பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் சந்திப்பு

ஜி20 க்கு இந்தியா அழைத்த 9 விருந்தினர் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்

அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், இணைப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை அவர்கள் சாதகமாக மதிப்பிட்டனர்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தில் ஒத்துழைப்பு தொடர்பான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதை அவர்கள் வரவேற்றனர்

Posted On: 08 SEP 2023 9:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனா அவர்களை சந்தித்துப் பேசினார். 2023 செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹசீனா அதன் விருந்தினர் நாட்டின் பிரதிநிதியாக இந்தியா வந்துள்ளார்.

அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, வர்த்தகம் மற்றும் இணைப்பு, நீர்வளம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து  தலைவர்கள் விவாதித்தனர். பிராந்தியத்தில் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் பலதரப்பு நாடுகளோடு ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கும், இந்திய-வங்கதேச நட்புறவுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கும் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்திய ரூபாய் மதிப்பீட்டில் இருதரப்பு வர்த்தகத்தை செயல்படுத்துவதற்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர், மேலும் இந்த நடைமுறையைப் பயன்படுத்த இரு தரப்பிலும் உள்ள வணிக சமூகத்தை ஊக்குவித்தனர்.

பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடுகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) குறித்த பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை அவர்கள் எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது. 

மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டங்களை அமல்படுத்துவதில் திருப்தியை வெளிப்படுத்திய அவர்கள், பின்னர் பொருத்தமான தினத்தில் பின்வரும் திட்டங்களின் கூட்டுத் தொடக்கத்தை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது:

1.    அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு
2. மைத்திரி மின் உற்பத்தி நிலையத்தின் 2-வது பிரிவு
3. குல்னா-மோங்லா ரயில் இணைப்பு

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதை அவர்கள் வரவேற்றனர்:

•    இந்திய தேசிய கட்டணமுறைக் கழகம் மற்றும் வங்கதேச வங்கி ஆகியவற்றுக்கு இடையே டிஜிட்டல் கட்டணமுறை நடைமுறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

•    2023-2025 ஆம் ஆண்டிற்கான இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கலாச்சார பரிமாற்றத் திட்டத்தை (சி.இ.பி) புதுப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

•    இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் வங்கதேச வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். 


பிராந்திய நிலைமையைப் பொறுத்தவரை, மியான்மரில் உள்ள ராக்கைன் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது தொடர்பாக வங்கதேசம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு  பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்தில் வங்கதேசம் அறிவித்த இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தை இந்திய தரப்பு வரவேற்றது. தங்கள் பரந்த அளவிலான ஈடுபாட்டைத் தீவிரப்படுத்த தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்ற தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். 

அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு தலைவர்களும் ஆவலுடன் உள்ள நிலையில், அரசு மற்றும் இந்திய மக்களின் விருந்தோம்பலுக்காக பிரதமர் மோடிக்கு பிரதமர் ஹசீனா நன்றி தெரிவித்தார்.

******

SM/ANU/RB/DL


(Release ID: 1955743) Visitor Counter : 167