பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் உள்ள துளசி பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
"அஷ்டத்யாயி என்பது இந்தியாவின் மொழியியல், இந்தியாவின் அறிவுத்திறன் மற்றும் நமது ஆராய்ச்சி கலாச்சாரத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நூல்"
"காலம் சமஸ்கிருதத்தை செம்மைப்படுத்தியது. அதை ஒருபோதும் மாசுபடுத்த முடியாது- அது நித்தியமானது"
"இந்தியாவில் நீங்கள் எந்த தேசிய பரிமாணத்தைப் பார்த்தாலும், சமஸ்கிருதத்தின் பங்களிப்பை நீங்கள் காண்பீர்கள்"
"சமஸ்கிருதம் பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, அது நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழியும் கூட"
"சித்ரகூட், ஆன்மீக ஞானத்தையும் இயற்கை அழகையும் கொண்டுள்ளது"
Posted On:
27 OCT 2023 4:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) சித்ரகூட்டில் உள்ள துளசி பீடத்திற்குச் சென்றார். அவர் காஞ்ச் மந்திரில் பூஜை மற்றும் வழிபாடு மேற்கொண்டார். துளசி பீடத்தின் ஜகத்குரு ரமானந்தாச்சாரியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்ற அவர் ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அங்கு அவர் 'அஷ்டத்யாயி பாஷ்யா', 'ராமபத்ராச்சாரியார் சரிதம்' மற்றும் 'பகவான் ஸ்ரீ கிருஷ்ணா கி ராஷ்டிரலீலா' ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஸ்ரீ ராமருக்கு பூஜை மற்றும் செய்ததற்கும், மகான்களால், குறிப்பாக ஜகத்குரு ராமபத்ராச்சாரியாவால் ஆசீர்வதிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்தார். 'அஷ்டத்யாயி பாஷ்யா', 'ராமபத்ராச்சாரியார் சரிதம்', 'பகவான் ஸ்ரீ கிருஷ்ணா கி ராஷ்டிரலீலா' ஆகிய மூன்று நூல்களை வெளியிடுவது இந்தியாவின் அறிவு மரபுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நூல்களை ஜகத்குருவின் ஆசீர்வாதத்தின் ஒரு வடிவமாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.
அஷ்டத்யாயி என்பது இந்தியாவின் மொழியியல், இந்தியாவின் அறிவுத்திறன் மற்றும் நமது ஆராய்ச்சி கலாச்சாரத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நூல் என்று பிரதமர் கூறினார். மொழியின் இலக்கணத்தையும், அறிவியலையும் தொகுத்து வழங்க அஷ்டத்யாயியின் மேன்மையை பிரதமர் எடுத்துரைத்தார். பல மொழிகள் வந்து போயின என்றாலும் சமஸ்கிருதம் என்றென்றும் நிலைத்திருக்கிறது என்று அவர் கூறினார். காலம் சமஸ்கிருதத்தை செம்மைப்படுத்தியது என்றும் அதை ஒருபோதும் மாசுபடுத்த முடியாது என்றும் அவர் கூறினார். சமஸ்கிருதத்தின் முதிர்ந்த இலக்கணம் இந்த நிலைத்தன்மையின் அடித்தளத்தில் உள்ளது என்று அவர் கூறினார். வெறும் 14 மகேஸ்வர சூத்திரங்களின் அடிப்படையில், இந்த மொழி சாஸ்திரத்தின் தாயாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் நீங்கள் எந்த தேசிய பரிமாணத்தைப் பார்த்தாலும், சமஸ்கிருதத்தின் பங்களிப்பைக் காண முடியும் என்று அவர் கூறினார்.
ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தன காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வேரறுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத மொழி அந்நியமாக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். சில தனி நபர்களால் முன்னெடுக்கப்பட்ட அடிமை மனப்பான்மையை அவர் சுட்டிக் காட்டினார், இதன் விளைவாக சமஸ்கிருதத்தின் மீது பகைமை உணர்வு ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். சமஸ்கிருதம் பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல என்றும், அது நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழியும் கூட என்றும் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, நாட்டில் இம்மொழியை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எடுத்துரைத்தார். அஷ்டத்யாயி பாஷ்யம் போன்ற வேதங்கள் நவீன காலத்தில் வெற்றிகரமான முயற்சிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
ஜகத்குரு ராமபத்ராச்சாரியாவுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது மகத்தான ஞானம் மற்றும் பங்களிப்புகளை குறிப்பிட்டார். இந்த ஞானம் ஒருபோதும் தனிப்பட்டது அல்ல என்றும் இந்த ஞானம் தேசிய பொக்கிஷம் என்றும் பிரதமர் கூறினார். சுவாமிஜி 2015-ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார். சுவாமிஜியின் தேசியவாத மற்றும் சமூக குணங்களை குறிப்பிட்ட பிரதமர், தூய்மை இந்தியா இயக்கத்தில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
தூய்மை, சுகாதாரம் மற்றும் கங்கையை தூய்மைப்படுத்துதல் போன்ற தேசிய குறிக்கோள்கள் இப்போது நிறைவேற்றப்படுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒவ்வொரு நபரின் கனவை நிறைவேற்றுவதிலும் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் பெரும் பங்கு வகித்துள்ளார் என்றும் பிரதமர் கூறினார். ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் பெரிய அளவில் ஆதரவு அளித்த ராமர் கோயில் பணிகள் தற்போது நிறைவடைய இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் பிரான் பிரதிஷ்டா விழாவில் பங்கேற்க தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பைப் பிரதமர் குறிப்பிட்டார்.
அமிர்த காலத்தில், தேசம் வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக எடுத்துச் செல்கிறது என்று அவர் கூறினார். சித்ரகூட் ஆன்மீக ஞானத்தையும் இயற்கை அழகையும் கொண்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கென்-பெட்வா இணைப்புத் திட்டம், புந்தேல்கண்ட் விரைவுச்சாலை மற்றும் பாதுகாப்பு வழித்தடம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், இது இந்தப் பிராந்தியத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். சித்ரகூட் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜகத்குரு ராமபத்ராச்சாரியாவுக்கு தலைவணங்குவதாக தமது உரையை நிறைவு செய்தார்.
துளசி பீடத்தின் ஜகத்குரு ரமானந்தாச்சாரியார், மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
துளசி பீடம் மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் உள்ள ஒரு முக்கியமான மத மற்றும் சமூக சேவை நிறுவனமாகும். இது 1987 ஆம் ஆண்டில் ஜகத்குரு ராமபத்ராச்சாரியாரால் நிறுவப்பட்டது. துளசி பீடம் இந்து சமய நூல்களை வெளியிடும் முன்னணி வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
-------------
(Release ID: 1972022)
ANU/PKV/PLM/RS/KRS/DL
(Release ID: 1972218)
Visitor Counter : 119
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam