சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள்

Posted On: 22 DEC 2023 12:02PM by PIB Chennai

உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  

 

பருவநிலை மாற்றம்

பசுமை கடன்  திட்டம்

COP 28 மாநாட்டின் இடையே, பசுமை கடன் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.   இது அரசின் LIFE எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்குட்பட்ட முன்முயற்சி ஆகும். 

என்டிசி இலக்குகள் தொடர்பான இந்தியாவின் சாதனைகள் –

இந்தியாவின் முதலாவது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு ( NDC), 2015ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.  இந்தியாவின் இலக்குகள் வருமாறு :   

புகையின் தாக்கத்தை, 2030-ம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 33 முதல் 35 சதவீத அளவுக்கு குறைத்தல்;

2030-க்குள், புதைபடிமம் அல்லாத ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட மொத்த மின்சார உற்பத்தித் திறனை, 40 சதவீத அளவுக்கு எட்டுதல்  ஆகும்.

இந்த இரண்டு இலக்குகளும், திட்டமிட்ட காலத்திற்கு வெகு முன்பாகவே, 31 அக்டோபர் 2023-லேயே எட்டப்பட்டுவிட்டது.  

 

ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டின் 28-வது அமர்வு (COP28) 

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், நவம்பர் 30 முதல் 13 டிசம்பர் 2023 வரை நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டின் 28-வது அமர்வில், இந்தியாவிலிருந்து அமைச்சர்கள் அளவிலான தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.  

மாங்குரோவ் முன்முயற்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (5 ஜுன் 2023),  கடலோர வாழ்விடங்கள் & உறுதியான வருவாய்க்கான மாங்குரோவ் (அலையாத்திக் காடுகள்) திட்டத்தை(MISHTI), பிரதமர் தொடங்கி வைத்தார்.  

இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி, இந்தியாவின் கடற்கரைப் பகுதி நெடுகிலும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், “மாங்குரோவ் காடுகளை மீட்டெடுப்பது“  தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.   2023-24 நிதியாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  

 

நீலக்கொடி கடற்கரை  :  2014ல்,  நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரை ஏதும் இந்தியாவில் இல்லை.   தற்போதைய மத்திய அரசு மேற்கொண்ட  கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, 2020-ம் ஆண்டில்,  8 கடற்கரைகளுக்கு, நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்டது.   

 

பரிவேஷ்

சுற்றுச்சூழல் அனுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, விரைவுசக்தி இணையதளத்துடன் பரிவேஷ் 2.0 ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  

 

வன உயிரினம்

சிவிங்கிப் புலிகளை கண்டம்விட்டு கண்டம் இடமாற்றுதல் :  நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகளும்,  தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகளும் கொண்டுவரப்பட்டு,  முறையே செப்டம்பர் 2022 மற்றும் பிப்ரவரி 2023ல், மத்தியபிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டது.   1940-ம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 1950-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்திலேயே, நாட்டில் சிவிங்கிப் புலிகள் அரிதாகிவிட்டன.  

 

ப்ராஜக்ட் டைகர் எனப்படும் புலிகள் பாதுகாப்புத்  திட்டத்தின் 50ஆண்டுகள்:   2023ம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி,   உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75%   இந்தியாவில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.   2014ல்  2226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2023ல் 3,682ஆக அதிகரித்துள்ளது.  

உலக அளவில், புலிகள் உள்ளிட்ட பெரும்பூனை இனத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச பெரும் பூனை கூட்டணி, பிரதமரால் 9 ஏப்ரல் 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 

 

இந்தியாவின் வனப்பரப்பு பற்றிய அறிக்கை 2021-ன்படி,  இந்தியாவின் மொத்த வனப்பரப்பு மற்றும் மரங்கள் வளர்க்கப்படும் பரப்பளவு 80.9 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. இது, நாட்டின் புவியியல் பரப்பில் 24.62%  ஆகும்.  

 

தாவரங்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மூலிகைகள் குறித்த  ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கல் :     இந்திய தாவரவியல் ஆய்வு அமைப்பு(BSI) மற்றும் இந்திய விலங்கின ஆய்வு அமைப்பு (ZSI)  ஆகியன, இந்திய செல்லப் பிராணிகளின் 16500 மாதிரிகள்  மற்றும் 45000 உருவங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளன.   27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விலங்கினங்களை ஆவணப்படுத்தும் பணிகளை, இந்திய விலங்கின ஆய்வு அமைப்பு முடித்துள்ளது.  

காற்றின் தரம் / காற்று மாசு

காற்றின் தரம் மேம்பாடு :  தேசிய தூய்மையான காற்று திட்டத்தின்படி(NCAP)-131 நகரங்களில் காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.   அதில், இந்த நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.    தூய்மையான காற்று ஆய்வு இத்திட்டத்தின் கீழ்,  100 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

 

சுற்றுப் பொருளாதாரம்

சுற்றுப் பொருளாதார இயக்கம் :   சுற்றுப் பொருளாதாரத்தை மேம்படுத்த 11 கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், 10 வகையான  கழிவுகளை (லித்தியம் அயன் பேட்டரிகள்,  மின்னணு கழிவுகள், நச்சுவாயுக்கள் மற்றும் ஆபத்தான தொழிற்சாலை கழிவுகள்,  கழிவுப் பொருட்கள் (இரும்பு மற்றும் இரும்பு அல்லாதவை)  டயர் மற்றும் ரப்பர்  கழிவுகள்,  ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ள வாகனங்கள், ஜிப்சம் உப்பு,  பயன்படுத்தப்பட்ட எண்ணெய், நகராட்சி திடக் கழிவுகள் மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தித் தகடுகள்) அகற்றுவதற்கான செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான விதிமுறைகள்  27.4.2023ல் திருத்தப்பட்டன.  இதேபோன்று, பழைய டயர், பேட்டரி மற்றும் மின்னணு கழிவு மேலாண்மை விதிகளும் திருத்தப்பட்டுள்ளன.   பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கழிவு மேலாண்மைக்கு, அவற்றை வெளியேற்றுபவரே பொறுப்பேற்கும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

                                                                     ***********

PKV/MM/KRS(Release ID: 1990576) Visitor Counter : 122