பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சி.ஓ.பி-28 இன் உயர் மட்டப் பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய சிறப்பு உரையின் தமிழாக்கம்

Posted On: 01 DEC 2023 5:47PM by PIB Chennai

மாண்புமிகு பெருமக்களே,

தாய்மார்களே, அன்பர்களே,

140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று, முதலில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலநிலை நீதி, காலநிலை நிதி மற்றும் பசுமைக் கடன் போன்று நான் எழுப்பிய பிரச்சினைகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்தீர்கள்.

உலக நலனுக்காக, அனைவரின் நலன்களையும் பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கையை எங்கள் முயற்சிகள் அதிகரித்துள்ளன.

நண்பர்களே,

இன்று, சூழலியல் மற்றும் பொருளாதாரத்திற்கு இடையில் சரியான சமநிலையைக் கொண்டிருப்பதில் இந்தியா உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

உலக மக்கள் தொகையில் இந்தியா 17 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய கார்பன் உமிழ்வில் நமது பங்கு 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

என்.டி.சி இலக்குகளை அடையும் பாதையில் உள்ள உலகின் சில பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே உமிழ்வு தீவிரம் தொடர்பான இலக்குகளை நாங்கள் ஏற்கனவே அடைந்துவிட்டோம்.

புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை நாம் திட்டமிட்டதை விட 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளோம்.

இதோடு இந்தியா நிற்கவில்லை. 2030-ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் மாசு உமிழ்வை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதைபடிவமற்ற எரிபொருளின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

மேலும், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.

நண்பர்களே,

ஜி-20 மாநாட்டின் போது, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வோடு காலநிலை பிரச்சினைக்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தது.

நிலையான எதிர்காலத்திற்காக, பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை  நாங்கள் ஒன்றாக ஒப்புக்கொண்டோம்.

நிலையான வளர்ச்சிக்கான வாழ்க்கை முறைகளின் கொள்கைகளை நாங்கள் முடிவு செய்தோம்.

உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் முன்மொழிந்தோம்.

மாற்று எரிபொருட்களுக்கான ஹைட்ரஜன் துறையை இந்தியா ஊக்குவித்தது மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியையும் தொடங்கியது.

நண்பர்களே,

இந்தியா, கிளாஸ்கோவில் 'தீவு மாநிலங்களுக்கான' உள்கட்டமைப்பு நெகிழ்தன்மை வாய்ந்த முயற்சியைத் தொடங்கியது.

13 நாடுகளில் இது தொடர்பான திட்டங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

கிளாஸ்கோவில்தான் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற  லைஃப் இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தேன்.

இந்த அணுகுமுறையின் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2 பில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் ஆய்வு கூறுகிறது.

 

 

நண்பர்களே,

கடந்த நூற்றாண்டின் தவறுகளைத் திருத்திக் கொள்ள நமக்கு அதிக நேரம் இல்லை.

மனிதகுலத்தின் ஒரு சிறிய பிரிவினர் இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டியுள்ளனர்.

ஆனால் முழு மனிதகுலமும் அதன்  தாக்கத்தை எதிர்கொள்கிறது குறிப்பாக உலகளாவிய தெற்கில் வசிப்பவர்கள்  பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

'என் நலனுக்கு தான்  முன்னுரிமை’ என்ற இந்த சிந்தனை உலகை இருளை நோக்கி அழைத்துச் செல்லும்.

இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு அரசுத் தலைவரும் ஒரு பெரிய பொறுப்புடன் இங்கு வந்துள்ளனர்.

நாம் அனைவரும் நமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

உலகமே இன்று நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, இந்த பூமியின் எதிர்காலம் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் வெற்றி பெற வேண்டும்.

நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்:

ஒவ்வொரு நாடும் தான் நிர்ணயித்துக் கொள்ளும் காலநிலை இலக்குகளையும், அதன்  வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதியேற்க வேண்டும்.

நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்:

நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், ஒத்துழைப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம் என்று உறுதியேற்க வேண்டும்.

உலகளாவிய கார்பன் வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து வளரும் நாடுகளுக்கும் நியாயமான பங்கை நாம் வழங்க வேண்டும்.

நாம் மிகவும் சமநிலையுடன் இருக்க வேண்டும்:

தகவமைப்பு, தடுப்பு, காலநிலை நிதி, தொழில்நுட்பம், இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பராமரிக்கும் அதே நேரத்தில் முன்னோக்கிச் செல்ல நாம் உறுதியேற்க வேண்டும்.

நாம் லட்சியமாக இருக்க வேண்டும்:

எரிசக்தி மாற்றம் நியாயமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமமானதாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

நாம் புதுமையாக இருக்க வேண்டும்:

புதுமையான தொழில்நுட்பத்தை தொடர்ந்து உருவாக்க உறுதியேற்க வேண்டும்.

நமது சுயநலத்தைக்  கடந்து, தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு மாற்ற வேண்டும். தூய்மையான எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல்.

நண்பர்களே,

பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா கட்டமைப்பிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

எனவே, 2028-ஆம் ஆண்டில் இந்தியாவில் சி.ஓ.பி -33 உச்சிமாநாட்டை நடத்தவும் இன்று நான் இந்த மேடையில் முன்மொழிகிறேன்.

வரும் 12 நாட்களில் உலகளாவிய பங்கு வெளியீட்டின் மறுஆய்வு பாதுகாப்பான மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.

ஐக்கிய அரபு அமீரகத்தால் நடத்தப்படும் இந்த சி.ஓ.பி 28 உச்சிமாநாடு வெற்றியின் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த சிறப்பு கௌரவத்தை எனக்கு வழங்கிய எனது சகோதரர் திரு ஷேக் முகமது பின் சயீத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மேதகு திரு குட்டரெஸ் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு - இது பிரதமரின் பத்திரிகை அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பத்திரிகை அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டிருந்தது.

*******

ANU/AD/RB/DL


(Release ID: 1982058) Visitor Counter : 83