பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியின் 104 வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 AUG 2023 11:45AM by PIB Chennai

எனதருமை குடும்பத்தாரே, வணக்கம்.  மனதின் குரலின் ஆகஸ்ட் மாதப் பகுதியில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நிறைவான வரவேற்பை அளிக்கிறேன்.  இப்படி முன்பு எப்போதாவது நடந்திருக்கிறதா என்று நினைவில் இல்லை, அதாவது மழைக்கால மாதங்களில் இருமுறை மனதின் குரல் நிகழ்ச்சி இடம் பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த முறை அப்படித்தான் நடக்க இருக்கிறது.  மழைக்காலம் அதாவது மஹாசிவனுடைய மாதம், உற்சவம் மற்றும் உல்லாசம் நிறைந்த காலம்.  சந்திரயானுடைய வெற்றியின் கொண்டாட்டம் இந்த உற்சவச் சூழலுக்கு பல பங்கு உல்லாசத்தைச் சேர்த்திருக்கிறது.  சந்திரயான் சந்திரனுக்குப் பயணித்து மூன்று நாட்களுக்கும் கூடுதலாக ஆகியிருக்கிறது.  இந்த வெற்றி எத்தனை பெரியது என்றால், இதைப்பற்றி நாம் எத்தனை விவாதித்தாலும், அது குறைவே.  நான் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே, என்னுடைய பழைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. …….

வானத்திலே தலைநிமிர்த்தி

கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு

ஒளியை வழங்கும் உறுதியோடு

சூரியன் இதோ உதித்திருக்கிறது.

திடமான உறுதியோடு

அனைத்திடர்களையும் தாண்டி

கரும் இருளை அழித்தொழிக்க

சூரியன் இதோ உதித்திருக்கிறது.

வானத்திலே தலைநிமிர்த்தி

கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு

ஒளியை வழங்கும் உறுதியோடு

சூரியன் இதோ உதித்திருக்கிறது.

 

 என்னுடைய அன்பான குடும்பத்தாரே, ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன.  மிஷன் சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது, வெல்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின்  அடையாளமாக ஆகி இருக்கிறது.

 

நண்பர்களே, இந்த மிஷனுடைய ஒரு பக்கம் என்னவென்பது பற்றி நான் விசேஷமாக விவாதிக்க விரும்புகிறேன்.  இந்த முறை நான் செங்கோட்டையிலே கூறியிருந்தேன், அதாவது பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சியை தேசிய இயல்பு என்ற வகையில் வலுவுடையதாக்க வேண்டும்.  பெண்கள் சக்தியின் வல்லமை இணையும் போது, அங்கே சாத்தியமில்லாதவை கூட சாத்தியமாகின்றன.  பாரதத்தின் மிஷன் சந்திரயான், பெண் சக்திக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டாக இருக்கின்றது.  இந்த மொத்த மிஷனிலும் பல பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நேரடியாக  இணைந்திருக்கிறார்கள்.  இவர்கள் தனித்தனி அமைப்புக்களின் திட்ட இயக்குநர், திட்ட மேலாளர் என பல முக்கியமான பொறுப்புக்களை நிர்வாகித்துள்ளார்கள்.  பாரதத்தின் பெண்கள், இப்போது எல்லையில்லாதது என்று புரிந்து கொள்ளப்படும் விண்ணுக்கே சவால் விடுக்கின்றார்கள்.  எந்த ஒரு நாட்டின் பெண்களும், இத்தனை தீவிர ஆர்வம் உடையோராக இருந்தால், அந்த தேசத்தின் வளர்ச்சியை யாரால் தடை செய்ய முடியும்!!

 

நண்பர்களே, நாம் இத்தனை பெரிய பயணத்தை ஏன் மேற்கொள்ள முடிந்தது என்றால், நமது கனவுயரியது, நமது முயற்சியும் பெரியது.  சந்திரயான் மூன்றின் வெற்றியில் நமது விஞ்ஞானிகளோடு கூடவே, பிற துறைகளின் முக்கிய பங்களிப்பும் பெரிய அளவில் இருக்கிறது.  அனைத்து பாகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்ய, நாட்டுமக்கள் பங்களிப்பு அளித்திருக்கிறார்கள்.  அனைவரின் முயற்சிகளும் இருக்கும் போது, வெற்றியும் கிடைத்திருக்கிறது.  இந்த சந்திரயான் 3இன் மிகப்பெரிய வெற்றியே இது தான்.  இனிவருங்காலத்திலும் கூட, நமது விண்வெளித்துறை, அனைவரின் முயற்சியின் வாயிலாக, இப்படி கணக்கற்ற வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்று நான் விழைகிறேன். 

 

என் குடும்பத்து உறுப்பினர்களே! செப்டம்பர் மாதம், பாரதத்தின் திறமைக்கு சாட்சியாக இருக்கிறது.  அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 தலைவர்கள் மாநாட்டிற்காக பாரதம் முழுத்தயார் நிலையில் இருக்கிறது.  இந்த ஏற்பாட்டில் பங்கெடுக்க 40 நாடுகளின் தலைவர்களும், பல உலக நிறுவனங்களும் தலைநகர் தில்லிக்கு வருகிறார்கள்.  தனது தலைமைத்துவத்தின் வாயிலாக பாரதம் ஜி20யை, மேலும் அதிக உள்ளடக்கிய அமைப்பாக ஆக்கியிருக்கிறது.  பாரதத்தின் அழைப்பின் பேரில், ஆப்பிரிக்கக் கூட்டமைப்பும் கூட ஜி20யோடு இணைந்து இருக்கும் நிலையில், ஆப்பிரிக்க மக்களின் குரல், உலகின் இந்த முக்கியமான மேடை வரை எட்டியிருக்கிறது.  நண்பர்களே, கடந்த ஆண்டு, பாலியில் பாரதம் ஜி20யின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, இதுவரை இத்தனை நடந்திருக்கிறது என்பது நம்மனைவருக்கும் பெருமையளிக்கிறது.  தில்லியில் மட்டுமே பெரியபெரிய நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற பாரம்பரியத்திலிருந்து விலகி, நாங்கள் இதை தேசத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு சென்றோம்.  தேசத்தின் 60 நகரங்களில் இதோடு இணைந்த கிட்டத்தட்ட 200 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஜி20 பிரதிநிதிகள் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் மிகவும் பிரியத்தோடு அவர்களுக்கு வரவேற்பு நல்கப்பட்டது.  இந்தப் பிரதிநிதிகள் நமது தேசத்தின் பன்முகத்தன்மையைக் கண்டு, நமது துடிப்பு நிறைந்த ஜனநாயகத்தைப் பார்த்து, மிகவும் நல்ல உணர்வை அனுபவித்தார்கள்.  பாரதத்தில் எத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். 

 

நண்பர்களே, ஜி20யின் நமது தலைமைத்துவம், மக்களின் தலைமைத்துவம், இதில் மக்களின் பங்களிப்பு உணர்வு மிக முதன்மையானது.  ஜி20யின் 11 ஈடுபாட்டுக் குழுக்களில் கல்வியாளர்கள், குடிமை சமூகத்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தோடு இணைந்தவர்கள் முக்கியமான பங்களிப்பு அளித்தார்கள்.  இதனை முன்னிட்டு நாடெங்கிலும் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளோடு, ஏதோ ஒரு வகையில் ஒண்ணரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணைந்திருக்கிறார்கள்.  மக்களின் பங்களிப்பு தொடர்பான நமது இந்த முயற்சியில் ஒன்றல்ல, இரண்டு உலக சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.  வாராணசியில் நடைபெற்ற ஜி20 வினாடிவினா போட்டியில் 800 பள்ளிகளிலிருந்து ஒண்ணே கால் இலட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு அதனை உலகச் சாதனையாக்கி இருக்கிறார்கள்.  அதே வேளையில், லம்பானி கைவினைஞர்களும் கூட அற்புதம் ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.  450 கைவினைஞர்கள், சுமார் 1800 தனித்துவம் வாய்ந்த அலங்காரங்களின் ஆச்சரியமான தொகுப்பை உருவாக்கி, தங்களுடைய திறத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  ஜி20க்கு வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் நமது தேசத்தின் கலைத்துறையின் பன்முகத்தன்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.  இதே போன்றதொரு அற்புதமான நிகழ்ச்சிக்கு சூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அங்கே நடைபெற்ற புடவை உடுத்திய பெண்களின் நீண்டதூர நடைப்பயணத்தில்  15 மாநிலங்களைச் சேர்ந்த 15,000 பெண்கள் பங்கெடுத்தார்கள்.   இந்த நிகழ்ச்சி காரணமாக, சூரத்தின் ஜவுளித் தொழிலுக்கு ஊக்கம் கிடைத்த அதே நேரத்தில், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற கருத்திற்கும் வலு கிடைத்தது, உள்ளூர் பொருட்கள், உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படும் வழியும் ஏற்பட்டிருக்கிறது.  ஸ்ரீநகரில் ஜி20யின் கூட்டத்திற்குப் பிறகு கஷ்மீரிலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது.  நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்வதெல்லாம், வாருங்கள், ஜி20 சம்மேளனத்தை வெற்றி பெறச் செய்வோம், தேசத்தின் பெருமையை நிலைநிறுத்துவோம். 

    

என் குடும்பத்தாரே, மனதின் குரல் பகுதிகளில் நாம் நமது இளைய தலைமுறையினரின் திறமைகளைப் பற்றி விவாதிக்க சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம்.  இன்று, விளையாட்டுத் துறை என்பது, நமது இளைய விளையாட்டு வீரர்கள் புதியபுதிய வெற்றிகளைத் தொடர்ந்து ஈட்டி வரும் ஒன்றாகும்.  நான் இன்றைய மனதின் குரலில் பேசப் போகும் ஒரு போட்டியிலே, நமது விளையாட்டு வீரர்கள் தேசத்தின் கொடிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.  சில நாட்கள் முன்பாக சீனத்தில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்கள் நடந்தன.  இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்த முறை பாரதம் இதுவரை நிகழ்த்தியிராத சாதனைச் செயல்பாட்டினைப் புரிந்திருக்கிறது.  நமது விளையாட்டு வீரர்கள் மொத்தம் 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், இதிலே 11 தங்கப் பதக்கங்கள்.  1959 முதல் இன்று வரை எத்தனை உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றனவோ, அவற்றில் பெற்ற அனைத்துப் பதக்கங்களைக் கூட்டினாலும் கூட, மொத்தம் 18 தான் வருகிறது.  இத்தனை தசாப்தங்களில் வெறும் 18 மட்டுமே; ஆனால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள், 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.  அந்த வகையிலே, உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இளைய வீரர்கள், மாணவர்கள் சிலர் இப்போது தொலைபேசி வாயிலாக என்னோடு இணைந்திருக்கிறார்கள்.  நான் முதன்மையாக இவர்களைப் பற்றி உங்களிடம் கூறி விடுகிறேன்.   யுபியில் வசிக்கும் பிரகதி, வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்.  அசாம் மாநிலத்தில் வசிக்கும் அம்லான், தடகளப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்.  யுபியில் வசிக்கும் பிரியங்கா ரேஸ் வாக், அதாவது நடைப்பந்தயப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்.  மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த அபிதன்யா துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். 

