பிரதமர் அலுவலகம்

யஷோபூமியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 17 SEP 2023 5:34PM by PIB Chennai

பாரத் மாதா கி - ஜெய்!

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இந்த அற்புதமான கட்டிடத்தில் கூடியுள்ள அன்பான சகோதர சகோதரிகளே, 70 க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இந்த திட்டத்தில் இணைந்த எனது சக குடிமக்களே, இதர சிறப்பு விருந்தினர்களே எனது குடும்ப உறுப்பினர்களே!

இன்று விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நமது பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விஸ்வகர்மா நண்பர்களுடன் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு, எனது விஸ்வகர்மா சகோதர சகோதரிகள் பலருடனும் உரையாடினேன். கீழே உள்ள கண்காட்சி மிகவும் அருமையாக உள்ளது, நான் வெளியேற விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால், அதை தவறாமல் பார்வையிடுங்கள். இது இன்னும் 2-3 நாட்களுக்கு தொடரும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே தில்லி மக்கள் அதைப் பார்வையிடுவதை உறுதி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

பகவான் விஸ்வகர்மாவின் ஆசீர்வாதத்துடன், இன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்கள் கைகள், கருவிகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி திறமையாக வேலை செய்யும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இத்திட்டம் ஒரு புதிய நம்பிக்கை ஒளியாக அமைகிறது.

என் குடும்ப உறுப்பினர்களே,

இந்த திட்டத்துடன், இன்று நாட்டிற்கு சர்வதேச கண்காட்சி மையம் - யஷோபூமியும் கிடைத்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் எனது தொழிலாளர் சகோதர சகோதரிகள், எனது விஸ்வகர்மா தோழர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பிரதிபலிக்கின்றன. இன்று, நான் நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு விஸ்வகர்மா தோழருக்கும் யஷோபூமியை அர்ப்பணிக்கிறேன். நமது விஸ்வகர்மா தோழர்களில் கணிசமானவர்கள் யஷோபூமியின் பயனாளிகளாக இருக்கப் போகிறார்கள். இன்று இந்த நிகழ்வில் காணொளி மூலம் எம்முடன் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான விஸ்வகர்மா தோழர்களுக்கு, இந்த செய்தியை நான் குறிப்பாக தெரிவிக்க விரும்புகிறேன். கிராமங்களில் நீங்கள் உருவாக்கும் கலைப் பொருட்கள், நீங்கள் பயிற்சி செய்யும் கலை, நீங்கள் ஈடுபடும் கைவினை, ஆகியவற்றை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இந்த துடிப்பான மையம்  மாறும். இது இந்தியாவின் உள்ளூர் தயாரிப்புகளை உலகளாவியதாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

நமது விஸ்வகர்மா சகோதர சகோதரிகளின் கண்ணியம், திறன் மற்றும் செழிப்பை மேம்படுத்த நமது அரசு இன்று ஒரு கூட்டாளியாக முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், விஸ்வகர்மா தோழர்கள் மேற்கொள்ளும் 18 வகையான பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த 18 வகையான வேலைகளில் ஈடுபடும் நபர்கள் இல்லாத கிராமமே இருக்காது. அவர்களில் மரத்தால் வேலை செய்யும் தச்சர்கள், மர பொம்மைகள் செய்யும் கைவினைஞர்கள், இரும்பினால் வேலை செய்யும் கொல்லர்கள், நகைகளை வடிவமைக்கும் பொற்கொல்லர்கள், களிமண்ணால் வேலை செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள், சிற்பிகள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், சிகையலங்கார தொழிலாளர்கள், துணி நெசவாளர்கள், மாலை தயாரிப்பாளர்கள், மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள், படகு கட்டுபவர்கள் மற்றும் பலர் அடங்குவர். இத்திட்டத்தின் கீழ் ரூ.13,000 கோடியை அரசு செலவிடும்.

நண்பர்களே,

மாறிவரும் இந்த காலகட்டத்தில், நமது விஸ்வகர்மா சகோதர சகோதரிகளுக்கு பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அவசியம். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் உங்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பயிற்சியின் போது கூட, நீங்கள் அரசிடமிருந்து தினசரி 500 ரூபாய் ஊக்கத்தொகையைப் பெறுவீர்கள் .நவீன கருவிகளுக்கான 15,000 ரூபாய் டூல்கிட் வவுச்சரையும் நீங்கள் பெறுவீர்கள். பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங் முதல் சந்தைப்படுத்துதல் வரை நீங்கள் உருவாக்கும் விஷயங்களுக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியை வழங்கும். பதிலுக்கு, நீங்கள் ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட விற்பனையகத்தில் இருந்து டூல்கிட்டை வாங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் பொறுத்துக் கொள்ளப்படாது. மேலும், இந்த கருவிகள் இந்தயாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

2047-ஆம் ஆண்டில் நாட்டை வளர்ந்த இந்தியாவாக உலகின் முன் உருவாக்குவோம் என்ற உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. நமது விஸ்வகர்மா தோழர்கள் 'மேக் இன் இந்தியா'வின் பெருமை, இந்த சர்வதேச மாநாட்டு மையம், இந்தப் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் ஊடகமாக மாறும். விஸ்வகர்மா தோழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய மையமான யஷோபூமி, இந்தியாவின் புகழின் அடையாளமாக மாறி, தில்லியின் பெருமையை மேலும் உயர்த்தட்டும். இந்த நல்வாழ்த்துகளுடன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். மிகவும் நன்றி.

வணக்கம்!

***

ANU/AP/BR/AG



(Release ID: 1958426) Visitor Counter : 104