பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே பிரதமர் உரை


"உங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தைரியம், பக்தி மற்றும் ஆர்வத்திற்காக உங்களைப் பார்க்கவும் மரியாதை செலுத்தவும் நான் ஆர்வமாக இருந்தேன்"

"இந்தியா சந்திரனிலும் இருக்கிறது! நமது தேசியப் பெருமையை நிலவில் பதித்துள்ளோம்.”

"இந்தப் புதிய இந்தியா 21-ம் நூற்றாண்டில் உலகின் பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும்"

"நிலவில் தரையிறங்கிய தருணம் இந்த நூற்றாண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் தருணங்களில் ஒன்றாகும்"

இந்தியாவின் அறிவியல் உணர்வு, நமது தொழில்நுட்பம் மற்றும் நமது அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றின் வலிமையை இன்று, முழு உலகமும் காண்பதுடன் அதை ஏற்று அங்கீகரிகிறது

"நமது 'மூன் லேண்டர்' நிலவுக்கான ஆபரணம் போல நிலவில் உறுதியாக கால் பதித்துள்ளது"

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும்.

சந்திராயன் 2 தனது தடங்களை விட்டுச் சென்ற இடம் இனி 'திரங்கா' (மூவர்ணக் கொடி) என்று அழைக்கப்படும்.

"சந்திரயான்-3-ன் சந்திரப் பயணத்தின் வெற்றியில், நமது பெண் விஞ்ஞானிகளும், நாட்டின

Posted On: 26 AUG 2023 9:34AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்பான இஸ்ட்ராக்-கைப் (ISRO Telemetry Tracking and Command Network - ISTRAC)  பார்வையிட்டு, சந்திரயான் -3-ன் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே உரையாற்றினார். சந்திரயான் -3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் அண்ட் கமாண்ட் நெட்வொர்க்கில் (இஸ்ட்ராக்) விஞ்ஞானிகள்  மத்தியில் உரையாற்றிய பிரதமர், உடலும் மனமும் மகிழ்ச்சியால் நிரம்பும் இதுபோன்ற சந்தர்ப்பம் அமைவது மிகவும் அரிதானது என்று கூறினார். பொறுமையின்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உண்டு என்று குறிப்பிட்ட பிரதமர், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தின் போது அதே உணர்ச்சிகளைத் தாமும் அனுபவித்ததாகக் குறிப்பிட்டார்.  தமது மனம் எல்லா நேரங்களிலும் சந்திரயான்-3 திட்டத்திலேயே கவனம் செலுத்தியதாகக் கூறினார். இஸ்ட்ராக் மையத்தைப் பார்வையிடும் தமது திடீர் திட்டங்களால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்துக் கூறிய பிரதமர், விஞ்ஞானிகளின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தைரியம், பக்தி மற்றும் ஆர்வத்திற்காக அவர்களைப் பார்த்து மரியாதை செலுத்த ஆர்வமாக இருந்தாகக் கூறினார்.

 

இது சாதாரண வெற்றி அல்ல என்றும் பிரதமர் கூறினார். இந்த சாதனை எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் சக்தியை பறைசாற்றுகிறது என்று அவர் கூறினார். இந்தியா சந்திரனிலும் உள்ளது என்றும் நமது தேசியப் பெருமை சந்திரனில் பதிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத இந்த சாதனையை எடுத்துரைத்த பிரதமர், இது அச்சமற்ற மற்றும் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ளும் இன்றைய இந்தியா என்று குறிப்பிட்டார். புதிதாக சிந்தித்து, புதுமையான வழியில், இருண்ட பகுதிக்குச் சென்று உலகில் ஒளியைப் பரப்பும் இந்தியா இது என்று அவர் தெரிவித்தார். இந்த இந்தியா 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் என அவர் கூறினார்.

 

சந்திராயன் -3 நிலவில் தரையிறங்கிய தருணம் தேசத்தின் நனவில் நீங்காததாகிவிட்டது என்று பிரதமர் கூறினார். தரையிறங்கிய தருணம் இந்த நூற்றாண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் தருணங்களில் ஒன்றாகும் என்று கூறிய அவர், ஒவ்வொரு இந்தியரும் அதை தனது சொந்த வெற்றியாக எடுத்துக் கொண்டனர் என்று குறிப்பிட்டார். இந்த மகத்தான வெற்றிக்காக விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டினார்.

 

நிலவில் சந்திராயன் -3 தரையிறங்கிய புகைப்படங்களை விவரித்த பிரதமர், "எங்கள் 'மூன் லேண்டர்'  நிலவுக்கான ஆபரணம் ('அங்கத்') போல நிலவில் உறுதியாக கால் பதித்துள்ளது என்றார். விக்ரமன் லேண்டரின் வீரம் ஒரு பக்கம், பிரக்யான் ரோவரின் வீரம் மறுபக்கம் என்று அவர் தெரிவித்தார். இப்போது பார்ப்பது நிலவு தொடர்பாக இதுவரை பார்த்திராத பகுதிகளின் படங்கள் என்றும், இதை இந்தியா செய்துள்ளதாகவும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் அறிவியல் உணர்வு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மனோபாவத்தை உலகமே அங்கீகரித்துள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

 

சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சொந்தமானது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டத்தின் ஆய்வுகள் பிற நாடுகளின் நிலவுப் பயணங்களுக்கான வாய்ப்புகளுக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் என்று சுட்டிக் காட்டினார். இந்தப் பணி நிலவின் ரகசியங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பூமியில் உள்ள சவால்களை சமாளிக்கவும் பங்களிக்கும் என்று அவர் கூறினார். சந்திரயான் 3 திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், பொறியாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்தார்.

