தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள 30 இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் கீமோதெரபி சேவைகளை திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்



சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒப்புதல்

Posted On: 31 AUG 2023 1:10PM by PIB Chennai

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று புதுதில்லியில் உள்ள இஎஸ்ஐசி தலைமையகத்தில் நடைபெற்ற தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் 191 வது கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 30 இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் கீமோதெரபி சிகிச்சை சேவைகளை தொடங்கி வைத்தார்.

 

அப்போது பேசிய அவர், இந்தியாவின் அமிர்த காலத்தில்  நமது சேவைத் திறன் மிக்க தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலன் குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், இந்த நடவடிக்கை ஒரு படியாகும் என்று கூறினார் . கீமோதெரபி சேவைகள் தொடங்குவதன் மூலம், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் சிறந்த புற்றுநோய் சிகிச்சையை எளிதாகப் பெற முடியும்.

 

இ.எஸ்.ஐ.சி.யின் காட்சி தகவல் பலகைகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையையும் மத்திய அமைச்சர் திறந்து வைத்தார். இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் மற்றும் படுக்கைவசதிகள், நடைபெற்று  வரும் கட்டுமானத் திட்டங்களின் தற்போதைய நிலை போன்றவற்றை சிறப்பாக கண்காணிப்பதை காட்சி தகவல் பலகைகள் உறுதி செய்யும்.

 

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் திறமையான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்வித் துறையில் தனது பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் முடிவு செய்துள்ளது என்று திரு யாதவ் கூறினார். தேவையை மதிப்பீடு செய்த பின்னர் புதிய இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நிறுவப்படும் என்று அவர் கூறினார். இதுவரை 8 மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவக் கல்லூரிகள், 2 செவிலியர் கல்லூரிகள் மற்றும் ஒரு பாராமெடிக்கல் கல்லூரி ஆகியவை இஎஸ்ஐசியால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவச் சேவைகள், நிர்வாகம், நிதி விவகாரங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சி நிரல் அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன.

 

இக்கூட்டத்தில் 15 புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், 78 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் அமைக்கவும், அசாம் மாநிலம் பெல்டோலாவில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

***

AD/ANU/IR/RS/KPG



(Release ID: 1953856) Visitor Counter : 99