பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம்"
"நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் நமது கடமைகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிக்கிறது"
"இந்தியா புதிய ஆற்றலால் நிறைந்துள்ளது. நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம்"
"புதிய விருப்பங்களுக்கு மத்தியில், புதிய சட்டங்களை உருவாக்குவதும், காலாவதியான சட்டங்களை அகற்றுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக உயர்ந்த பொறுப்பாகும்"
"அமிர்த காலத்தில் தற்சார்பு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்"
"ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களையும் மனதில் கொண்டு நாம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்"
"பெருந்திட்டங்களை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும். சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தும் காலம் மறைந்து விட்டது"
"ஜி 20-ன் போது நாம் உலகளாவிய தெற்கின் குரலாக, உலக நண்பனாக மாறியுள்ளோம்"
"தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்"
"அரசியல் நிர்ணய சபை தொடர்ந்து நம்மை வழிநடத்தும், அரசியல் ந
Posted On:
19 SEP 2023 1:12PM by PIB Chennai
இன்றைய சிறப்பு அமர்வின்போது நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துப் பிரதமர் உரையைத் தொடங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் இடம்பெறும் இன்றைய சந்தர்ப்பம் பற்றி அவர் குறிப்பிட்டார். "இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம்" என்று பிரதமர் கூறினார்.
நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் மைய மண்டபம் பற்றிப் பேசிய பிரதமர், அதன் உத்வேகமூட்டும் வரலாறு குறித்தும் பேசினார். தொடக்க ஆண்டுகளில் கட்டிடத்தின் இந்தப் பகுதி ஒரு வகையான நூலகமாகப் பயன்படுத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். இந்த இடத்தில்தான் அரசியல் சாசனம் உருவானது என்பதையும், சுதந்திரத்தின் போது அதிகார மாற்றம் நடந்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். 1952-ம் ஆண்டுக்குப் பிறகு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகள் மற்றும் அரசுத் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர். இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்கள் 86 முறை மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். கடந்த எழுபது ஆண்டுகளில் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் நான்காயிரம் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன என்று அவர் கூறினார். கூட்டுக் கூட்டத் தொடரின் மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்தும் பேசிய அவர், வரதட்சணை தடுப்புச் சட்டம், வங்கிப் பணியாளர் தேர்வாணைய மசோதா மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார் . முத்தலாக் தடைச் சட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்கள் பற்றியும் திரு மோடி எடுத்துரைத்தார்.
370 வது பிரிவை ரத்து செய்வதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு இப்போது ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்படுகிறது என்பதை மிகுந்த பெருமையுடன் அடிக்கோடிட்டுக் காட்டினார். "இன்று, ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி வருகிறது. அதன் மக்கள் வாய்ப்புகளை இனி தங்கள் கைகளில் இருந்து நழுவவிட விரும்பவில்லை" என்று திரு மோடி குறிப்பிட்டார்.
2023 சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் நிகழ்த்திய உரையை நினைவுகூர்ந்த பிரதமர், சரியான தருணம் இது என்றும், புதிய உணர்வுடன் இந்தியா மீண்டும் எழுச்சி பெறுவதை இது எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார். "பாரதம் ஆற்றல் நிறைந்தது" என்று குறிப்பிட்ட திரு. மோடி, புதுப்பிக்கப்பட்ட இந்த உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் இந்தியா பலன்களைப் பெறுவது உறுதி என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். "விரைவான முன்னேற்ற விகிதத்துடன் விரைவான பயன்களைப் பெற முடியும்", என்று அவர் மேலும் கூறினார். முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா முன்னேறியிருப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், முதல் மூன்று பொருளாதாரங்களுக்குள் நுழையும் என்று உலகமும் இந்தியாவும் நம்புவதாகக் கூறினார். இந்திய வங்கித் துறையின் வலிமையை அவர் எடுத்துக்காட்டினார். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, யுபிஐ மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் மீதான உலகின் ஆர்வத்தை அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றி உலகை வியக்க வைக்கும், ஈர்க்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் விஷயம் என்று அவர் கூறினார்.
ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ள இந்திய விருப்பங்களின் முக்கியத்துவத்தைப் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆயிரம் ஆண்டுகளாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட இந்தியா இப்போது காத்திருக்கத் தயாராக இல்லை, அது தனது விருப்பங்களுடன் முன்னேறவும், புதிய இலக்குகளை உருவாக்கவும் விரும்புகிறது என்று அவர் கூறினார். புதிய விருப்பங்களுக்கிடையே, புதிய சட்டங்களை உருவாக்குவதும், காலாவதியான சட்டங்களை அகற்றுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக உயர்ந்த பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள், நடைபெற்ற விவாதங்கள், பெறப்பட்ட செய்திகள் அனைத்தும் இந்திய விருப்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் நம்பிக்கையும் ஆகும் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக்காட்டினார். "நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு சீர்திருத்தத்திற்கும் இந்திய விருப்பங்களின் வேர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்று பிரதமர் வலியுறுத்தினார்.
சிறிய சட்டகத்தில் பெரிய ஓவியம் வரைய முடியுமா என்று பிரதமர் வினவினார். நமது சிந்தனையின் சட்டகத்தை விரிவுபடுத்தாமல், நமது கனவுகளின் மகத்தான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியாது என்று அவர் கூறினார். இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தைக் குறிப்பிட்ட பிரதமர், நமது சிந்தனை இந்த மகத்தான பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டால், அந்த மகத்தான இந்தியாவின் ஓவியத்தை நாம் வரைய முடியும் என்றார். "இந்தியா பெருந்திட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும். சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தும் காலம் மறைந்து விட்டது" என்று திரு மோடி கூறினார்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஆரம்ப அச்சத்தை மீறி, இந்தியாவின் தற்சார்பு மாதிரி பற்றி உலகம் பேசுகிறது என்று அவர் கூறினார். பாதுகாப்பு, உற்பத்தி, எரிசக்தி, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் தன்னிறைவு பெற யார் விரும்ப மாட்டார்கள் என்றும், இந்தத் தேடலில் கட்சி அரசியல் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
உற்பத்தித் துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், 'குறைகள் இல்லை தடைகள் இல்லை ' மாதிரியை எடுத்துரைத்தார். இந்தியத் தயாரிப்புகள் எந்தக் குறைபாடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும்; உற்பத்தி நடைமுறை சுற்றுச்சூழலில் பாதிப்பின்மையைக் கொண்டிருக்க வேண்டும். வேளாண்மை, வடிவமைப்பாளர், மென்பொருள்கள், கைவினைப் பொருட்கள் போன்ற இந்தியாவின் உற்பத்தித் துறையில் புதிய உலகளாவிய அளவுகோல்களை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னேறுவதை அவர் வலியுறுத்தினார். "நமது தயாரிப்பு, நமது கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் சிறந்ததாக மட்டுமல்லாமல், உலகின் சிறந்ததாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை ஒருவர் கொண்டிருக்க வேண்டும்."
புதிய கல்விக் கொள்கையின் வெளிப்படைத் தன்மையைத் தொட்டுக்காட்டிய பிரதமர், அது உலக அ ளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஜி 20 உச்சிமாநாட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புகைப்படம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நிறுவனம் 1500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் செயல்பட்டது என்பதை வெளிநாட்டு பிரமுகர்கள் உணர்வது நம்பமுடியாத விஷயம் என்றார். "இதிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும், நிகழ்காலத்தில் நமது இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று திரு மோடி மேலும் கூறினார்.
நாட்டின் இளைஞர்களால் அதிகரித்து வரும் விளையாட்டு வெற்றிகளைத் தொட்டுப் பேசிய பிரதமர், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விளையாட்டுக் கலாச்சாரம் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டார். "ஒவ்வொரு விளையாட்டு மேடையிலும் நமது மூவர்ணக் கொடி இருக்க வேண்டும் என்பது தேசத்தின் உறுதிமொழியாக இருக்க வேண்டும்" என்று திரு மோடி கூறினார். சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை சரிசெய்வதற்காக தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இளம் மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய இளைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருக்கும் சூழலை உருவாக்க விரும்புகிறோம். உலகளாவிய திறன் தேவைகளை வரையறை செய்த பின்னர், இந்தியா இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டை வளர்த்து வருகிறது என்று அவர் கூறினார். 150 நர்சிங் கல்லூரிகளைத் திறக்கும் அண்மைக்கால முயற்சியை அவர் குறிப்பிட்டார். இது, சுகாதார நிபுணர்களின் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய இந்திய இளைஞர்களைத் தயார்படுத்தும் என்று அவர் கூறினார்.
