்று பிரதமர் கூறினார். அடிமை மனப்பான்மையின் தளைகளை உடைத்து, கடந்த கால அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெறும் நாடே வரலாற்றை எழுதும் நாடு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இன்றைய நாள் தற்போதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு விவாதிக்கப்படும் என்றும், ராமரின் ஆசீர்வாதத்தால்தான் இந்த முக்கியமான சந்தர்ப்பத்திற்கு நாம் ஒரு சாட்சியாக இருக்கிறோம் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். "நாட்கள், திசைகள், வானம், அனைத்தும் இன்று தெய்வீகத்தால் நிரம்பி வழிகின்றன" என்று கூறிய பிரதமர், இது ஒரு சாதாரண காலகட்டம் அல்ல, இது அழிக்க முடியாத ஒரு நினைவுப் பாதை என்றார்.
ஸ்ரீ ராமரின் ஒவ்வொரு பணியிலும் ஹனுமான் இருப்பது குறித்து பேசிய பிரதமர், ஸ்ரீ ஹனுமனுக்கும், ஹனுமன் கோயிலுக்கும் தலைவணங்கினார். லட்சுமணன், பரதன், சத்ருகன், ஜானகி மாதா, ஆகியோருக்கும் அவர் தலை வணங்கினார். இந்த நிகழ்வில் தெய்வீக சக்திகள் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார். இன்றைய நாளைக் காண, தாமதம் ஏற்பட்டதற்காக பிரபு ஸ்ரீ ராமரிடம் மன்னிப்பு கோரிய பிரதமர், இன்று அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதால், நிச்சயமாக ஸ்ரீ ராமர் நம்மை மன்னிப்பார் என்று கூறினார்.
திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் திரும்பியதை துறவி துளசிதாசர் குறிப்பிட்டதை எடுத்துரைத்த பிரதமர், அந்த நேரத்தில் அயோத்தி அடைந்த மகிழ்ச்சியை நினைவுகூர்ந்தார். "அப்போது ஸ்ரீ ராமருடனான பிரிவு 14 ஆண்டுகள் நீடித்தது. இன்னும் தாங்க முடியாததாக இருந்தது என்றும் இந்த யுகத்தில் அயோத்தியும், நாட்டு மக்களும் பல நூறு ஆண்டுகள் பிரிந்தனர்" என்றும் அவர் கூறினார். அரசியல் சாசனத்தின் மூலப் பிரதியில் ராமர் இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்றது என்று திரு மோடி தொடர்ந்து பேசுகையில் கூறினார். நீதியின் மாண்பை நிலைநிறுத்தியதற்காக இந்திய நீதித்துறைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். நீதியின் உருவகமாக, ஸ்ரீ ராமரின் கோயில் நியாயமான வழிகளில் கட்டப்பட்டது" என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிய கிராமங்கள் உட்பட நாடு முழுவதும் ஊர்வலங்கள் நடைபெறுவதாகவும், கோயில்களில் தூய்மை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இன்று நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வீடும் மாலையில் ராம ஜோதியை ஏற்றத் தயாராக உள்ளது" என்று திரு மோடி கூறினார். ராமர் சேது தொடங்கும் இடமான அரிச்சல் முனைக்கு நேற்று தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தத் தருணம் காலச் சக்கரத்தை மாற்றியமைத்தது என்றார். இன்றைய தருணம் காலத்தின் சுழற்சியை மாற்றி முன்னோக்கிச் செல்லக்கூடிய தருணமாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளது என்றார். தனது 11 நாள் விரதத்தின் போது, ராமர் காலடி வைத்த அனைத்து இடங்களையும் வணங்க முயன்றதாக திரு மோடி தெரிவித்தார். நாசிக்கில் உள்ள பஞ்சவடி தாம், கேரளாவில் உள்ள திரிபிரயார் ஆலயம், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லெபாக்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி ஆலயம், ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி ஆலயம், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், கடலில் இருந்து சரயு நதியை நோக்கி மேற்கொண்ட பயணத்திற்கு நன்றி தெரிவித்தார். "கடல் முதல் சரயு நதி வரை, ராமர் பெயரிலான அதே பண்டிகை உணர்வு எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். "இந்திய ஆன்மாவின் ஒவ்வொரு துகளுடனும் ராமர் இணைக்கப்பட்டுள்ளார். இந்தியர்களின் இதயத்தில் ராமர் வாழ்கிறார். ஒற்றுமை உணர்வை இந்தியாவில் ஒவ்வொருவரின் மனசாட்சியிலும் காண முடியும் என்றும், கூட்டுத்தன்மைக்கு இதைவிட சரியான எடுத்த்க்காட்டு இருக்க முடியாது” என்றும் அவர் மேலும் கூறினார்.
பல மொழிகளில் ஸ்ரீ ராமர் கதையைக் கேட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், பாரம்பரியத்தின் நினைவுகளிலும், பண்டிகைகளிலும் ராமர் இருக்கிறார் என்று கூறினார். "ஒவ்வொரு யுகத்திலும் மக்கள் ராமரைப் போல் வாழ்ந்திருக்கிறார்கள். ராமரை தங்கள் நடையிலும், சொல்லிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 'ராமரின் அருள்' ஜீவ ஓட்டம் போல ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ராமர் கதை எல்லையற்றது, ராமாயணமும் முடிவற்றது. ராமரின் கொள்கைகள், மதிப்புகள், போதனைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவை" என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய நாளை சாத்தியமாக்கிய மக்களின் தியாகத்திற்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். துறவிகள், கரசேவகர்கள், ராம பக்தர்கள் ஆகியோருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
"இன்றைய நிகழ்ச்சி, கொண்டாட்டத்திற்கான தருணம் மட்டுமல்ல, அதே நேரத்தில் இந்திய சமூகத்தின் முதிர்ச்சியை உணரும் தருணம் என்றும் நம்மைப் பொறுத்தவரை, இது வெற்றிக்கான சந்தர்ப்பம் மட்டுமல்ல, பணிவுக்கான சந்தர்ப்பமும் கூட என்று அவர் கூறினார். வரலாற்றின் நிகழ்வுகளை விளக்கிய பிரதமர், ஒரு நாடு அதன் வரலாற்றுடன் நடத்தும் போராட்டத்தின் விளைவு அரிதாகவே மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார். "இன்னும், வரலாற்றின் இந்த நிகழ்வால் நம் நாடு பெற்றுள்ள ஈர்ப்பும் உணர்திறனும், நமது எதிர்காலம், நமது கடந்த காலத்தை விட மிகவும் அழகாக இருக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார். அழிவைப் ஏற்படுத்துபவர்களை நினைவுகூர்ந்த பிரதமர், அத்தகைய மக்கள் நமது சமூக நெறிமுறைகளின் புனிதத்தன்மையை உணரவில்லை என்று கூறினார். "இந்தக் குழந்தை ராமர் கோயிலின் கட்டுமானம் அமைதி, பொறுமை, பரஸ்பர நல்லிணக்கம், இந்திய சமூகத்தின் ஒருங்கிணைப்பின் அடையாளமாகும் என்று அவர் தெரிவித்தார். இந்தக் கட்டுமானம் எந்த நெருப்பையும் உருவாக்கவில்லை, மாறாக ஆற்றலை உருவாக்குகிறது என்பதை நாம் காண்கிறோம் என்றும் பிரகாசமான எதிர்காலத்தின் பாதையில் முன்னேறிச் செல்ல சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ராமர் கோயில் உத்வேகத்தை அளித்துள்ளது" என்றும் அவர் கூறினார். "ராமர் நெருப்பு அல்ல, அவர் ஆற்றல், அவர் மோதல் அல்ல, தீர்வு, ராமர் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர், ராமர் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, அவர் எல்லையற்றவர் கூட" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் பிராண பிரதிஷ்டையுடன் தொடர்புடையது என்றும், ராமர் எங்கும் நிறைந்திருப்பதைக் காண முடியும் என்றும் பிரதமர் கூறினார். இதே போன்ற கொண்டாட்டங்களை பல நாடுகளில் காணலாம் என்றும், அயோத்தி விழா, ராமாயணத்தின் உலகளாவிய மரபுகளின் கொண்டாட்டமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். குழந்தை ராமரின் பெருமை 'வசுதைவ குடும்பகம்' என்ற சிந்தனையாகும் என்றும் தெரிவித்தார்.
இது ஸ்ரீ ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழா மட்டுமல்ல, ஸ்ரீ ராமரின் வடிவத்தில் வெளிப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிஷ்டை என்பதைப், பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். இது மனித மாண்புகள், மிக உயர்ந்த லட்சியங்களின் உருவகம் என்றும், இது ஒட்டுமொத்த உலகின், காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார். அனைவருக்குமான நலத்திட்டங்களுக்கான தீர்மானங்கள் இன்று ராமர் கோயிலாக வடிவம் பெற்றுள்ளது என்றும், இது வெறும் கோயில் மட்டுமல்ல, இந்தியாவின் தொலைநோக்கு, தத்துவம், திசை என்றும் பிரதமர் கூறினார். "இது ராமர் வடிவிலான தேசிய உணர்வின் கோயில். ராமர் இந்தியாவின் நம்பிக்கை, அடித்தளம், யோசனை, சட்டம், உணர்வு, சிந்தனை, கௌரவம், மகிமை என்று அவர் தெரிவித்தார். ராமர் ஒரு நீரோட்டம், ராமர் ஒரு விளைவு. ராமரின் கொள்கையும் உண்டு. ராமரின் நீதியும் உண்டு, ராமர் நித்தியமானவர், ராமர் தொடர்ச்சியானவர். ராமர் என்றால் வலிமை, உலகம், உலகளாவிய ஆன்மா என ராமர் எங்கும் நிறைந்தவர்" என்று பிரதமர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். பகவான் ராமர் பிரதிஷ்டையின் தாக்கத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உணர முடியும் என்று அவர் கூறினார். மகரிஷி வால்மீகியை மேற்கோள் காட்டிய பிரதமர், ராமர் பத்தாயிரம் ஆண்டுகள் ராஜ்யத்தை ஆட்சி செய்தார் என்று கூறினார். "திரேதா யுகத்தில் ராமர் வந்தபோது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ராமராஜ்யம் ஆட்சி செய்யப்பட்டது. ராமர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகை வழிநடத்தி வருகிறார்" என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
பிரம்மாண்டமான ராமர் கோயில் உணரப்பட்ட பின்னர் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து ஒவ்வொரு ராம பக்தரையும் பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். "இன்று, காலத்தின் சுழற்சி மாறிக்கொண்டிருப்பதை நான் தூய மனதுடன் உணர்கிறேன்” என்று அவர் கூறினார். இந்த முக்கியமான பாதையின் சிற்பியாக நமது தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்று கூறினார். தற்போதைய சகாப்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டியக்காட்டியதோடு, இது தான் நேரம், இதுவே சரியான நேரம் என்ற வரியை மீண்டும் குறிப்பிட்டார்.. "அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும், கோயிலில் இருந்து முன்னேறிச் செல்லும்போது, இப்போது நாட்டுமக்களாகிய நாம் அனைவரும் வலுவான, திறன்மிக்க, சிறப்பான, தெய்வீக இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம்" என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். இதற்கு, ராமரின் இலட்சியம் நாட்டின் மனசாட்சியில் இருக்க வேண்டியது முக்கியம் என்று அவர் கூறினார்.
தேவ் முதல் நாடு வரை, ராமர் முதல் நாடு வரை – தெய்வத்திலிருந்து நாடு வரை என்ற உணர்வை விரிவுபடுத்துமாறு நாட்டு மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். ஸ்ரீ ஹனுமனின் சேவை, பக்தி, அர்ப்பணிப்பு ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். "ஒவ்வொரு இந்தியரிடமும் உள்ள இந்த பக்தி, சேவை, அர்ப்பணிப்பு உணர்வுகள் ஒரு திறமையான, மகத்தான, தெய்வீக இந்தியாவின் அடிப்படையாக மாறும்" என்று அவர் கூறினார். ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் 'ராமர் வருவார்' என்ற மாதா ஷப்ரியின் நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உணர்வு மகத்தான, திறமையான, தெய்வீக இந்தியாவுக்கு அடிப்படையாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். நிஷாத்ராஜ் மீது ராமர் கொண்டிருந்த பாசத்தின் ஆழம், அசல் தன்மையைக் குறிப்பிடுவது அனைவரும் ஒன்றே என்பதையும், இந்த ஒற்றுமை, ஒருங்கிணைப்பு உணர்வு, திறமையான, மகத்தான, தெய்வீக இந்தியாவின் அடிப்படையாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று நாட்டில் விரக்திக்கு இடமில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். அணிலின் கதையை எடுத்துரைத்த பிரதமர், தங்களை சிறியவர்களாகவும், சாதாரணமானவர்களாகவும் கருதிக் கொள்பவர்கள் அணிலின் பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், தயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சிறியதோ, பெரியதோ ஒவ்வொரு முயற்சியும் அதன் வலிமையையும் பங்களிப்பையும் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "அனைவருக்குமான முயற்சி என்ற உணர்வு வலுவான, திறமையான, பிரமாண்டமான, தெய்வீக இந்தியாவின் அடிப்படையாக மாறும்” என்று அவர் கூறினார். “இது கடவுளிடமிருந்து நாட்டின் உணர்வும், ராமரிடமிருந்து நாட்டின் உணர்வும் விரிவடைவதாகும்" என்று பிரதமர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
அதீத அறிவும், அளப்பரிய சக்தியும் கொண்ட இலங்கையின் ஆட்சியாளர் ராவணனை எதிர்த்துப் போராடியபோது, தான் உடனடியாகத் தோற்கப் போவதை அறிந்திருந்த ஜடாயுவின் நேர்மையை சுட்டிக்காட்டிய பிரதமர், அத்தகைய கடமையின் உச்சக்கட்டமே திறமையான, தெய்வீக இந்தியாவின் அடிப்படை என்று கூறினார். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்பதாக உறுதியளித்த திரு மோடி, "ராமரின் பணி, தேசத்தின் பணி என்றும், காலத்தின் ஒவ்வொரு கணமும், உடலின் ஒவ்வொரு துகளும் ராமரின் அர்ப்பணிப்பை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் இலக்குடன் இணைக்கும்” என்று அவர் கூறினார்.
தன்னைத் தானே கடந்து செல்ல வேண்டும் என்ற தனது கருப்பொருள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, பகவான் ராமரை நாம் வணங்குவது என்பது 'நான்' முதல் 'நமக்கு' வரை ஒட்டுமொத்த படைப்புக்கானதாக இருக்க வேண்டும் என்று கூறினார். நமது முயற்சிகள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் அமிர்த காலம், அதிக இளையோரைக் கொண்ட மக்கள் தொகை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கான காரணிகளின் சரியான கலவை பற்றியும் குறிப்பிட்டார். இளைய தலைமுறையினர் தங்களது வலுவான பாரம்பரியத்தின் ஆதரவைப் பெற்று நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். "பாரம்பரியத்தின் தூய்மை, நவீனத்தின் எல்லையற்ற தன்மை ஆகிய இரண்டின் பாதையையும் பின்பற்றுவதன் மூலம் இந்தியா வளம் என்ற இலக்கை அடையும்" என்று பிரதமர் கூறினார்.
எதிர்காலம் வெற்றிகள், சாதனைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், பிரம்மாண்டமான ராமர் கோயில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். "இந்த பிரம்மாண்டமான ராமர் கோயில் வளர்ச்சியடைந்த பாரதத்தின் எழுச்சிக்கு சாட்சியாக மாறும்" என்று பிரதமர் கூறினார். கோயிலில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாக கூறிய பிரதமர், ஒரு இலக்கை நியாயப்படுத்தி, ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியிலிருந்து விளைந்தால் அதை அடைய முடியும் என்று தெரிவித்தார். "இது இந்தியாவின் நேரம், இந்தியா முன்னேறப் போகிறது. பல நூற்றாண்டுகள் காத்திருந்த பிறகு நாம் இங்கு வந்துள்ளோம். இந்த சகாப்தம், இந்த காலகட்டத்திற்காக நாம் அனைவரும் காத்திருந்தோம். இனி நாம் நிற்க மாட்டோம். வளர்ச்சியின் உச்சங்களை நாம் தொடர்ந்து அடைவோம்" என்று குழந்தை ராமரின் பாதங்களில் வணங்கி தமது வாழ்த்துக்களைப் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தலைவர் திரு மோகன் பகவத், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் திரு நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
வரலாற்றுச் சிறப்புமிக்க பிராணப் பிரதிஷ்டை விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக, மதப் பிரிவுகளின் பிரதிநிதிகள், பல்வேறு பழங்குடி சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றனர்.
பிரம்மாண்டமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயில் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி, உயரம் 161 அடி; மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளைக் கொண்டது. கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்களின் சிற்ப சித்தரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. தரை தளத்தில் உள்ள பிரதானக் கருவறையில், பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தைப் பருவ வடிவம் (ஸ்ரீ குழந்தை ராமரின் சிலை) வைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இதை சிங் துவார் வழியாக 32 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் காணலாம். இந்தக் கோவிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரதான மண்டபம், கீர்த்தனை மண்டபம் என மொத்தம் ஐந்து மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்கு அருகில் ஒரு வரலாற்றுக் கிணறு (சீதா கூப்) உள்ளது. இது பண்டைய சகாப்தத்திற்கு முந்தையது. கோயில் வளாகத்தின் தென்மேற்குப் பகுதியில், குபேர திலாவில், பகவான் சிவனின் பண்டைய கோயில் மீட்டெடுக்கப்பட்டு, ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் கான்கிரீட் (ஆர்.சி.சி) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது செயற்கைப் பாறையின் தோற்றத்தை அளிக்கிறது. கோயிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தின் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க, கிரானைட் கற்களால் 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு ஆலை, தீ தடுப்புக்கான நீர் வழங்கல் மற்றும் ஒரு சுயேச்சையான மின் நிலையம் உள்ளது. நாட்டின் பாரம்பரிய, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
---
(Release ID: 1998553)
ANU/SMB/IR/KPG/KRS
(Release ID: 1998650)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam