சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜி 20 இந்தியத் தலைமைத்துவம்
எங்கள் பார்வை தெளிவானது, எங்கள் இலக்குகள் உயர்வானவை, எங்கள் உறுதி தளர்வில்லாதது: டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
20 AUG 2023 12:51PM by PIB Chennai
"எங்கள் பார்வை தெளிவானது, எங்கள் இலக்குகள் உயர்வானவை, எங்கள் உறுதி தளர்வில்லாதது" என்று காந்திநகரில் நடைபெற்ற ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய சுகாதாரம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் இந்தியாவின் திறமையைப் பெருமையுடன் வெளிப்படுத்திய டாக்டர் மாண்டவியா , உலகளாவிய மருந்துத்துறையில் இந்தியா ஒரு மைல்கல்லாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார். குறைந்த செலவில், உயர்தர மருந்துகளை வழங்குவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அணுகலில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இக்கூட்டத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன, உலகின் தடுப்பூசி தேவைகளில் சுமார் 60% மற்றும் பொதுவான ஏற்றுமதியில் 20-22% இந்தியா வழங்குகிறது.
மனிதகுல நல்வாழ்வில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் குறிப்பாகக் கொவிட் -19 தொற்றுநோயின் போது இது நிரூபிக்கப்பட்டதையும் டாக்டர் மாண்டவியா சுட்டிக் காட்டினார். தொற்றுநோய்க்கு எதிரானப் போரில், இந்தியா சுமார் 185 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கியதையும் உலகளாவிய தலைவராக இந்தியாவின் பங்கினையும் அவர் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். சுகாதாரத்தில் தரம், அணுகல், மலிவு ஆகியவற்றுக்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சுகாதார முன்னேற்றத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் மாண்டவியா, புதுமையான சூழலை வளர்ப்பதில் இந்தியாவின் முன்னேற்றங்களை அறிவித்தார். மருந்து-மருத்துவ சாதனங்கள் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான தேசியக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான இறுதிக் கட்டத்தில் இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.
நாடுகள், அரசு அமைப்புகள், தொழில்துறை தலைவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்த இந்த முயற்சியில் கைகோர்க்க அழைப்பு விடுத்தார். "எங்கள் கூட்டு பலம் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறைகளை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டுசெல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளது" என்று அவர் பிரகடனம் செய்தார்.
இந்தோனேசியக் குடியரசின் சுகாதார அமைச்சர் திரு புடி ஜி சாடிகின், நெதர்லாந்து அமைச்சர் டாக்டர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் ஆகியோர் தங்கள் தொடக்க உரையில் சுகாதாரம் மற்றும் மருந்தியலில் இந்தியாவின் வெற்றியை எடுத்துரைத்தனர், மேலும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் நெதர்லாந்திலும், ஐரோப்பாவிலும், உலகம் முழுவதிலும் உயிர்களைக் காப்பாற்றுகின்றன. இந்தியாவுடனான ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த நான் ஆவலாக உள்ளேன். புதுமையான மருந்துகளில் கூட்டாண்மைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. அடிப்படை மற்றும் குறிப்பிட்ட மருந்துகளில் இந்தியாவிடம் உள்ள திறன் மற்றும் அறிவுடன் மேலும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று டாக்டர் குய்ப்பர்ஸ் கூறினார்.
டாக்டர் மாண்டவியா இன்று இந்தோனேசிய சுகாதார அமைச்சருடன் வெற்றிகரமான இருதரப்பு சந்திப்பை நடத்தினார். சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.
மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறை செயலாளர் திருமதி எஸ்.அபர்ணா, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு என்ற பொதுவான இலக்கை நோக்கிய பயணத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் இது போன்ற தளம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
இந்தோனேசிய சுகாதார அமைச்சர் திரு புடி ஜி சாதிகின் உட்பட ஜி 20 பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய தூதுக்குழுவை டாக்டர் மாண்டவியா மக்கள் மருந்தக மையத்திற்கு அழைத்துச்சென்றார். குடிமக்களுக்கு அணுகக்கூடிய வகையில், மலிவான மற்றும் தரமான மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் வெற்றியை அவர்களுடன் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
"இந்தோனேசிய மக்களுக்கு சிறந்த மருந்துகளை வழங்க நான் விரும்புகிறேன். பல்வேறு நாடுகளின் பல மாதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், மக்களுக்கு அணுகக்கூடிய வகையில், மலிவான மற்றும் தரமான மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் மக்கள் மருந்தக மையம் உலகின் மிகச் சிறந்த மாதிரியாகும்" என்று திரு புடி ஜி சாதிகின் கூறினார்.
******
ANU/AP/SMB/KRS
(Release ID: 1950592)
Visitor Counter : 299