நிலக்கரி அமைச்சகம்
எஸ்இசிஎல் நிறுவனம் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வழங்குகிறது- மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் நிலக்கரி வயல் பகுதிகளைச் சேர்ந்த ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள்
Posted On:
22 AUG 2023 1:51PM by PIB Chennai
சத்தீஸ்கரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்இசிஎல் (South Eastern Coalfields Limited) நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆர்) ஒரு பகுதியாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கான இலவச உறைவிடப் பயிற்சியை வழங்குகிறது.
இது மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் நிலக்கரி வயல் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இந்தப் பயிற்சிக்கு மாணவர்கள், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் பிலாஸ்பூரைச் சேர்ந்த தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து மொத்தம் 35 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவும் உள்ளது.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க 2023-ம் ஆண்டில் 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மத்தியப்பிரசேதம் அல்லது சத்தீஸ்கரில் எஸ்இசிஎல் நிறுவனத்தின் நிலக்கரி வயல்கள் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு எஸ்இசிஎல் இணையதளமான https://secl-cil.in/index.php என்ற தளத்தைப் பார்க்கலாம்.
இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 6, 2023 ஆகும். செப்டம்பர் 10-ம் தேதி தேர்வு நடைபெறும்.
-------------
AP/ANU/PLM/RS/KPG
(Release ID: 1951048)
Visitor Counter : 155