பிரதமர் அலுவலகம்

அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்பு விழா மூலம் செப்டம்பர் 26 அன்று பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கவுள்ளார்


வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக வேலைவாய்ப்பு விழா உள்ளது

புதிதாக பணியில் சேர்பவர்கள் கர்மயோகி பிராரம்பம் என்ற ஆன்லைன் பாடப்பிரிவின் மூலம் பயிற்சி பெற உள்ளனர்

Posted On: 25 SEP 2023 2:55PM by PIB Chennai

புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 26 செப்டம்பர் 2023 அன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வழங்கவுள்ளார்.  இந்நிகழ்வில், நியமிக்கப்பட்டவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

 

நாடு முழுவதும் 46 இடங்களில் வேலைவாய்ப்பு விழா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தெரிவுசெய்யப்படும் புதிய நியமனதாரர்கள் மத்திய அரசின் தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் பணியில்  சேர்வார்கள்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படிதான் வேலைவாய்ப்பு விழா. இவ்விழா மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐகாட் கர்மயோகி போர்ட்டலில் உள்ள ஆன்லைன் தொகுதியான கர்மயோகி பிராரம்ப் மூலம் தாங்களாகவே பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.அங்கு 680 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகள் 'எங்கேயும் எந்த சாதனத்திலும்' என்ற கற்றல் வடிவில் கிடைக்கின்றன.

******

ANU/AD/SMB/KPG

 



(Release ID: 1960655) Visitor Counter : 122