பிரதமர் அலுவலகம்

காணொலி வாயிலான ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் (நவம்பர் 22, 2023) பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

Posted On: 22 NOV 2023 6:36PM by PIB Chennai

மாண்புமிகு பெருமக்களே,

வணக்கம்!

எனது அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, உங்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறோம்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி எனது நண்பரும், இந்தோனேசியாவின் அதிபருமான திரு ஜோகோ விடோடோ எனக்கு பாரம்பரிய முறைப்படி தலைமைப் பொறுப்பை என்னிடம் வழங்கிய தருணம் எனக்கு நினைவிருக்கிறது. ஜி20 அமைப்பை உள்ளடக்கிய,  செயல் சார்ந்த மற்றும் தீர்க்கமானதாக மாற்றுவோம் என்று நான் அப்போது கூறியிருந்தேன். கடந்த ஓராண்டில், அந்த கனவை நனவாக்கியுள்ளோம். நாம் அனைவரும் இணைந்து ஜி20-ஐ புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

அவநம்பிக்கை மற்றும் சவால்கள் நிறைந்த உலகிற்கு மத்தியில், பரஸ்பர நம்பிக்கைதான் நம்மை பிணைக்கிறது, ஒருவருடன் ஒருவர் இணைக்கிறது.

இந்த ஓராண்டில், “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தோம். மேலும், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளோம்.

தில்லியில் நாம் அனைவரும் ஒருமனதாக ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பிற்கு வரவேற்ற அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது.

உலகம் முழுமைக்கும் ஜி20 அளித்துள்ள ஒருங்கிணைப்புச் செய்தி முன்னெப்போதும் இல்லாதது.  தனது தலைமைத்துவத்தின் போது ஆப்பிரிக்காவிற்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, இந்தியாவிற்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.

ஜி20 இல் உலகளாவிய தெற்கின் குரல் ஒலிப்பதை இந்த ஓராண்டில், ஒட்டுமொத்த உலகமும் கேட்டுள்ளது.

கடந்த வாரம் நடந்த வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டில், புதுதில்லி ஜி20 உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுமார் 130 நாடுகள் முழு மனதுடன் பாராட்டியுள்ளன.

புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதை ஜி20 வலியுறுத்தியுள்ளது. ஜி20 மாநாடு பன்முகத்தன்மை மீதான நம்பிக்கையை புதுப்பித்துள்ளது.

பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் மற்றும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களுக்கு நாம் ஒன்றாக வழிகாட்டியுள்ளோம்.

இவற்றுடன், இந்திய தலைமைத்துவத்தின் போது, ஜி20, மக்கள் 20 என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் கோடிக்கணக்கான சாதாரண குடிமக்கள் ஜி20 அமைப்பில் இணைந்து அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடினர்.

மாண்புமிகு பெருமக்களே,

காணொலி வாயிலான இந்த உச்சிமாநாட்டை நான் முன்மொழிந்தபோது, இன்று உலகளாவிய நிலைமை என்னவாக இருக்கும் என்பது குறித்து எந்த முன்னறிவிப்பும் இல்லை. சமீபத்திய மாதங்கள் புதிய சவால்களைக் கொண்டு வந்துள்ளன. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பின்மை மற்றும் ஸ்திரமின்மை, நம் அனைவரையும் கவலையடையச் செய்கிறது. இன்று நாம் ஒன்றிணைவது, இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நாம் உணர்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும், அவற்றைத் தீர்ப்பதற்கு ஒன்றாக நிற்கிறோம்.

தீவிரவாதம் நம் அனைவருக்கும் ஏற்புடையதல்ல என்று நாம் நம்புகிறோம்.

பொதுமக்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் உயிரிழப்பது கண்டிக்கத்தக்கது.

இன்று பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்ட செய்தியை நாம் வரவேற்கிறோம், மேலும் அனைத்து பணயக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். மனிதாபிமான உதவிகள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதும், தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதும் அவசியம். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான மோதல், எந்த வகையான பிராந்திய வடிவத்தையும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம்.

மனித நலன் என்ற கண்ணோட்டத்தில், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராகவும், மனிதகுலத்திற்காகவும் நமது குரலை வலுப்படுத்த முடியும்.

இன்று, உலகம் மற்றும் மனிதகுலத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, இந்தியா தோளோடு தோள் சேர்ந்து நடக்க தயாராக உள்ளது.

நண்பர்களே,

21-ஆம் நூற்றாண்டு உலகம், முன்னோக்கிச் செல்லும் உலகளாவிய தெற்கின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன, அவற்றுக்கு அவை பொறுப்பல்ல.

உலகளாவிய பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை பெரியதாகவும், சிறந்ததாகவும், பயனுள்ளதாகவும், பிரதிநிதித்துவமாகவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது முக்கியம்.

தேவைப்படும் நாடுகளுக்கு சரியான நேரத்தில் மலிவான உதவியை உறுதி செய்ய வேண்டும். 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

நண்பர்களே,

எங்களது முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டம், இந்தியாவில் உள்ளூர் அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டத்தை ஆய்வு செய்யவும், இந்தியாவில் உள்ள 25 கோடி மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய மாற்றகரமான தாக்கத்தை காணவும் ஜி20 நாடுகளையும், உலகளாவிய தெற்கையும், நான் அழைக்கிறேன்.

நண்பர்களே,

புதுதில்லி உச்சிமாநாட்டில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சியத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது, அது நிறைவடைந்ததை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த களஞ்சியத்தில் 16 நாடுகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட டி.பி.ஐக்கள் இணைக்கப்பட்டுள்ளன. உலகளாவிய தெற்கு நாடுகளில் டி.பி.ஐக்களை செயல்படுத்துவதற்கு வசதியாக, ஒரு சமூக தாக்க நிதியத்தை உருவாக்க நான் முன்மொழிகிறேன். இந்தியாவின் சார்பாக, இந்த நிதிக்கு 25 மில்லியன் டாலர் ஆரம்ப பங்களிப்பையும் நான் அறிவிக்கிறேன், மேலும் இந்த முன்முயற்சியில் உங்கள் பங்கேற்பை எதிர்பார்க்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உலகெங்கிலும் ஏ.ஐ.யின் எதிர்மறையான பயன்பாடு குறித்த கவலை அதிகரித்து வருகிறது.

ஏ.ஐ.யின் உலகளாவிய ஒழுங்குமுறையில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

டீப்ஃபேக், சமூகத்திற்கு, தனிநபருக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதன் தீவிரத்தை புரிந்துகொண்டு நாம் முன்னேற வேண்டும்.

ஏ.ஐ. மக்களைச் சென்றடைய வேண்டும், அது சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

இந்த அணுகுமுறையுடன், உலகளாவிய ஏ.ஐ கூட்டாண்மை உச்சிமாநாடு அடுத்த மாதம் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

இதற்கும் நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

புதுதில்லி உச்சிமாநாட்டில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பசுமை கடன் குறித்து நான் பேசினேன்.

இந்தியாவில் நாங்கள் அதை ஆரம்பித்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். புதுதில்லியில் தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் மூலம், கார்பனைக் குறைப்பதோடு, மாற்று எரிபொருட்களின் வளர்ச்சியையும் ஊக்குவித்து வருகிறோம்.

ஜி20 லைஃப் இயக்கம், அதாவது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, புவி சார் அணுகுமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது; 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 3 மடங்கு அதிகரித்தல்; சுத்தமான ஹைட்ரஜனுக்கு அர்ப்பணிப்பு காட்டப்பட்டது; காலநிலை நிதியை பில்லியன்களில் இருந்து ட்ரில்லியன்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தது.

இன்னும் சில நாட்களில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள சி.ஓ.பி -28 இன் போது, இந்த முயற்சிகள் அனைத்திலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான புதிய பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இந்தியா தனது புதிய நாடாளுமன்ற மாளிகையின் முதல் அமர்வில் ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

எனது அறிக்கையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

பொறுப்புத்துறப்பு – இது பிரதமரின் ஊடக அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசல் அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டது.

***

ANU/PKV/BR/KV



(Release ID: 1979044) Visitor Counter : 86