பிரதமர் அலுவலகம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய ஆசிரியர் விருது 2023 வெற்றியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 04 SEP 2023 9:25PM by PIB Chennai

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது இல்லம் அமைந்துள்ள 7, லோக் கல்யாண் சாலையில் தேசிய ஆசிரியர் விருது 2023-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். இதில், விருதுக்கு தேர்வுபெற்ற 75 பேர் பங்கேற்றனர்.

நாட்டின் இளம் மனங்களை வளர்ப்பதில் ஆசிரியர்களின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். நல்ல ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும், நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் அவர்கள் வகிக்கக்கூடிய  முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். அடித்தட்டு சாதனையாளர்களின் வெற்றி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊக்கமளிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

நமது உள்ளூர் பாரம்பரியம் மற்றும் வரலாறு குறித்து பெருமிதம்  அடைவது பற்றி பேசிய பிரதமர், மாணவர்கள் தங்கள் பிராந்தியத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டின் பன்முகத்தன்மையின் வலிமையை எடுத்துரைத்த அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சந்திரயான் -3 இன் சமீபத்திய வெற்றி குறித்து தெரிவித்த பிரதமர், 21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நூற்றாண்டு என்பதால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இளைஞர்களை திறமையுள்ளவர்களாக உருவாக்கி அவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

மிஷன் லைஃப் பற்றிப் பேசிய பிரதமர், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் கலாச்சாரத்திற்கு மாறாக மறுசுழற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார். பல ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் நடைபெறும் தூய்மை திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினர். மேலும், ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும் தங்கள் திறன்களை தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம் மேம்படுத்த பிரதமர் அறிவுறுத்தினார்.

தேசிய ஆசிரியர் விருதின் நோக்கம் நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், தங்கள் அர்ப்பணிப்பு மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன்  மட்டுமல்லாமல், தங்கள் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களை கௌரவிப்பதும் ஆகும். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் உள்பட இந்த ஆண்டு, இந்த விருதுக்கான எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இப்போது உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

***

 

ANU/AD/PKV/AG/GK



(Release ID: 1954819) Visitor Counter : 90