குடியரசுத் தலைவர் செயலகம்

உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 09 NOV 2023 2:49PM by PIB Chennai

டேராடூனில் இன்று (நவம்பர் 9, 2023) நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  புதிய அடையாளத்துடன், உத்தராகண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளிகள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

உத்தராகண்டின் இயல்பு நிலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமாக நடந்து வருகிறது என்றும், பேரிடர் மேலாண்மையிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்றும், உத்தராகண்டில் பல பரிமாண முன்னேற்றம் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார்.

டேராடூனில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான நிகழ்ச்சிகளின் போது, கடந்த வாரம் வரை 81,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த முயற்சிகள் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் சூழலியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதைக் கண்டு குடியரசு தலைவர் மகிழ்ச்சி அடைந்தார். மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தியை மதிப்பிடுவதற்கான மாநில அரசின் முன்முயற்சியை அவர் பாராட்டினார். இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலத்தில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, மாநில மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று குடியரசுத்தலைவர்  குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருந்து வருகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த மாநில இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பாரத அன்னையை பாதுகாப்பதில் பெருமிதம் கொள்கின்றனர். தேசிய பாதுகாப்பு குறித்த இந்த ஆர்வ உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்னுதாரணமானது என்று அவர் கூறினார். இந்திய ராணுவத்தின் இரண்டு ரெஜிமென்ட்களான குமாவுன் ரெஜிமென்ட் கர்வால் ரெஜிமென்ட் ஆகியவை உத்தராகண்ட் பகுதிகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இது உத்தரகாண்டின் வீரதீர பாரம்பரியத்தை சுட்டிக்காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

***

ANU/SMB/BS/RS/KV
 



(Release ID: 1975893) Visitor Counter : 89