பிரதமர் அலுவலகம்
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
25 DEC 2023 7:01PM by PIB Chennai
எனது அமைச்சரவை சகாக்கள் திரு அனுராக் தாக்கூர் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, எனது நீண்டகால நண்பரும் மஹாமனா சம்பூர்ண வங்கமே பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ராம் பகதூர் ராய் அவர்களே, மகாமனா மாளவியா மிஷனின் தலைவர் பிரபு நாராயண் ஸ்ரீவஸ்தவ் அவர்களே, இங்கு உள்ள அனைத்து புகழ்பெற்ற ஆளுமைகளே!
முதலில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! பாரதம் மற்றும் பாரதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் நாள் இன்று. இன்று மகாமனா மதன் மோகன் மாளவியா அவர்களின் பிறந்த நாள். இன்று அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள். இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், மகாமனா மாளவியா அவர்களை வணங்குகிறேன். அடல் பிகாரி வாஜ்பாய்க்கும் மரியாதை செலுத்துகிறேன். வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் நல்லாட்சி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நல்லாட்சி தினத்தில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே
பண்டிட் மதன்மோகன் மாளவியாவின் முழுமையான படைப்புகள் இந்த நன்னாளில் வெளியிடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது. மகாமானா என்று அழைக்கப்படும் மதன் மோகன் மாளவியாவின் சிந்தனைகள், லட்சியங்கள் மற்றும் அவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த முழு நூல் தொகுப்பு நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் ஊக்கப்படுத்த ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக செயல்படும். பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தையும் சமகால வரலாற்றையும் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாயிலைத் திறக்கும். இந்தப் படைப்புகள், குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்கள், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு, ஒரு அறிவுசார் பொக்கிஷமாகத் திகழும்.
நண்பர்களே,
இந்த நூலைக் கொண்டு வந்துள்ள குழுவை நான் அறிவேன். நீங்கள் அனைவரும் இந்த பணிக்காக பல ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளீர்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மாளவியாவின் ஆயிரக்கணக்கான கடிதங்களையும் ஆவணங்களையும் தேடுவது, அவற்றைச் சேகரிப்பது, ஒவ்வொரு அம்சத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது, பழைய ஆவணங்களைச் சேகரிப்பது போன்றவை சாகசங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. இந்த ஆழமான முயற்சியின் விளைவாக, மகாமனாவின் மகத்தான ஆளுமை இப்போது இந்த முழுமையான 11 தொகுதிகளின் தொகுப்பு வடிவத்தில் நம் முன் உள்ளது. இந்த மகத்தான முயற்சிக்காக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மகாமனா மாளவியா மிஷன், ராம் பகதூர் ராய் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே,
மகாமனா போன்ற ஆளுமைகள் நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கின்றனர். ஒவ்வொரு கணமும், பல தலைமுறைகளுக்கும் அவர்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றனர். பாரதம் மகாமனாவுக்கு பல தலைமுறைகளாகக் கடன்பட்டிருக்கிறது. கல்வியிலும் திறமையிலும் தன் காலத்தின் தலைசிறந்த அறிஞர்களுக்கு இணையாக அவர் திகழ்ந்தார். நவீன சிந்தனையும், பண்டைய மரபுகளும் கலந்தவர் அவர்! சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் ஆன்மீக ஆன்மாவை விழிப்படையச் செய்வதிலும் அவர் தீவிரமாகப் பங்களித்தார்! மகாமனாவின் இதுபோன்ற பல பங்களிப்புகள் இப்போது முழுமையான தொகுப்பின் 11 தொகுதிகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை இந்த அரசின் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு மகாமனா இன்னொரு காரணத்திற்காகவும் விசேஷமானவர். அவரைப் போலவே எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்பு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு தேர்தலில் நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது, முன்மொழிந்தவர் மகாமனாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது எனது பாக்கியம். மகாமனாவுக்கு காசி மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இன்று, காசி வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொட்டு, அதன் பாரம்பரியத்தின் பெருமையை மீட்டெடுக்கிறது.
என் குடும்ப உறுப்பினர்களே,
அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்ட நாடு, தமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொண்டு, சுதந்திரத்தின் 'அமிர்த காலத்தில்' தொடர்ந்து முன்னேறி வருகிறது. மாளவியா அவர்களின் எண்ணங்களின் சாராம்சத்தை நமது அரசின் பணிகளிலும் நீங்கள் உணர்வீர்கள். மாளவியா, நவீன உடலில் பண்டைய ஆன்மாவைப் பாதுகாக்கும் ஒரு தேசத்தின் பார்வையை நமக்கு வழங்கினார். ஆங்கிலேயரை எதிர்த்து கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தபோது, மாளவியா அதற்கு எதிராக நின்றார். அந்த யோசனையை அவர் எதிர்த்தார். கல்வியைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட தற்சார்பு கல்வி முறையை உருவாக்குவதை நோக்கி நாம் நகர வேண்டும் என்று அவர் கூறினார். இந்தப் பொறுப்பை அவரே ஏற்றது மட்டுமல்லாமல், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை மதிப்புமிக்க நிறுவனமாக நாட்டிற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்களில் படிக்கும் இளைஞர்களை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வர ஊக்குவித்தார். ஆங்கிலத்தில் சிறந்த அறிஞராக இருந்தபோதிலும், மகாமனா இந்திய மொழிகளை வலுவாக ஆதரித்தார். ஒரு காலத்தில் பாரசீகமும், ஆங்கிலமும் நாட்டின் நிர்வாகத்திலும் நீதிமன்றங்களிலும் ஆதிக்கம் செலுத்தின. இதற்கு எதிராகவும் மாளவியா குரல் கொடுத்தார். இவரது முயற்சியால், தேவநாகரி எழுத்துமுறையின் பயன்பாடு பிரபலமடைந்தது. மேலும் இந்திய மொழிகள் அங்கீகாரம் பெற்றன. இன்று, நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் மாளவியாவின் முயற்சிகளின் அறிகுறிகளைக் காணலாம். இந்திய மொழிகளில் உயர்கல்வியைத் தொடங்கியுள்ளோம். நீதிமன்றங்களில் இந்திய மொழிகளில் பணியாற்றுவதையும் அரசு ஊக்குவித்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வேலையைச் செய்ய நாடு 75 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்துள்ளது.
நண்பர்களே
எந்தவொரு நாட்டின் பலமும் அதன் நிறுவனங்களுக்கு அதிகாரமளிப்பதில் உள்ளது. மாளவியா தமது வாழ்நாளில் பல நிறுவனங்களை உருவாக்கினார். அங்கு தேசிய ஆளுமைகள் உருவாக்கப்பட்டனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைப் பற்றி உலகம் அறிந்திருந்தாலும், மகாமனா வேறு பல நிறுவனங்களையும் நிறுவினார். ஹரித்துவாரில் உள்ள ரிஷிகுல் பிரம்மச்சரிய ஆசிரமம், பிரயாக்ராஜில் உள்ள பாரதி பவன் நூலகம் அல்லது லாகூரில் உள்ள சனாதன் தர்ம மகாவித்யாலயா என பல்வேறு நிறுவனங்களை தேசத்தைக் கட்டியெழுப்ப மாளவியா அவர்கள் அர்ப்பணித்தார். அந்த சகாப்தத்தை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் மீண்டும் பாரதம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு நிறுவனத்தை உருவாக்குவதைக் காண்கிறோம்.
நண்பர்களே
மகாமனாவும், அடல் பிகாரி வாஜ்பாயும் ஒரே எண்ண நீரோட்டத்துடன் தொடர்புடையவர்கள். அடல் பிகாரி வாஜ்பாய் மகாமனாவைப் பற்றி இவ்வாறு கூறினார், "அரசு உதவியின்றி ஒரு நபர் எதையாவது செய்ய முற்படும்போது, மகாமனாவின் ஆளுமை, அவரது குணம், ஒரு கலங்கரை விளக்கத்தைப் போல ஒளிரும்." என்றார். மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் நாட்டின் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் கண்ட அந்த கனவுகளை நிறைவேற்றுவதில் இன்று நாடு ஒன்றுபட்டுள்ளது. நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம். நல்லாட்சி என்பது அதிகாரத்தை மையமாகக் கொண்டதாக இல்லாமல் சேவையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். தெளிவான நோக்கங்களுடன், கொள்கைகள் வகுக்கப்படும்போது, ஒவ்வொரு தகுதியான நபரும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தங்கள் முழு உரிமைகளையும் பெறுவார்கள். இந்த நல்லாட்சிக் கொள்கையே இன்று எமது அரசின் அடையாளமாக மாறியுள்ளது.
அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்பதை உறுதி செய்ய இந்த அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அதற்குப் பதிலாக, அரசு ஒவ்வொரு குடிமகனிடமும் சென்று அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. இதற்காக நாடு முழுவதும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு வரும் மோடியின் உத்தரவாத வாகனத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பயனாளிகள் பல திட்டங்களின் பலன்களை அந்த இடத்திலேயே பெற்று வருகின்றனர்.
நண்பர்களே
நல்லாட்சியின் மற்றொரு அம்சம் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை. நம் நாட்டில், ஊழல்கள் இல்லாமல் அரசுகள் செயல்பட முடியாது என்ற கருத்து இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கேள்விப்பட்டிருப்போம். எனினும் நமது அரசாங்கம் தனது நல்லாட்சியின் மூலமாக ஊழல் அச்சங்களை தகர்த்தெறிந்துள்ளது. இன்று, ஏழைகளின் நலனுக்காக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நேர்மையாக வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் மக்கள் நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் செலவிடப்பட வேண்டும். இதுதான் நல்லாட்சி.
நண்பர்களே,
அத்தகைய நேர்மையுடன் பணிகளைச் செய்து, அதற்கேற்ப கொள்கைகளை வகுக்கும்போது, அதன் விளைவு தெளிவாகத் தெரியும். இந்த நல்லாட்சியின் விளைவுதான், எங்கள் அரசின் 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களே
இன்று, அரசு திட்டங்களின் பயன்கள் மக்களை விரைவாக சென்றடைகின்றன. இது நல்லாட்சி இல்லை என்றால் வேறு என்ன?
இன்று இந்தியாவில் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை தேசத்தின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையில் பிரதிபலிக்கிறது. இந்த நம்பிக்கை சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான சக்தியாக மாறி வருகிறது.
நண்பர்களே
சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் மகாமனா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாயின் கொள்கைகளை அளவுகோலாகக் கருதி, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நோக்கி நாம் செயல்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உறுதியுடன் வெற்றிப் பாதைக்கு பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், மீண்டும் மகாமனாவுக்கு மரியாதை செலுத்தி, என் உரையை நிறைவு செய்கிறேன். மிக்க நன்றி!
****
ANU/PKV/PLM/DL
(Release ID: 1993784)
Visitor Counter : 98
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam