தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தில்லியில் “நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்” யாத்திரை – அரசுத் திட்டப் பயனாளிகளுடன் தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா கலந்துரையாடினார்
Posted On:
06 DEC 2023 4:17PM by PIB Chennai
“நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையில் நகர்ப்புற இயக்கங்கள் தில்லி மற்றும் பிற நகரங்களில் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன. இது மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களைப் பயனாளிகள் முழுமையாக அடையும் நோக்கிலும் நடத்தப்படுகிறது. இதுவரை “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையின் வாகனங்கள் தில்லியில் 85 இடங்களுக்குச் சென்று பிரதமரின் ஸ்வநிதி, முத்ரா கடன்கள், ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் பரிவர்த்தனைப் புரட்சி, பிரதமரின் மின்சாரப் பேருந்துகள் சேவை, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
தெற்கு தில்லியின் சப்தர்ஜங் என்கிளேவில் உள்ள ஹுமாயுபூரில் “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா இன்று (06-12-2023) பங்கேற்றார். நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அவர், பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதே இந்த யாத்திரையின் நோக்கம் என்று செயலாளர் கூறினார். ஜனவரி இறுதிக்குள் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 3,600 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இந்த யாத்திரை சென்றடையும் என்று அவர் தெரிவித்தார்.
ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் கெளரவ தினத்தை முன்னிட்டு “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தில்லியில் இந்த யாத்திரையை துணைநிலை ஆளுநர் திரு வி.கே.சக்சேனா நவம்பர் 28 அன்று தொடங்கி வைத்தார்.
*******
ANU/SMB/BS/KRS
(Release ID: 1983263)
Visitor Counter : 106