தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரையில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது

Posted On: 08 DEC 2023 3:51PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்த வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை, நாடு முழுவதும் உள்ள மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும்  ஒரு பயணமாக உருவெடுத்துள்ளது.

2023 டிசம்பர் 7 வரை, 36,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் யாத்திரை நடைபெற்றுள்ளது.  இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 37 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.   இரண்டாவதாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12.07 லட்சம் பேரும்,  குஜராத் மாநிலத்தில் 11.58 லட்சம் பேரும் பங்கேற்றுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரிலும் இந்த யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் சபத யாத்திரையின் முதல் வாரத்தில் 5,00,000 மக்களும், கடந்த 10 நாட்களில், 77 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றனர்.  குறுகிய காலத்திற்குள் இந்த யாத்திரை 700-க்கும் அதிகமான நகர்ப்புறங்களை அடைந்துள்ளது.  மொத்தம் 79 லட்சம் பேர் 2047- ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு பாடுபட உறுதிமொழி எடுத்துள்ளனர்.

 

3600+-க்கும் அதிகமான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல், கல்வி மற்றும் தொடர்பு (ஐ.இ.சி) வேன்கள் மூலம் இந்த யாத்திரை பயணித்தது.

மகளிரை மையமாகக் கொண்ட திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இதன் மூலம்  ஏற்படுத்தப்படுகிறது. 46,000-க்கும் அதிகமான பயனாளிகள் பிரதமர் இலவச எரிவாயு (உஜ்வாலா) திட்டத்தில் இணைந்துள்ளனர். சுகாதார முகாம்கள் மூலம் 22 லட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரையின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கான ட்ரோன் செயல்விளக்கம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.  'ட்ரோன் மகளிர் திட்டம்' தொடங்கப்பட்டதன் மூலம், 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும், மேலும் இரண்டு பெண்களுக்கு தேவையான பயிற்சியும் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள் ட்ரோன் சேவைகளை ஒரு கட்டணத்திற்கு வாடகைக்கு விட வேண்டும், இது சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மற்றொரு வருவாயாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1983993

***

ANU/SMB/IR/AG/KV



(Release ID: 1984050) Visitor Counter : 90