பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை பயனாளிகளுடன் நவம்பர் 30 ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
மகளிர் தலைமையிலான வளர்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தைப் பிரதமர் தொடங்கிவைக்கிறார்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும்
எய்ம்ஸ் தியோகரில் 10,000 வது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் அர்ப்பணிக்கிறார்
நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்
இந்த இரண்டு முயற்சிகளும் இந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைக் குறிக்கின்றன
Posted On:
29 NOV 2023 11:59AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்தத் திசையில் மற்றொரு நடவடிக்கையாக, பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படுவதன் மூலம் இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் வாழ்வாதார உதவிக்குப் பயன்படுத்த முடியும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும். ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்கும் பயன்படுத்தவும் பெண்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படும். இந்த முயற்சி வேளாண்மையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
சுகாதாரத்தைக் குறைந்த கட்டணத்துடனும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஆரோக்கியமான இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடித்தளமாகும். குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மக்கள் மருந்தக மையத்தை நிறுவியது இந்த திசையில் ஒரு முக்கிய முன்முயற்சியாகும். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000மாவது மக்கள் மருந்தக மையத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குதல், மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்துதல் ஆகிய இரண்டு முன்முயற்சிகளும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் தனது சுதந்திர தின உரையின் போது அறிவிக்கப்பட்டன. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை இந்தத் திட்டம் குறிக்கிறது .
***
ANU/SMB/IR/RR/KPG
(Release ID: 1980677)
Visitor Counter : 175
Read this release in:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam