தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கோவாவில் நடைபெறவுள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு பரிந்துரைக்கப்படும் 10 படங்களை திரைப்படச் சந்தை அறிவித்துள்ளது - ஆறு மொழிகளில் பல வகைக் கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்கள் தேர்வு

Posted On: 11 NOV 2023 1:36PM by PIB Chennai

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிலிம் பஜார் எனப்படும் திரைப்படச் சந்தை படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் பஜார் என்பது 2007 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் (என்.எஃப்.டி.சி) தொடங்கப்பட்டது. இது தெற்காசியாவின் உலகளாவிய திரைப்பட சந்தையாக பரிணமித்துள்ளது. கோவாவில் நடைபெறும் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) இது ஒவ்வொரு ஆண்டும் திரைப்படங்களைத் திரையிடுகிறது.

 

இந்த ஆண்டு, இதில் புனைவு, குறும்படம், ஆவணப்படம், திகில் படம் போன்ற வித, விதமான படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிக்கல்கள், ஆணாதிக்கம், தீவிர வறுமை, பருவநிலை நெருக்கடிகள், தொடர்பான கருப்பொருள்களைக் கொண்டுள்ளன.  ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மார்வாரி, கன்னடம், மாவோரி (நியூசிலாந்து மொழி) ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படங்கள் அமைந்துள்ளன.

 

 

தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள்:

புனைக்கதை குறும்படங்கள் மொத்தம் 4:

1.    அனு  (14 நிமிடங்கள்) புல்கித் அரோரா இயக்கிய படம் -  (ஆங்கிலம் / இந்தி / மாவோரி மொழிகளில் இப்படம் உள்ளது): விதவைப் பெண் ஒருவர் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது, அவர் சந்திக்கும் நெருக்கடிகளை இந்தப் படம் காட்டுகறது.

 

2.    ரொட்டி கூன் பனாசி - சந்தன் சிங் ஷெகாவத் இயக்கிய மார்வாரி மொழிப்படம்  (25 நிமிடங்கள்) : ராஜஸ்தானில் ஒரு கிராமப்புற வீட்டை மையமாகக் கொண்ட படம் இது. ராஜஸ்தானிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் உள்ள ஆணாதிக்க நடைமுறைகள் மற்றும் பெண்களின் அன்றாட போராட்டங்களை இந்த படம் வெளிப்படுத்துகிறது.

 

3.    “டியூஸ்டே உமென்ஸ்” என்ற இமாத் ஷா இயக்கிய ஆங்கிலப் படம் (29 நிமிடங்கள்): கதாநாயகனின் தொலைபேசி உரையாடலில் அடையாளம் தெரியாத பெண் பேசுவது மற்றும் அதனால் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக இது அமைந்துள்ளது. ஹருகி முரகாமியின் மூன்று சிறுகதைகளைத் தழுவி, இது எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய கதையான இது இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

 

4.    கித் என்ற மனீஷ் சைனி இயக்கிய இந்திப் படம் (25 நிமிடங்கள்):வறுமை நிலையில் உள்ள ஒரு முதியவரின் வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் படம் சித்தரிக்கிறது.

 

ஆவணக் குறும்படங்கள் 2:

5.    கோபி (14 நிமிடங்கள்) -  இயக்கியவர் நிஷாந்த் குருமூர்த்தி (கன்னடம்): கோபி சித்தி என்ற நடுத்தர வயது நபர் ஆப்பிரிக்காவில் இருந்து  புலம்பெயர்ந்த சித்தி சமூகத்தவராக தன்னை அடையாளப்படுத்துகிறார். வாய்மொழி கதைசொல்லுதலில் திறைமையான அவர், தனது கதைகளை சுயமாக வெளியிட விரும்புகிறார். அவரது சிக்கல்களை இந்தப் படம் எடுத்துரைக்கிறது.

 

6.    “அயர்ன் வுமன் ஆஃப் மணிப்பூர்” என்ற ஹவோபன் பபன் குமார் இயக்கிய படம் (மொழி: மணிப்பூரி/ஆங்கிலம் - 26 நிமிடங்கள்): விளையாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய இந்த நாட்டின் விளையாட்டு ஆளுமைகளுக்கு இந்த படம்  மரியாதை செலுத்துகிறது. குஞ்சராணி தேவி (பத்மஸ்ரீ விருது பெற்றவர், 2011), அனிதா சானு (தயான்சந்த் விருது பெற்றவர்), மீராபாய் சானு (பத்மஸ்ரீ விருது பெற்றவர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர்) ஆகியோரின் உத்வேகமூட்டும் கதைகளை இப்படம் எடுத்துரைக்கிறது.

 

நடுத்தர நீள ஆவணக் குறும்படங்கள் 2:

7.    “வேர் மை கிராண்ட் மதர் லிவ்ஸ்” என்ற தஸ்மியா அஃப்ரின் மௌ இயக்கிய வங்காள மொழிப் படம் (51 நிமிடங்கள்): திரைப்பட இயக்குநர் மோ தனது அன்புக்குரிய பாட்டியான நானுவின் வீட்டிற்குச் சென்று அவரது வாழ்க்கையைப் படமாக்குகிறார். 100 ஆண்டுகள் பழமையான வீட்டில், 27 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்ததால் நானு தனியாக வசித்து வருகிறார். கிராமப் புறங்களின் பசுமை, நீர் நிலைகள் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவை தற்காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்தப் படம் பேசுகிறது. 

 

8.    லடாக் 470 என்ற ஷிவம் சிங் ராஜ்புத் இயக்கிய படம் (மொழி: இந்தி / ஆங்கிலம் - 38 நிமிடங்கள்): ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த நீண்ட தூர ஓட்ட வீராங்கனை சூஃபியா-வின் வெற்றிகளை இந்தப் படம் பேசுகிறது. ஐந்து கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த அவர், கார்கில் போரில் பங்கேற்ற அனைத்து இந்திய ராணுவ வீரர்களையும் கவுரவிக்கும் வகையில் சியாச்சின் தள முகாமில் இருந்து கார்கில் போர் நினைவுச்சின்னம் வரை 11,000 அடி உயரத்தில் 470 கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் ஓடினார். அவரது பயணத்தை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது.

 

பெரிய படங்கள் 2:

9.    “எக்ஸைல்” என்ற சம்மான் ராய் இயக்கிய வங்காள மொழி திகில் திரைப்படம் - (82 நிமிடங்கள்): வங்காளத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த கௌரங்கா என்ற இளைஞரின் மனைவியின் மரணமும் பேய்கள் மற்றும் அமானுஷ்யத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 1960-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கதை நடப்பதாக அமைந்துள்ள இந்தப் படம், இழப்பு, மூடநம்பிக்கைகள், பாலியல் வக்கிரம், அமானுஷ்யம், பழமையான பாரம்பரிய நம்பிக்கை முறைகள் போன்ற கருப்பொருள்களைக் கொண்டுள்ளது.

 

10.   “ரிட்டர்ன் ஆஃப் தி ஜங்கிள்” என்ற வைபவ் குமரேஷ் இயக்கிய இந்தி மொழி அனிமேஷன் படம் - (105 நிமிடங்கள்): 9 வயது மிஹிரும் அவரது பள்ளி நண்பர்களும் தொடர்பான படம் ஆகும்.  நட்பு, இரக்கம் மற்றும் உறுதி ஆகியவற்றை இது விளக்குகிறது. ரிட்டர்ன் ஆஃப் தி ஜங்கிள் தற்கால இந்திய அனிமேஷன் படங்களில் ஒரு உத்வேகமூட்டும் குடும்ப பொழுதுபோக்குப் படமாகும்.

****  

PKV/PLM/DL



(Release ID: 1976365) Visitor Counter : 109