 

சந்திரயான் -3-ன் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். சிவனில், மனிதகுலத்தின் நலனுக்கான தீர்மானம் உள்ளது எனவும் அந்த தீர்மானங்களை நிறைவேற்றும் சக்தி நமக்கு வலிமையை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். நிலவின் இந்த சிவ சக்திப் புள்ளி இமயமலை மற்றும் கன்னியாகுமரியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

அறிவியல் ரீதியாகத் தீர்வுகளைத் தேடுவதன் நலன்களை எடுத்துரைத்த பிரதமர், இந்த புனிதமான தீர்மானங்களுக்கு சக்தியின் ஆசீர்வாதம் தேவை என்றும், அந்த சக்தி நமது பெண்களின் சக்தி என்றும் கூறினார். சந்திரயான் -3 சந்திர பயணத்தின் வெற்றியில், நமது பெண் விஞ்ஞானிகள், நாட்டின் மகளிர் சக்தியினர் ஆகியோர் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். சந்திரனின் சிவ சக்தி புள்ளி இந்தியாவின் இந்த அறிவியல் மற்றும் தத்துவ சிந்தனைக்கு சாட்சியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

 

சந்திராயன் 2 தனது தடங்களை விட்டுச் சென்ற இடம் இனி 'திரங்கா' (மூவர்ணக் கொடி) என்று அழைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். இந்தப் புள்ளி, இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என்றும், தோல்வி முடிவல்ல என்பதை நமக்கு நினைவூட்டும் என்றும் பிரதமர் கூறினார். வலுவான மன உறுதி இருக்கும் இடத்தில் வெற்றி என்பது உறுதி செய்யப்படும்  என்று அவர் கூறினார்.

 

நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4 வது நாடாக இந்தியா மாறியுள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் எளிமையான தொடக்க செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது இந்த சாதனை மிகவும் மகத்தானது என்றார். இந்தியா மூன்றாம் உலக நாடாக கருதப்பட்டு, தேவையான தொழில்நுட்பமும் ஆதரவும் இல்லாமல் இருந்த காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். இன்று, இந்தியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றும், தொழில்நுட்பம் உள்பட எதுவாக இருந்தாலும் முதல் உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் கூறினார். மூன்றாவது வரிசையிலிருந்து முதல் வரிசை' நோக்கியப் பயணத்தில், நமது இஸ்ரோ' போன்ற நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன என்று பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும் இஸ்ரோ  இன்று இந்தியாவில் உற்பத்தி செய்து அதை (மேக் இன் இந்தியா) நிலவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

 

இஸ்ரோவின் கடின உழைப்பை அவர் எடுத்துரைத்தார். தென்னிந்தியாவில் இருந்து நிலவின் தென் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பயணம் எளிதானப் பயணம் அல்ல என்று கூறிய பிரதமர், இஸ்ரோ தமது ஆராய்ச்சி மையத்தில் ஒரு செயற்கை நிலவையும் உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார். இந்திய இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் அறிவியல் மீதான ஆர்வம் இத்தகைய விண்வெளிப் பயணங்களின் வெற்றிகளுக்குக் காரணம் என்று பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். மங்கள்யான் மற்றும் சந்திரயான் ஆகியவற்றின் வெற்றிகள் மற்றும் ககன்யானுக்கான ஏற்பாடு ஆகியவை நாட்டின் இளம் தலைமுறையினருக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுத்துள்ளன என்று அவர் கூறினார். இந்தியர்களின் ஒரு தலைமுறையினரை விழிப்படையச் செய்து, அதை உற்சாகப்படுத்துவதே உங்கள் பெரிய சாதனை என்று திரு நரேந்திர மோடி கூறினார். இன்று, சந்திரயானின் பெயர் இந்தியக் குழந்தைகள் மத்தியில் எதிரொலிப்பதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் தமது எதிர்காலத்தை விஞ்ஞானிகளிடம் பார்க்கிறது என்று அவர் கூறினார்.

 

நிலவில் சந்திரயான் 3, மென்மையாக தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதி 'தேசிய விண்வெளி தினமாக' இனி கொண்டாடப்படும் என்று பிரதமர் அறிவித்தார். தேசிய விண்வெளி தினம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உணர்வைக் கொண்டாடும் என்றும், இவற்றின் அன்றாட செயல்பாடுகளுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

விண்வெளித் துறையின் திறன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி ஆய்வுகளுடன் நின்றுவிடவில்லை என்றும், அதன் வலிமையை வாழ்க்கை மற்றும் நிர்வாகத்தை எளிதாக்குவதில் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தான் பிரதமராக இருந்த தொடக்க ஆண்டுகளில் இஸ்ரோவுடன் மத்திய அரசின் இணைச் செயலாளர் நிலையிலான அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டப் பயிலரங்கை அவர் நினைவு கூர்ந்தார். விண்வெளிப் பயன்பாடுகளை ஆட்சி நிர்வாகத்துடன் இணைப்பதில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றத்தை அவர் குறிப்பிட்டார். தூய்மை இந்தியா இயக்கத்தில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து அவர் குறிப்பிட்டார். தொலைதூரப் பகுதிகளுக்கு கல்வி, தகவல் தொடர்பு மற்றும் சுகாதார சேவைகள், தொலை மருத்துவம் தொலைக் கல்வி போன்றவற்றை வழங்குவதில் விண்வெளித் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது என்று அவர் கூறினார். இயற்கை சீற்றங்களின் போது நாவிக் (NAVIC) எனப்படும் செயற்கைக் கோள் தொழில்நுட்ப முறையில் பங்கு குறித்தும் அவர் பேசினார். விண்வெளித் தொழில்நுட்பமும் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டமும் அடிப்படையில் ஆனதாகும் என அவர் தெரிவித்தார். இது திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது என அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில் அதிகரித்து வரும் விண்வெளிப் பயன்பாடுகள், நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.

 

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுடன் இணைந்து 'நிர்வாகத்தில் விண்வெளித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தேசிய ஹேக்கத்தான்களை ஏற்பாடு செய்யுமாறு இஸ்ரோவை பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த தேசிய ஹேக்கத்தான் நமது நிர்வாகத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் எனவும் நாட்டு மக்களுக்கு நவீனத் தீர்வுகளை வழங்கும் என்றும் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

 

நாட்டின் இளம் தலைமுறையினருக்கு பிரதமர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். புதிய தலைமுறையினர், இந்திய வேதங்களில் உள்ள வானியல் சூத்திரங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும், அவற்றைப் புதிதாக ஆய்வு செய்யவும் முன்வர வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார். இது நமது பாரம்பரியத்திற்கும் அறிவியலுக்கும் முக்கியமானது என அவர் கூறினார். ஒருவகையில் இன்று பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு இது இரட்டைப் பொறுப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா பெற்றுள்ள அறிவியல் அறிவின் பொக்கிஷம், நீண்ட கால அடிமைத்தனத்தின் போது மறைக்கப்பட்டதாக அவர் கூறினார். விடுதலையில் இந்த அமிர்தக் காலத்தில், நாம் அந்தப் பொக்கிஷத்தை ஆராய்ந்து, ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதைப் பற்றி உலகுக்குச் சொல்ல வேண்டும்  என்றும் கேட்டுக் கொண்டார்.

 

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை 8 பில்லியன் டாலரில் இருந்து 16 பில்லியன் டாலரை எட்டும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டார். விண்வெளித் துறை சீர்திருத்தங்களுக்காக அரசு அயராது உழைத்து வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில், விண்வெளி தொடர்பான புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 150-ஆக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதில் நாட்டின் இளைஞர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் கூறினார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மைகவ் தளம் ஏற்பாடு செய்துள்ள சந்திரயான் திட்டம் குறித்த மிகப்பெரிய விநாடி வினாப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

21 ஆம் நூற்றாண்டின் இந்த காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்தியா உலகின் மிக இளம் திறமையாளர்களின் மையமாக மாறியுள்ளது என்று கூறினார். கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரங்கள் வரை, விண்வெளியின் உச்சங்கள் வரை, இளம் தலைமுறையினர் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்று கூறிய பிரதமர், 'ஆழமான பூமி' முதல் மிக ஆழமான பெருங்கடல்கள் வரை, கணினி முதல் மரபணுப் பொறியியல் வரை பல துறைகளில் அடுத்த தலைமுறையினருக்கு உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தார். இந்தியாவில் புதிய வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன  என்று அவர் மேலும் கூறினார்.

 

எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுதல் அவசியம் என்றும், அவர்கள்தான் இன்றைய முக்கியப் பணிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். விஞ்ஞானிகள் முன்மாதிரிகள் என்றும், அவர்களின் ஆராய்ச்சி மற்றும் பல ஆண்டுகால கடின உழைப்பு இளைஞர்களின் மனதை வடிவமைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

விஞ்ஞானிகள் மீது நாட்டு மக்களுக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். மக்களின் ஆசீர்வாதத்துடனும், நாட்டின் மீது காட்டப்படும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகளாவிய முன்னோடி நாடாக மாறும் என்று அவர் கூறினார். 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்கு,  புதுமைகள் மீதான ஆர்வ உணர்வு உத்வேகம் அளிக்கும் என்று கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

----

ANU/AP/PLM/DL


(Release ID: 1952390) Visitor Counter : 323