பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்

நாட்டின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் வருகையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

போயிங் வளாகம், பிரதமரின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கான மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக மாறும்: போயிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி ஸ்டெபானி போப்

"போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் புதுமைகளுக்கான மையமாக செயல்படுவதுடன் விமானப் போக்குவரத்தில் முன்னேற்றங்களைக் கொண்டு வரும்"

"பெங்களூரு நகரம் எதிர்பார்ப்புகளைப் புதுமைகள் மற்றும் சாதனைகளுடன் இணைக்கிறது"

"போயிங்-கின் இந்தப் புதிய மையம் கர்நாடகா, விமான போக்குவரத்து மையமாக வளர்ந்து வருவதன் தெளிவான அறிகுறியாகும்"

"இந்தியாவின் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் - இது உலகளாவிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்"

"சந்திரயான் விண்கலத்தின் வெற்றி இந்திய இளைஞர்களிடையே அறிவியல் மனப்பான்மையை விதைத்துள்ளது"

"வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும்

Posted On: 19 JAN 2024 4:30PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19-01-2024) திறந்து வைத்தார். ரூ. 1,600 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 43 ஏக்கர் பரப்பளவிலான இந்த வளாகம் அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். நாட்டில் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமான பெண் குழந்தைகள் நுழைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

சுகன்யா திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், அனுபவ மையத்தை பார்வையிட்டார்.

 

போயிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி ஸ்டெபானி போப் பேசுகையில், இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் பிரதமர் கவனம் செலுத்துவதற்கும், போயிங் சுகன்யா திட்டத்தில் அவரது முக்கிய பங்கிற்கும் பாராட்டு தெரிவித்தார். அரசின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், விண்வெளியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இந்த புதிய வளாகம் போயிங்கின் பொறியியல் பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும் என்று கூறிய திருமதி ஸ்டெபானி, இந்தியாவில் உள்ள திறன் மீதான நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுகிறது என்றார்.  புதிய வளாகத்தின் நோக்கம் குறித்தும் விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னணியில் கொண்டு செல்லும் ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான போயிங்கின் திட்டம் குறித்தும் அவர் விரிவாக விளக்கினார். புதிய போயிங் வளாகம் பிரதமரின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு மிக அதிநவீன எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக மாறும் என்று திருமதி ஸ்டெபானி கூறினார். சுகன்யா திட்டம் குறித்த பிரதமரின் கருத்துகளைப் பாராட்டிய அவர், இந்திய பெண்களுக்கு விமானப் போக்குவரத்தில் வாய்ப்புகளை உருவாக்க போயிங் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்த திட்டம் தடைகளை உடைத்து, விண்வெளி வாழ்க்கையைத் தொடர பெண்களை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பள்ளிகளில் ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் கணித ஆய்வகங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்து அவர் மேலும் விளக்கினார். போயிங்கின் இந்த ஒத்துழைப்பு இந்திய விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் என்றும் மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளுடன் நமது எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் இணைக்கும் நகரமாக பெங்களூரு திகழ்கிறது என்றும், இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலை உலகளாவிய தேவைகளுடன் இந்த நகரம் இணைக்கிறது என்றும் கூறினார். போயிங்கின் புதிய தொழில்நுட்ப வளாகம் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தப் போகிறது என்று கூறிய பிரதமர், புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த வளாகம் அமெரிக்காவிற்கு வெளியே அமைந்துள்ள போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகமாகும் என்று தெரிவித்தார். அதன் அளவும் செயல்பாடும் இந்தியாவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகின் விமானப் போக்குவரத்து சந்தையையும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

 

தொழில்நுட்பம், ஆராய்ச்சி. கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகளை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த மையம் நிரூபிக்கிறது என்று பிரதமர் கூறினார். இது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் – உலகத்துக்காக உற்பத்தி செய்வோம் ('மேக் இன் இந்தியா-மேக் ஃபார் தி வேர்ல்ட்') என்ற நமது தீர்மானத்தை வலுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த வளாகம் இந்தியாவின் திறமை மீதான உலகின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். வருங்காலத்தில் இந்த தொழிற்சாலையில் எதிர்கால விமானங்களை இந்தியா வடிவமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், போயிங்கின் புதிய தொழிற்சாலை, கர்நாடகா ஒரு புதிய விமானப் போக்குவரத்து மையமாக வளர்ந்து வருவதன் தெளிவான அறிகுறியாக அமைந்துள்ளது என்று கூறினார். விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள இந்திய இளைஞர்கள் தற்போது பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்ட பிரதமர், ஜி20 தலைமைப் பொறுப்பின் போது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்தார். விண்வெளித் துறையில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். போர் விமானத் துறையாக இருந்தாலும், சிவில் விமானப் போக்குவரத்தாக இருந்தாலும், பெண் விமானிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே முன்னணியில் உள்ளது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் என்றும், இது உலக சராசரியை விட 3 மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். போயிங் சுகன்யா திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்புக்கு இது ஊக்கமளிக்கும் என்றும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகள் விமானி ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க உதவும் என்றும் கூறினார். இத்திட்டத்தின் கீழ், பைலட் (விமானி) பணியில் இணைய அரசுப் பள்ளிகளில் தொழில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

சந்திரயானின் வரலாற்று வெற்றி இந்திய இளைஞர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்வியின் மையமாக இந்தியா திகழ்வதை சுட்டிக் காட்டிய பிரதமர், பெண்கள் இங்கு ஸ்டெம் பாடங்களை பெரிய அளவில் கற்பதாகக் குறிப்பிட்டார். உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உடான் போன்ற திட்டங்கள் இதில் பெரும் பங்காற்றியுள்ளன என்று அவர் கூறினார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், வாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக இந்திய விமான நிறுவனங்களின் புதிய தேவைகள், சர்வதேச விமானத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தியா தமது மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் முதன்மையாகக் கருதி செயல்படுவதால் இது போன்ற விஷயங்கள் நடந்துள்ளன என்று அவர் கூறினார்.

 

இந்தியாவின் செயல்திறனைத் தடுக்கும் வகையில் மோசமான போக்குவரத்து கட்டமைப்புகள் முன்பு இருந்ததாக அவர் கூறினார். முந்தைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, போக்குவரத்து உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்தியது குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். அரசின் நடவடிக்கைகளால் நல்ல போக்குவரத்து இணைப்பு உள்ள சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறி வருகிறது என்று அவர் கூறினார். தற்போது இந்தியாவில் சுமார் 150 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், இது 2014-ம் ஆண்டில் 70 ஆக மட்டுமே இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். விமான நிலையங்களின் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதிகரித்துள்ள விமான சரக்குப் போக்குவரத்துத் திறன், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவில் அதிகரித்துள்ள விமான நிலைய திறன் காரணமாக விமான சரக்கு போக்குவரத்து துறை அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இது இந்தியாவின் தொலைதூர பகுதிகளிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்கியுள்ளது என்று அவர் கூறினார். வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

 

விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி தொடர்வதையும், வேகமடைவதையும் உறுதி செய்வதற்காக கொள்கை அளவில் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். விமான எரிபொருள் தொடர்பான வரிகளைக் குறைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாகவும், விமான குத்தகையை எளிதாக்கவும் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். விமான குத்தகை மற்றும் நிதியுதவிக்கு இந்தியா கடல்கடந்து சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக குஜராத்தின் நிதித் தொழில் நுட்ப நகரமான கிப்ட் சிட்டியில் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம் நிறுவப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் பயனடையும் என்று அவர் மேலும் கூறினார்.

 

செங்கோட்டையில் இதுவே தருணம் – சரியான தருணம் என்று தாம் பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். அதன்படி, சர்வதேச நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை இந்தியாவின் விரைவான வளர்ச்சியுடன் இணைக்க இதுவே சரியான தருணம் என்று அவர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவது என்பது இப்போது 140 கோடி இந்தியர்களின் தீர்மானமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 25 கோடி இந்தியர்களை வறுமையிலிருந்து இந்த அரசு மீட்டுள்ளது என்று அவர் கூறினார். கோடிக்கணக்கான இந்தியர்கள் தற்போது ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி வருகின்றனர் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு வருவாய் பிரிவினரிடமும் மேல்நோக்கிய நகர்வு ஒரு போக்காக பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுற்றுலாத் துறையின் விரிவாக்கம் பற்றிப் பேசிய பிரதமர், உருவாக்கப்பட்டு வரும் அனைத்து புதிய வாய்ப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அதிகபட்ச பயன்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

இந்தியாவில் விமான உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு, பெரிய திறன் கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் நிலையான அரசு இருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான கொள்கை அணுகுமுறை ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் பயன் தரும் என்று பிரதமர் கூறினார். போயிங் நிறுவனத்தின் விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்காக இந்தியா நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு சித்தாராமையா, போயிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி ஸ்டெபானி போப் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

பெங்களூருவில் புதிய அதிநவீன போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார். 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட 43 ஏக்கர் வளாகம், அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். இந்தியாவில் போயிங்கின் புதிய வளாகம் இந்தியாவில் தனியார் மற்றும் அரசு கூட்டு செயல்பாட்டுக்கான களமாக மாறும். மேலும் உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான அடுத்த தலைமுறை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்க உதவும்.

 

நாட்டின் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமான பெண் குழந்தைகள் நுழைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இந்தியா முழுவதிலுமிருந்து பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித (STEM) துறைகளில் முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும். இளம் பெண்களுக்கு, இந்தத் திட்டம் ஸ்டெம் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வகையில் 150 இடங்களில் ஸ்டெம் ஆய்வகங்களை உருவாக்கும். இந்த திட்டம் விமானிகளாக பயிற்சி பெறும் பெண்களுக்கு உதவித்தொகையையும் வழங்கும்.

 

Release ID: 1997799

ANU/SM/PLM/KRS

 

 


(Release ID: 1997885) Visitor Counter : 222