 

-     எனக்குப் பிரியமான இளைய வீரர்களே, வணக்கம்.

எல்லோரும் - வணக்கம் சார்.

-     உங்களோட பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் முதன்மையா பாரதநாட்டு பல்கலைக்கழகங்கள்லேர்ந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணியின் அங்கத்தினர்களான நீங்க எல்லாரும் நாட்டோட பெயருக்குப் பெருமிதம் சேர்த்திருக்கீங்க, இதுக்கு உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கறேன்.  நீங்க பல்கலைகழக விளையாட்டுக்கள்ல உங்க செயல்பாட்டை வெளிப்படுத்தி, நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும் தலை நிமிரச் செய்திருக்கீங்க.  ஆகையால உங்க எல்லாருக்கும் முதல்ல பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன்.

 

பிரகதி, நான் உரையாடலை உங்க கிட்டேர்ந்து துவங்கறேன்.  நீங்க முதல்ல ஒரு விஷயத்தைச் சொல்லுங்க, 2 பதக்கங்களை ஜெயிச்ச பிறகு, நீங்க இங்கிருந்து போன வேளையில இப்படி ஜெயிப்போம்னு நீங்க யோசிச்சீங்களா?  இத்தனை பெரிய வெற்றிக்குப் பிறகு நீங்க எப்படி உணர்றீங்க?

 

பிரகதி – சார் ரொம்ப பெருமையா உணர்றேன் நான்.  எந்த அளவுக்கு நம்ம தேசத்தோட கொடிய உயரப் பறக்க விட்டு வந்திருக்கேன்னா, ஒரு முறை தங்கத்தை இழந்த போது வருத்தமா இருந்திச்சு, ஆனால் மறுமுறை எனக்கு என்ன தோணிச்சுன்னா, நாம எக்காரணம் கொண்டும் இதுக்குக் கீழ போகக் கூடாதுன்னு தீர்மானிச்சேன்.  எப்பாடு பட்டாவது நம்ம கொடி தான் தலைசிறந்த நிலையில இருக்கணும்னு முடிவு செஞ்சேன்.  கடைசியில போட்டியில ஜெயிச்ச போது, அந்த மேடையிலேயே நாங்க எல்லாரும் செம்மையா கொண்டாடினோம்.  அது ரொம்ப அருமையான கணம்.  அதை என்னால அளவிடவோ, எடுத்துச் சொல்லவோ முடியாது. 

 

மோதி – பிரகதி நீங்க உடல்ரீதியா பெரிய பிரச்சனையோட தான் வந்தீங்க.  அதைத் தாண்டியும் நீங்க வெற்றி பெற்றிருக்கீங்க.  இது நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பெரிய உத்வேகம் அளிக்கற விஷயம்.   உங்களுக்கு என்ன ஆச்சு?

 

பிரகதி – சார் 2020ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி, என் தலையில ரத்தக்கசிவு ஏற்பட்டிச்சு.  நான் வெண்டிலேட்டர் கருவியோட இணைக்கப்பட்டிருந்தேன்.  நான் உயிர் பிழைப்பேனா இல்லையான்னே தெரியலை, அப்படியே பிழைச்சாலும் என்ன நிலைமைன்னு புரியலை.   ஆனா ஒண்ணு மட்டும் உறுதி, எனக்குள்ள ஒரு உறுதி இருந்திச்சு, அதாவது நான் கண்டிப்பா திரும்பவும் களத்தில இறங்கணும்னு, அம்பு விடணும்னு.  நான் உயிர் பிழைச்சுத் திரும்பவும் களத்துக்கு வந்திருக்கேன்னா, அதுக்குப் பெரும்பங்குக் காரணம் கடவுள் தான், அதன் பிறகு டாக்டர்கள், பிறகு வில்வித்தை.

 

இப்ப நம்மகூட அம்லன் இருக்காரு.  அம்லன், எப்படி தடகளப் போட்டிகள் மீது உங்களுக்கு இத்தனை பெரிய ஆர்வம் ஏற்பட்டிச்சுன்னு சொல்லுங்க. 

 

அம்லன் – வணக்கம் சார்.

 

மோதி – வணக்கம், வணக்கம்.

 

அம்லன் – சார், தடகளப் போட்டிகள்ல முதல்ல எல்லாம் எனக்கு நாட்டம் இல்லாம இருந்திச்சு.  முதல்ல நான் கால்பந்தாட்டம் தான் அதிகம் விளையாடுவேன்.  ஆனா என் அண்ணனோட ஒரு நண்பன், அவரு தான் என் கிட்ட, அம்லான், நீ தடகளப் போட்டியில பங்கெடுக்கணும்னு சொன்னாரு.  நானும் சரின்னு ஒத்துக்கிட்டு, மாநில அளவிலான போட்டியில போட்டி போட்டேன், ஆனா தோத்துப் போயிட்டேன்.  அந்தத் தோல்வி எனக்குப் பிடிக்கலை.  இப்படி விளையாடி விளையாடி தான் நான் இந்தத் துறைக்கு வந்தேன்.  பிறகு மெல்லமெல்ல, இப்ப ரொம்ப ஜாலியா இருக்கு.  எனக்கும் இது மேல ஆர்வம் அதிகமாயிருச்சு. 

 

மோதி – அம்லான், அதிகமான பயிற்சி எங்க எடுத்துக்கிட்டீங்க.

 

அம்லான் – பெரும்பாலும் நான் ஹைதராபாதில தான் பயிற்சி எடுத்தேன், சாய் ரெட்டி சார் வழிகாட்டுதல்ல தான்.  பிறகு நான் புபநேஷ்வருக்கு மாத்திக்கிட்டு, அங்க தொழில்ரீதியா ஆரம்பிச்சேன். 

 

மோதி - சரி, இப்ப நம்ம கூட பிரியங்காவும் இருக்காங்க.  பிரியங்கா, நீங்க 20 கிலோமீட்டர் நடைப்பந்தயக் குழுவில இருந்தீங்க.  நாடு முழுக்க நீங்க சொல்றதை கேட்டுக்கிட்டு இருக்கு, அவங்க எல்லாரும் இந்த விளையாட்டுப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறாங்க.  நீங்களே சொல்லுங்க, இதில ஈடுபட என்ன மாதிரியான திறன்கள் தேவைன்னு.  உங்க முன்னேற்றம் எங்கிருந்து எங்க ஏற்பட்டிருக்குன்னு சொல்லுங்க.

 

பிரியங்கா – இந்தப் போட்டி ரொம்ப கடினமானது.  ஏன்னா, எங்களை கண்காணிக்க 5 நடுவர்கள் இருப்பாங்க, நாங்க ஒருவேளை நடக்காம ஓடினோம்னா, அவங்க எங்களை போட்டியிலேர்ந்து விலக்கிருவாங்க, இல்லைன்னா கொஞ்சம் கூட சாலைலேர்ந்து குதிச்சோம், தாண்டினோம்னாலும் வெளியேத்திருவாங்க.  இல்லை கொஞ்சமா முட்டியை மடக்கினோம்னாலும் அவ்வளவு தான்.  எனக்குக் கூட ரெண்டு முறை எச்சரிக்கை விடுத்தாங்க.  அதன் பிறகு நான் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, குறைஞ்சது அந்தக் கட்டத்திலேர்ந்து டீம் மெடலாவது வாங்கணும்னு நினைச்சேன்.  ஏன்னா நாங்க எல்லாரும் இங்க தேசத்துக்காகத் தான் வந்திருக்கோம்.  வெறும் கையோட எப்படி திரும்பறது?

 

மோதி – சரி, உங்க அப்பா, சகோதரர் எல்லாரும் நல்லா இருக்காங்க இல்லையா?

 

பிரியங்கா – ஆமாம் சார், எல்லாரும் அருமையா இருக்காங்க.  நான் எல்லார் கிட்டயும் சொல்லுவேன், நீங்க எங்களை இத்தனை ஊக்கப்படுத்தறீங்க, உத்வேகப்படுத்தறீங்க, உண்மையிலேயே எங்களுக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு.  ஏன்னா உலகப் பல்கலைக்கழக விளையாட்டுக்களை எல்லாம் இந்தியாவுல நிறைய கேள்விப்பட்டிருக்கவும் மாட்டாங்க.  ஆனா எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது இப்ப, இந்த விளையாட்டுத் தொடர்பாவும், நாங்க இதில இத்தனை பதக்கங்கள் ஜெயிச்சோம்னு எல்லாம் நிறைய ட்வீட்டுகள் வருது, இது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.  ஒலிம்பிக்ஸ் அளவுக்கு இதுக்கும் நிறைய ஊக்கம் கிடைச்சுக்கிட்டு வருது. 

 

மோதி – சரி பிரியங்கா, என் தரப்புல வாழ்த்துக்கள்.  நீங்க நிறைய பெருமை சேர்த்திருக்கீங்க, சரி வாங்க இப்ப அபிதன்யா கூட பேசலாம்.

 

அபிதன்யா – வணக்கம் சார்,

 

மோதி- உங்களைப் பத்திச் சொல்லுங்க.

 

அபிதன்யா – சார், நான் மஹாராஷ்டிரத்தோட கோலாபூர்லேர்ந்து வர்றேன், நான் துப்பாக்கிச் சுடுதல்ல 25எம் விளையாட்டுப் பிஸ்டல்லயும், 10எம் ஏர் பிஸ்டல்லயும், ஆக ரெண்டு போட்டிலயுமே ஈடுபடுறேன்.  எங்கப்பா அம்மா ரெண்டு பேருமே உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், நான் 2015இல துப்பாக்கிச் சுடுதல்ல ஈடுபட ஆரம்பிச்சேன்.  நான் ஆரம்பிச்ச காலத்தில கோலாப்பூர்ல அத்தனை வசதிகள் இருக்கலை, பஸ்ஸுல போய், வட்கான்வ்லேர்ந்து கோலாப்பூர் போக ஒண்ணரை மணி நேரம் ஆகும், அதே மாதிரி திரும்பி வரவும் ஒண்ணரை மணிநேரம் ஆகும், அங்க 4 மணிநேரம் பயிற்சி, இப்படி 6-7 மணி நேரம் பயணத்திலயும், பயிற்சியிலயும் செலவாகறதால, ஸ்கூலுக்குப் போக முடியாம போகும்.   எங்க அம்மா அப்பா சொல்லுவாங்க, கண்ணா, நீ ஒரு வேலை செய், நாங்க உன்னை சனி-ஞாயிறு சுடுதல் மைதானம் கொண்டு போறோம், மத்த நேரம் நீ மத்த விளையாட்டு விளையாடும்பாங்க.  நான் சின்ன வயசுல எல்லா விளையாட்டுக்களையும் விளையாடுவேன் ஏன்னா, எங்கப்பா அம்மா ரெண்டு பேருமே விளையாட்டுல நிறைய ஈடுபாடு கொண்டவங்க, ஆனா அவங்களால அதிகம் சாதிக்க முடியலை.  பொருளாதார ஆதரவு இருக்கலை.  அதிக தெரிதலும் தகவலும் அவங்களுக்கு இருக்கலை அதனால, எங்கம்மாவோட பெரிய கனவு என்னன்னா, நான் தேசத்தோட பிரதிநிதியா இருக்கணும், தேசத்துக்காக பதக்கம் ஜெயிக்கணுங்கறது தான்.  என்னால அவங்க கனவை நிறைவேத்த முடிஞ்சிருக்கு, இதுக்காக நான் சின்ன வயசுல விளையாட்டுக்கள்ல நிறைய ஆர்வம் எடுத்துக்கிட்டேன், டாய்க்வாண்டோ பழகினேன், அதிலயும் ப்ளாக் பெல்ட் வாங்கியிருக்கேன், பாக்சிங், ஜூடோ, ஃபென்சிங், தட்டு எறிதல் மாதிரியான விளையாட்டுக்கள்ல ஈடுபட்டேன், 2015இல துப்பாக்கிச் சுடுதலை மேற்கொண்டேன்.  பிறகு, 2-3 ஆண்டுகள் நான் கடுமையா உழைச்சு, முதல் முறையா பல்கலைக்கழக போட்டிகள்ல பங்கெடுக்க மலேஷியாவுக்குத் தேர்வானேன், அதில எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைச்சுது, அங்க தான் எனக்குப் பெரிய ஊக்கம் கிடைச்சுது.  பிறகு என் பள்ளியே எனக்கு ஒரு துப்பாக்கிச் சுடுதல் களம் அமைச்சுக் கொடுத்தாங்க, அங்க பயிற்சி செஞ்சு, பிறகு அவங்க என்னை புணேவுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுப்பினாங்க.  அங்க ககன் நாரங் விளையாட்டு நிறுவனமான Gun for Gloryஇல நான் இப்ப பயிற்சி மேற்கொண்டு வர்றேன், இப்ப ககன் சார் எனக்கு நிறைய ஆதரவு அளிக்கறாரு, என் விளையாட்டை ஊக்கப்படுத்தறாரு.

 

மோதி – நல்லது, நீங்க நாலு பேருமே ஏதாவது சொல்ல விரும்பறீங்கன்னா, நான் கேட்க விரும்பறேன்.  பிரகதியாகட்டும், அம்லான் ஆகட்டும், பிரியங்காவாகட்டும், அபிதன்யாவாகட்டும்.  நீங்க எல்லாரும் என்னோட இணைஞ்சிருக்கீங்க, ஏதாவது சொல்ல விரும்பறீங்கன்னா நான் கண்டிப்பா கேட்கறேன்.

 

அம்லான் – சார், எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார்.

 

மோதி – சொல்லுங்க.

 

அம்லான் – சார், உங்களுக்கு எந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும் சார்?

 

மோதி – விளையாட்டு உலகத்தில பாரதம் பெரிய மலர்ச்சியை அடையணும், இதுக்காக நான் இந்த விஷயங்களுக்கு ஊக்கம் கொடுத்துட்டு இருக்கேன்.  ஆனா ஹாக்கி, கால்பந்தாட்டம், கபடி, கோகோ, இதெல்லாம் நம்ம மண்ணோட இணைஞ்ச விளையாட்டுக்கள், எப்பவுமே, நாம இதில பின்தங்கி இருக்கக் கூடாது, அதே போல வில்வித்தையிலயும் நம்ம வீரர்கள் நல்லா செயல்படுறதை நான் கவனிக்கறேன், அதே போல துப்பாக்கிச் சுடுதல்லயும்.  ரெண்டாவதா நான் என்ன பார்க்கறேன்னா, நம்ம இளைஞர்கள்ல, ஏன் குடும்பங்கள்லயும் கூட விளையாட்டுக்கள் மேல முதல்ல இருந்த கருத்து, உணர்வு இப்ப இல்லை.  முன்ன எல்லாம் குழந்தைங்க விளையாடப் போனா, அதை தடுப்பாங்க, ஆனா இப்ப, காலம் ரொம்ப மாறிப் போச்சு.  நீங்க எல்லாரும் வெற்றி மேல வெற்றி குவிக்கறீங்க இல்லை. இது, எல்லா குடும்பங்களுக்கும் கருத்தூக்கமா அமையுது.   ஒவ்வொரு விளையாட்டிலயும், எதுல எல்லாம் நம்ம குழந்தைகள் பங்கெடுக்கறாங்களோ, அதில எல்லாம் ஏதோ ஒண்ணை ஜெயிச்சுக்கிட்டு வர்றாங்க.  மேலும் இந்தச் செய்தி முக்கியச் செய்தியா நாட்டுமக்கள் கிட்ட கொண்டு போயும் சேர்க்கப்படுது, கண்ணுக்குத் தெரியற வகையில காட்டப்படுது, பள்ளிகள், கல்லூரிகள்ல விவாதப் பொருளாகுது.  சரி, எனக்கு ரொம்ப நல்லா இருக்கு உங்களோட பேசினது, என் தரப்பிலேர்ந்து உங்க எல்லாருக்கும் பலப்பல பாராட்டுக்கள், பல நல்வாழ்த்துக்கள்.

 

அனைவரும் – பலப்பல நன்றிகள்.  தேங்க்யூ சார். நன்றி.

 

மோதி – நன்றிகள், வணக்கம்.    

 

எனது குடும்ப உறுப்பினர்களே, இந்த முறை ஆகஸ்ட் 15 அன்று, நாடு அனைவரின் முயற்சியின் சக்தியைக் கண்டது. நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியும் வீடுகள் தோறும் மூவண்ணக் கொடியேற்றுவோம் இயக்கத்தை உண்மையான 'மனங்கள் தோறும் மூவண்ணம் என்ற பிரச்சாரமாக' ஆக்கியது.  இந்தப் பிரச்சாரத்தின் போது பல பதிவுகளும் ஏற்படுத்தப்பட்டன. நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியை கோடிக்கணக்கில் வாங்கினார்கள். 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் சுமார் 1.5 கோடி மூவர்ணக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது தொழிலாளர்கள், நெசவாளர்கள், குறிப்பாகப் பெண்களுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த முறை நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை, சுமார் 5 கோடி நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார்கள். இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.

 

 

நண்பர்களே, தற்போது, என் மண் என் தேசம், தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் இயக்கம் நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மண்ணைச் சேகரிக்கும் பிரச்சாரம் தொடங்கப்படும்.  நாட்டின் புனித மண் ஆயிரக்கணக்கான அமுதக் கலசங்களில் ஒன்று திரட்டப்படும். அக்டோபர் இறுதியில், ஆயிரக்கணக்கான அமுதக் கலச யாத்திரை நாட்டின் தலைநகர் தில்லிஐ வந்தடையும்.  தில்லியில் இந்த மண்ணிலிருந்து அமுதப் பூங்காவனம் உருவாக்கப்படும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் முயற்சியும் இந்தப் இயக்கத்தை வெற்றியடையச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.

 

என் குடும்ப உறுப்பினர்களே, இந்த முறை எனக்கு சம்ஸ்கிருத மொழியில் பல கடிதங்கள் வந்துள்ளன. இதற்குக் காரணம், மழைமாதப் பௌர்ணமி நாளில் உலக சம்ஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது.

 

 

सर्वेभ्य: विश्व-संस्कृत-दिवसस्य हार्द्य: शुभकामना:

 

அனைவருக்கும் உலக சம்ஸ்கிருத நாளை ஒட்டி நல்வாழ்த்துக்கள்.

 

 

சம்ஸ்கிருதம் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  இது பல நவீன மொழிகளின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது.  சம்ஸ்கிருதம் அதன் தொன்மைக்காகவும், அதன் அறிவியல் மற்றும் இலக்கணத்திற்காகவும் அறியப்படுகிறது.  இந்தியாவின் தொன்மையான அறிவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யோகக்கலை, ஆயுர்வேதம், தத்துவம் போன்ற பாடங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள், இப்போது சம்ஸ்கிருதத்தை அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களும் இந்தத் திசையில் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, சம்ஸ்கிருத மேம்பாட்டு அறக்கட்டளை, யோகக்கலைக்கு சம்ஸ்கிருதம், ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருதம் மற்றும் புத்த மதத்திற்கு சம்ஸ்கிருதம் போன்ற பல படிப்புகளை அளிக்கிறது. 'சம்ஸ்கிருத பாரதி' சம்ஸ்கிருதத்தை மக்களுக்குக் கற்பிக்கும் இயக்கத்தை நடத்துகிறது.  இதில், 10 நாட்களில் சம்ஸ்கிருத உரையாடல் புரியலாம் என்ற முகாமில் பங்கேற்கலாம்.  இன்று மக்களிடையே சம்ஸ்கிருதம் குறித்த விழிப்புணர்வும், பெருமித உணர்வும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் பின்புலத்தில், நாட்டின் சிறப்பானதொரு பங்களிப்பும் உள்ளது.   உதாரணமாக, 2020 ஆம் ஆண்டில் மூன்று சம்ஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களின் பல இணைப்புக் கல்லூரிகளும், நிறுவனங்களும் வெவ்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன. ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களில் சம்ஸ்கிருத மையங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

 

நண்பர்களே, நமது தாய் மொழி தான் நம்மை நமது வேர்களுடன் இணைப்பது, நமது கலாச்சாரத்துடன் இணைப்பது, நமது பாரம்பரியத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகம் என்பதை நீங்கள் பல நேரங்களில் கண்டிப்பாக அனுபவித்திருப்பீர்கள். தாய்மொழியுடன் நாம் இணையும் போது, நாம் இயல்பாகவே நமது கலாச்சாரத்துடன் இணைகிறோம். நமது நற்பண்புகளுடன் இணைகிறோம். பாரம்பரியத்துடன் இணைகிறோம், பண்டைய மகத்தான மாட்சிமையுடன் இணைகிறோம். இந்தியாவின் மற்றொரு தாய்மொழி பெருமைமிக்க தெலுங்கு மொழி. ஆகஸ்ட் 29-ம் தேதி தெலுங்கு தினம் கொண்டாடப்படுகிறது.

 

अन्दरिकी तेलुगू भाषा दिनोत्सव शुभाकांक्षलु |

அனைவருக்கும் இனிய தெலுங்கு தின நல்வாழ்த்துக்கள்.

 

 

தெலுங்கு மொழியின் இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைந்துள்ளன. தெலுங்கின் இந்த பாரம்பரியத்தின் பலனை நாடு முழுவதும் பெறுவதை உறுதி செய்வதற்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

எனது குடும்ப உறுப்பினர்களே, மனதின் குரல் நிகழ்ச்சியின் பல பகுதிகளில், சுற்றுலாவைப் பற்றி பேசியுள்ளோம்.  பொருட்களை அல்லது இடங்களை நீங்களே பார்ப்பது, அவற்றைப் புரிந்துகொள்வது மற்றும் சில கணங்கள் அவையாகவே வாழ்வது வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

 

கடலை எவ்வளவுதான் வர்ணித்தாலும் கடலை நேரில் பார்க்காமல், அதன் பரந்த தன்மையை நம்மால் உணர முடியாது. இமயமலையை எவ்வளவுதான் வர்ணித்தாலும், இமயமலையைப் பார்க்காமல், அதன் அழகை மதிப்பிட முடியாது. அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போது, நம் நாட்டின் அழகை, நமது நாட்டின் பன்முகத்தன்மையைக் காணச் செல்ல வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் அடிக்கடி வலியுறுத்துகிறேன்.  நாம் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருந்தாலும், பல வேளைகளில், நம் நகரத்தில், நம் மாநிலத்தில் உள்ள பல சிறந்த இடங்கள்-விஷயங்களைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை.

 

 

பல நேரங்களில் மக்கள் தங்கள் நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதில்லை. தனபால் அவர்களுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூரு போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் தனபால். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு சுற்றுலாப் போக்குவரத்துப் பிரிவில் பொறுப்பு கிடைத்தது. இது இப்போது பெங்களூரு தர்ஷினி என்று அழைக்கப்படுகிறது. தனபால் அவர்கள் நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி ஒரு பயணத்தின்போது, ஒரு சுற்றுலாப் பயணி அவரிடம், பெங்களூருவில் உள்ள குளத்தை ஏன் செங்கி குளம் என்று அழைக்கிறார்கள் என்று கேட்டார். அவருக்கு இதற்கான பதில் தெரியவில்லை, மிகவும் வருந்தினார்.  ஆகையால், தான் தனது அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.  தனது பாரம்பரியம் பற்றி அறியும் ஆர்வம், அவரை பல பாறைகளுக்கும் கல்வெட்டுகளுக்கும் அறிமுகம் செய்தது   இந்தச் செயலில் தனபால் தன்னை எந்த அளவுக்கு இழந்தார் என்றால், அவர் எபிகிராஃபி, அதாவது கல்வெட்டு ஆராய்ச்சியோடு தொடர்புடைய பட்டயப்படிப்பை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார்.  அவர் இப்போது ஓய்வு பெற்றாலும், பெங்களூரூவின் சரித்திரத்தை ஆராயும் ஆர்வத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார். 

 

நண்பர்களே, பிரையன் டி. கார்ப்ரன், Brian D. Kharpran பற்றி உங்களுக்குச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேகாலயாவைச் சேர்ந்த இவர், ஸ்பீலியாலஜியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதாவது குகைகளைப் பற்றிய ஆய்வு என்று பொருள். பல ஆண்டுகளுக்கு முன்பு, பல கதை புத்தகங்களைப் படித்தபோது இந்த ஆர்வம் அவரிடம் எழுந்தது.  1964 ஆம் ஆண்டில், அவர் ஒரு பள்ளி மாணவராக தனது முதல் ஆய்வை மேற்கொண்டார். 1990 ஆம் ஆண்டில், அவர் தனது நண்பருடன் இணைந்து ஒரு சங்கத்தை நிறுவினார், இதன் மூலம் மேகாலயாவின் அறியப்படாத குகைகளைப் பற்றி அறியத் தொடங்கினார். இவர் தனது குழுவினருடன் சேர்ந்து, மேகாலயாவின் 1700 க்கும் மேற்பட்ட குகைகளைக் கண்டுபிடித்து, மாநிலத்தை உலக குகை வரைபடத்தில் இடம் பெறச் செய்தார்.   இந்தியாவின் மிக நீளமான மற்றும் ஆழமான குகைகள் மேகாலயாவில் உள்ளன.  பிரையன் அவர்கள் மற்றும் அவரது குழுவினர், உலகில் வேறு எங்கும் காணப்படாத குகைவாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தியுள்ளார்கள்.  இந்தக் குழுவின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன், அத்துடன் மேகாலயாவின் குகைகளை சுற்றிப் பார்க்க, ஒரு திட்டத்தை உருவாக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

எனது குடும்ப உறுப்பினர்களே, பால்வளத் துறை நமது நாட்டின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் பனாஸ் பால்பண்ணையின் ஒரு சுவாரஸ்யமான முன்னெடுப்பைப் பற்றி அறிந்தேன். பனாஸ் பால்பண்ணை, ஆசியாவின் மிகப்பெரிய பால்பண்ணையாக கருதப்படுகிறது. இங்கு, தினமும் சராசரியாக, 75 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது.  இதையடுத்து, பிற மாநிலங்களுக்கும் இது அனுப்பப்படுகிறது.  இதுவரை, டேங்கர் லாரிகள் அல்லது பால் ரயில்கள் பிற மாநிலங்களுக்கு சரியான நேரத்தில் பால் வழங்குவதை உறுதி செய்ய பயன்படுத்தப்பட்டன. ஆனால், சவால்கள் குறைந்தபாடில்லை. ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் நிறைய நேரம் ஆனது, சில நேரங்களில் பாலும் அதில் கெட்டுப் போனது. இந்தச் சிக்கலை சமாளிக்க, இந்திய ரயில்வே ஒரு புதிய சோதனையை நடத்தியது. பாலன்பூரிலிருந்து நியூ ரேவாரி வரை, டிரக் ஆன் டிராக் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியது.   இதில், பால் லாரிகள் நேரடியாக ரயிலில் ஏற்றப்படுகின்றன. அதாவது, போக்குவரத்துப் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. டிரக் ஆன்-டிராக் வசதியின் பலன்கள் மிகவும் திருப்திகரமாக உள்ளன.  டெலிவரி செய்ய 30 மணி நேரம் எடுத்துக் கொண்ட பால், இப்போது பாதி நேரத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. இது எரிபொருளால் ஏற்படும் மாசுபாட்டை அகற்றியுள்ள அதே வேளையில், எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்துகிறது.   இதனால் லாரி ஓட்டுனர்கள் பெரிதும் பயனடைந்து, அவர்களின் வாழ்க்கையும் சுலபமாகியுள்ளது.

 

 

நண்பர்களே, கூட்டுமுயற்சியால் இன்று நமது பால்பண்ணைகளும் நவீன சிந்தனையுடன் முன்னேறி வருகின்றன.  பனாஸ் பால்பண்ணை எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது, சாணவிதை உருண்டை மூலம் மரம் வளர்ப்புப் இயக்கம் வாயிலாகத் தெளிவாகிறது.  வாராணசி பால் ஒன்றியம் நமது பால் பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரிக்க, உர மேலாண்மை தொடர்பாகவும் செயல்பட்டு வருகிறது. கேரளாவின் மலபார் மில்க் யூனியன் பால்பண்ணையின் முயற்சியும் மிகவும் தனித்துவமானது. இது விலங்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆயுர்வேத மருந்துகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.

 

     நண்பர்களே, இன்று பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு, அதைப் பன்முகப்படுத்துபவர்கள் ஏராளம்.  ராஜஸ்தானத்தின் கோட்டாவில் பால் பண்ணை நடத்தி வரும் அமன்பிரீத் சிங் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பால்பண்ணையுடன் சாணஎரிவாயுவிலும் கவனம் செலுத்தி, இரண்டு சாண எரிவாயு கலன்களை அவர் அமைத்தார். இதனால் மின்சாரத்திற்கான செலவு சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும். இன்று, பல பெரிய பால் நிறுவனங்கள் சாண எரிவாயுவில் கவனம் செலுத்துகின்றன. இந்த வகையான சமூக உந்துதலால் மதிப்புக் கூட்டல் மிகவும் ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற போக்குகள் நாடு முழுவதும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.

 

என் குடும்ப உறுப்பினர்களே, இன்று நான் கூற நினைத்தது இவையே.  இப்போது பண்டிகைக் காலமும் வந்துவிட்டது.   அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். பண்டிகைக் காலங்களில், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 'தற்சார்பு இந்தியா' இயக்கம் என்பது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இயக்கமாகும். பண்டிகைச் சூழல் ஏற்படும்போது, நம் வழிபாட்டுத் தலங்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நிரந்தரமாக அவ்வாறே வைத்திருக்க வேண்டும்.   அடுத்த முறை உங்களுடன் மனதின் குரலில் நான் பங்கேற்கும் போது, சில புதிய விஷயங்களோடு சந்திப்போம்.  நாட்டு மக்களின் சில புதிய முயற்சிகள், புதிய வெற்றிகள் குறித்து விவாதிப்போம்.  விடை தாருங்கள், பலப்பல நன்றிகள், வணக்கம்.

----

AD/DL


(Release ID: 1952666) Visitor Counter : 276