பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 SEP 2023 12:49PM by PIB Chennai

 மாண்புமிகு பெருமக்களே,

நேற்று, ஒரு பூமி மற்றும் ஒரு குடும்பம் அமர்வுகளில் நாம் விரிவான விவாதங்களை நடத்தினோம். இன்று, ஜி20 மாநாடு ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற தொலைநோக்குப் பார்வை குறித்த நம்பிக்கையான முயற்சிகளுக்கான தளமாக மாறியுள்ளது என்பதில் நான் திருப்தியடைகிறேன்.

உலகளாவிய கிராமம் என்ற கருத்தாக்கத்தை கடந்து, உலகளாவிய குடும்பம், ஒரு யதார்த்தமாக மாறுவதைக் காணும் ஒரு எதிர்காலத்தை நாம் தற்போது விவாதித்து வருகிறோம். இது, நாடுகளின் எதிர்காலம் மட்டுமல்ல, இதயங்கள் ஒன்றோடொன்று  இணைந்திருக்கும் எதிர்காலமும் கூட.

நண்பர்களே,

மனிதகுல நலன் கருதி, சந்திரயான் திட்டத்தின் தரவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது குறித்து இந்தியா பேசியுள்ளது. இது, மனிதர்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், கடைசி மைல் விநியோகத்தை எளிதாக்குவதற்கும் இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. எங்களது தொலைதூர கிராமங்களில் கூட, சிறு வணிகர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் தலைமையின் கீழ் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான ஒரு வலுவான கட்டமைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று, "வளர்ச்சிக்கான தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஜி20 கொள்கைகளும்" ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

உலகளாவிய வளரும் நாடுகளின் வளர்ச்சிக்காக "திறன் மேம்பாட்டு கட்டமைப்பு முன்முயற்சிக்கான தரவு” திட்டத்தைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தலைமையின்போது ஸ்டார்ட்அப் 20 ஈடுபாட்டுக் குழு உருவாக்கப்பட்டதும் ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

நண்பர்களே,

இன்று, புதிய தலைமுறை தொழில்நுட்பங்களில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தையும் அளவையும் நாம் காண்கிறோம். செயற்கை நுண்ணறிவு என்பது நம் கண்முன்னே உள்ளது. 2019-ஆம் ஆண்டில், நாம் "செயற்கை நுண்ணறிவு கோட்பாடுகளை" ஏற்றுக்கொண்டோம். இன்று நாம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

பொறுப்பான, மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திற்கான ஒரு கட்டமைப்பை நாம் நிறுவ வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். இது தொடர்பாக இந்தியாவும் தனது ஆலோசனைகளை வழங்கும். சமூகப் பொருளாதார மேம்பாடு, உலகளாவிய தொழிலாளர் சக்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் அனைத்து நாடுகளும் செயற்கை நுண்ணறிவின் நன்மைகளைப் பெறுவதே நமது முயற்சியாக இருக்கும்.

நண்பர்களே,

இன்று, நமது உலகம் வேறு சில முக்கிய பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது, அவை நம் அனைத்து நாடுகளின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதிக்கின்றன. இணையதள பாதுகாப்பு மற்றும் கிரிப்டோ கரன்சியின் சவால்களை நாம் நன்கு அறிவோம். கிரிப்டோ கரன்சி,  ஒரு புதிய துறையாக உருவெடுத்துள்ளது. எனவே, இவற்றை ஒழுங்குபடுத்த உலகளாவிய தரநிலைகளை உருவாக்க வேண்டும்.

இந்த திசையில் நாம் விரைவில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அதேபோல், உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் இணையதள பாதுகாப்புக்கான கட்டமைப்பு அவசியம். இணையதள உலகில் இருந்து புதிய வழிமுறைகள் மற்றும் புதிய நிதி முறைகளை பயங்கரவாதம் சுரண்டுகிறது. இது ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக அமைகிறது.

ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பையும், ஒவ்வொரு நாட்டின் உணர்திறனையும் நாம் கவனித்துக் கொண்டால் மட்டுமே, ஒரே எதிர்காலம் என்ற உணர்வு வலுப்பெறும்.

நண்பர்களே,

ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகை அழைத்துச் செல்ல, உலகளாவிய அமைப்புகள் நிகழ்கால யதார்த்தங்களுக்கு ஏற்ப இருப்பது அவசியம். இன்று "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும்" இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐ.நா. நிறுவப்பட்டபோது, அன்றைய உலகம் இப்போது இருப்பதை விட முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அப்போது ஐ.நா.வில் 51 நிறுவன உறுப்பினர்கள் இருந்தனர். இன்று ஐ.நா.வில் இடம் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை சுமார் 200.

இருந்தபோதிலும், ஐக்கிய நாடு பாதுகாப்பு குழும நிரந்தர உறுப்பினர்கள் இன்னும் அப்படியே உள்ளனர். அன்று முதல் இன்று வரை உலகம் ஒவ்வொரு விதத்திலும் நிறைய மாறிவிட்டது. போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி என அனைத்து துறைகளும் மாற்றமடைந்துள்ளன. இந்த புதிய யதார்த்தங்கள் நமது புதிய உலகளாவிய கட்டமைப்பில் பிரதிபலிக்க வேண்டும்.

மாறிவரும் காலத்திற்கேற்பத் தகவமைத்துக் கொள்ளத் தவறும் தனிநபர்களும், அமைப்புகளும் தவிர்க்க முடியாமல் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கின்றன என்பது இயற்கை நியதி. கடந்த ஆண்டுகளில் பல பிராந்திய மன்றங்கள் உருவாக என்ன காரணம், அவை பயனுள்ளவை என்பதை நிரூபிக்க என்ன காரணம் என்பதை நாம் திறந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்.

நண்பர்களே,

ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியை நேற்று எடுத்துள்ளோம். இதேபோல், பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் ஆணையையும் நாம் விரிவுபடுத்த வேண்டும். இந்த திசையில் நமது முடிவுகள் உடனடியாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

நண்பர்களே,

விரைவான மாற்றங்கள் நிறைந்த  உலகில், மாற்றம் மட்டுமல்ல, நிலைத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையும் நமக்குத் தேவை. பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த செயல்திட்டம், ஊழலுக்கு எதிரான உயர்மட்ட கொள்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் எம்.டி.பி சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் தீர்மானங்களை நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்போம்.

மாண்புமிகு பெருமக்களே,

இப்போது உங்கள் எண்ணங்களைக் கேட்க விரும்புகிறேன்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்

***

ANU/AP/BR/AG


(Release ID: 1956285) Visitor Counter : 148