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், "முடிவெடுப்பதை தாமதப்படுத்த முடியாது" என்று கூறியதோடு, மக்கள் பிரதிநிதிகளை அரசியல் லாபங்கள் அல்லது இழப்புகளால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். நாட்டின் சூரிய மின்சக்தித் துறை குறித்துப் பேசிய திரு. மோடி, நாட்டின் எரிசக்தி நெருக்கடிகளிலிருந்து ஒரு உத்தரவாதத்தை இப்போது இது வழங்குகிறது என்றார். ஹைட்ரஜன் இயக்கம், செமிகண்டக்டர் இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றைத் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது என்றார். இந்தியத் தயாரிப்புகள் உலகளாவிய சந்தையை அடைந்து போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், செலவுகளைக் குறைக்கவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அணுகக்கூடியதாக இருக்கவும் நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது பற்றிக் குறிப்பிட்டார். அறிவு மற்றும் புத்தாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பான சட்டம் பற்றிக் குறிப்பிட்டார். சந்திரயான் வெற்றியால் உருவான வேகத்தையும் ஈர்ப்பையும் வீணாக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
"சமூக நீதியே நமது முதன்மை நிபந்தனை" என்று கூறிய பிரதமர், சமூக நீதி குறித்த விவாதம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஒரு விரிவான பார்வை தேவை என்றும் கூறினார். சமூக நீதி என்பது வசதியற்ற பிரிவினருக்குப் போக்குவரத்துத் தொடர்பு, சுத்தமான குடிநீர், மின்சாரம், மருத்துவ சிகிச்சை மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உள்ளடக்கியது என்று அவர் கூறினார். வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு சமூக நீதிக்கு எதிரானது என்று தெரிவித்த அவர், நாட்டின் கிழக்குப் பகுதியின் பின்தங்கிய நிலையைக் குறிப்பிட்டார். "நமது கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதன் மூலம், அங்கு, சமூக நீதியின் சக்தியை நாம் வழங்க வேண்டும்" என்று திரு. மோடி கூறினார். சமச்சீரான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இத்திட்டம் 500 வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
பனிப்போர் காலத்தில் இந்தியா நடுநிலை நாடாகக் கருதப்பட்டது, ஆனால் இன்று இந்தியா 'உலகின் நண்பன்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியா நட்புறவுக்காக மற்ற நாடுகளை அணுகுகிறது, அதே நேரத்தில் அவை இந்தியாவில் ஒரு நண்பரை எதிர்பார்க்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகிற்கு ஒரு நிலையான விநியோகத் தொடராக நாடு உருவெடுத்துள்ளதால், இதுபோன்ற வெளியுறவுக் கொள்கையின் பலனை இந்தியா அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். உலகளாவிய தெற்கின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு ஊடகமாக ஜி 20 உச்சிமாநாடு உள்ளது என்று கூறிய திரு மோடி, இந்த மகத்தான சாதனைக்காக எதிர்கால சந்ததியினர் மிகுந்த பெருமிதம் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். "ஜி 20 உச்சிமாநாட்டால் நடப்பட்ட விதைகள் உலகிற்கு நம்பிக்கையின் மிகப்பெரிய ஆலமரமாக மாறும்" என்று திரு மோடி மேலும் கூறினார். ஜி 20 மாநாட்டில் முறைப்படுத்தப்பட்ட உயிரி எரிபொருள் கூட்டணி பற்றிப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் தலைமையில் உலக அளவில் மிகப்பெரிய உயிரி எரிபொருள் இயக்கம் நடைபெற்று வருகிறது என்றார்.
தற்போதைய கட்டிடத்தின் பெருமையும், கண்ணியமும் எப்பாடுபட்டாவது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதை பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்ற நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது என்றும் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தக் கட்டிடத்திற்கு 'சம்விதான் சதன்' என்று பெயரிடப்படும் என்று அவர் கூறினார். "அரசியல் நிர்ணய சபை என்ற முறையில், பழைய கட்டிடம் தொடர்ந்து நம்மை வழிநடத்தும், மேலும் அரசியல் நிர்ணய சபையின் ஒரு பகுதியாக இருந்த பெரிய ஆளுமைகளைப் பற்றி நமக்கு நினைவூட்டும்" என்று பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.
***
ANU/SM/SMB/DL
(Release ID: 1958797)
Visitor Counter : 157
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam