பிரதமர் அலுவலகம்
ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
26 AUG 2023 10:08AM by PIB Chennai
வணக்கம்!
காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கு உங்களை வரவேற்கிறோம். எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காசி உலகின் மிகப்பழமையான நகரம் மட்டுமல்ல. புத்தர் தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய சாரநாத் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ளது. காசி நகரம் ஞானம், கடமை, சத்தியம் ஆகியவற்றின் பொக்கிஷமாக உள்ளது. இது உண்மையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரம் ஆகும். கங்கா ஆரத்தியைப் பார்ப்பதற்கும், சாரநாத்தைப் பார்வையிடுவதற்கும், காசியின் சுவையான உணவுகளை சுவைப்பதற்கும் நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மதிப்பிற்குரியர்களே,
கலாச்சாரம் நம்மை ஒன்றிணைப்பதற்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. இது பல்வேறு பின்னணிகள் மற்றும் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எனவே, உங்கள் பணி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள நாங்கள் பன்முக கலாச்சாரம் குறித்து மிகவும் பெருமிதம் கொள்கிறோம். கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு நாங்கள் மிகுந்த மதிப்பு கொடுக்கிறோம். பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். தேசிய அளவில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து கிராம அளவிலும் கலாச்சார சொத்துக்கள் மற்றும் கலைஞர்களை தொகுத்துள்ளோம். கலாச்சாரத்தை கொண்டாட பல மையங்களையும் கட்டி வருகிறோம். அவற்றில் முதன்மையானவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடி அருங்காட்சியகங்கள் ஆகும். இந்த அருங்காட்சியகங்கள் இந்தியாவின் பழங்குடிச் சமூகங்களின் துடிப்பான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. புதுதில்லியில், பிரதமர் அருங்காட்சியகம் உள்ளது. இது இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பரியத்தை பறைசாற்றும் முயற்சிகளில் ஒன்றாகும். 'யுக யுகீன் பாரத்' தேசிய அருங்காட்சியகத்தையும் உருவாக்கி வருகிறோம். கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இது திகழும். இது 5000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்.
மதிப்பிற்குரியர்களே,
பண்பாட்டுச் சொத்துக்களை மீட்பது முக்கியமான ஒன்று. இந்த விஷயத்தில் உங்கள் முயற்சிகளை நான் வரவேற்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, உறுதியான பாரம்பரியம் என்பது பொருள் மதிப்பு மட்டுமல்ல. அது ஒரு தேசத்தின் வரலாறும் அடையாளமும் ஆகும். ஒவ்வொருவருக்கும் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்க உரிமை உண்டு. 2014-ம் ஆண்டு முதல், பண்டைய நாகரிகத்தின் பெருமையை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான கலைப்பொருட்களை இந்தியா மீட்டுக் கொண்டு வந்துள்ளது. பாரம்பரியத்தை நோக்கிய உங்கள் முயற்சிகளையும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைக் கலாச்சாரத்திற்கான உங்கள் பங்களிப்புகளையும் நான் பாராட்டுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, கலாச்சார பாரம்பரியம் என்பது கல்லில் செதுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல. மரபுகள், பழக்கவழக்கங்கள், திருவிழாக்கள் ஆகியவையே அடுத்த தலைமுறைகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. உங்கள் முயற்சிகள் நிலையான நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
மதிப்பிற்குரியர்களே,
பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகப்படுத்தலுக்கு பாரம்பரியம் ஒரு முக்கிய சொத்து என்று நாங்கள் நம்புகிறோம். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற நமது தாரக மந்திரத்தை இது எதிரொலிக்கிறது. கிட்டத்தட்ட 3,000 தனித்துவமான கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களுடன், 2,000 ஆண்டுகள் பழமையான கைவினை பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' முன்முயற்சி இந்திய கைவினைப் பொருட்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தற்சார்பை ஊக்குவிக்கிறது. கலாச்சார மற்றும் ஆக்கபூர்வமான கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இவை, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குவதுடன் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும். வரும் மாதத்தில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது. 1.8 பில்லியன் டாலர் தொடக்க நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை உருவாக்கும். இது அவர்கள் தங்கள் கைவினைத் தொழில்கள் மூலம் செழிப்பு அடையவும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் உதவும்.
நண்பர்களே,
கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில், தேசிய டிஜிட்டல் மாவட்ட களஞ்சியத் தொகுப்பு உள்ளது. நமது சுதந்திரப் போராட்ட சம்பவங்களை ஆராய்ந்து அணுக இது உதவுகிறது. நமது கலாச்சார அடையாளங்களை சிறப்பாக பாதுகாப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். நமது கலாச்சார இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்ததாக மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
மதிப்பிற்குரியர்களே,
உங்கள் குழு 'அனைவரையும் ஒன்றிணைக்கும் கலாச்சாரம்' இயக்கத்தைத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வசுதைவ குடும்பகம், அதாவது - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வை உள்ளடக்கியது. உறுதியான பலன்களை அடிப்படையாகக் கொண்டு ஜி 20 செயல் திட்டத்தை வடிவமைப்பதில் நீங்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் நான் பாராட்டுகிறேன். கலாச்சாரம், படைப்பாற்றல், வணிகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய நான்கு அம்சங்களின் முக்கியத்துவத்தை உங்கள் பணி பிரதிபலிக்கிறது. இது கலாச்சாரத்தின் சக்தியைப் பயன்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க உதவும். இந்தக் கூட்டம் மிகவும் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான கூட்டமாக அமைய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
நன்றி!
----
ANU/AP/PLM/DL
(Release ID: 1952405)
Visitor Counter : 134
Read this release in:
Odia
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam