பிரதமர் அலுவலகம்
ஜி 20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் வீடியோ செய்தியின் உரை
Posted On:
19 AUG 2023 9:44AM by PIB Chennai
மதிப்புக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, வணக்கம்!
'நம்ம பெங்களூரு'வுக்கு உங்களை வரவேற்கிறேன்.இது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் உணர்வின் தாயகமாகும். டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்க பெங்களூரை விட சிறந்த இடம் இல்லை!
நண்பர்களே,
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் முன்னெப்போதும் இல்லாதது. இது 2015 ஆம் ஆண்டில் எங்கள் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. புதுமையின் மீதான நமது அசைக்க முடியாத நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது. விரைந்து செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டால் இது இயக்கப்படுகிறது. மேலும், இது யாரையும் விட்டுவைக்காமல், நமது உள்வாங்கும் மனப்பான்மையால் உந்தப்படுகிறது.இந்த மாற்றத்தின் அளவு, வேகம் மற்றும் நோக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இன்று, இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயன்பாட்டாளர்கள் உலகின் மலிவான தரவு செலவுகளை அனுபவிக்கின்றனர். நிர்வாகத்தை மாற்றுவதற்கும், அதை மிகவும் திறமையான, அனைவரையும் உள்ளடக்கிய, விரைவான மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும் நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். நமது தனித்துவ டிஜிட்டல் அடையாளத் தளமான ஆதார், 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார், மொபைல் ஆகிய ஜாம் மும்மூர்த்திகளின் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் நிதிச் சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 10 பில்லியன் பரிவர்த்தனைகள் எங்கள் உடனடிக் கட்டண அமைப்பான யுபிஐயில் நடைபெறுகின்றன. உலகளாவிய நிகழ்நேரப் பரிவர்தனைகளில் 45% க்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்கின்றன. நேரடிப் பயன்கள் அரசு உதவிப் பரிமாற்றக் கசிவுகளை சரிசெய்கின்றன. மேலும் 33 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தியுள்ளது.கோவின் போர்ட்டல் இந்தியாவின் கொவிட் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது. இது டிஜிட்டல் முறையில் சரிபார்க்கும் சான்றிதழ்களுடன் 2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்க உதவியது. காதி-சக்தி தளம் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களை வரைபடமாக்க தொழில்நுட்பம் மற்றும் இடஞ்சார்ந்த திட்டமிடலைப் பயன்படுத்துகிறது.இது திட்டமிடுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், விநியோகத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.எங்கள் ஆன்லைன் பொது கொள்முதல் தளமான அரசு இ-சந்தை இந்த செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கொண்டு வந்துள்ளது.டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் இ-வணிகத்தை ஜனநாயகப்படுத்துகிறது. முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மின் ஆளுமையை ஊக்குவிக்கின்றன.செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியை உருவாக்கி வருகிறோம். இது இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு உதவும்.
மேதகு தலைவர்களே,
இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலகளாவிய சவால்களுக்கு, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகளை வழங்குகிறது. இந்தியா நம்பமுடியாத பன்முகத்தன்மை கொண்ட நாடு. நம்மிடம் டஜன் கணக்கான மொழிகளும் நூற்றுக்கணக்கான கிளைமொழிகளும் உள்ளன. உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும், எண்ணற்ற கலாச்சார நடைமுறைகளுக்கும் இது வீடாகும். பண்டைய பாரம்பரியங்கள் முதல், சமீபத்திய தொழில்நுட்பங்கள் வரை, இந்தியா அனைவருக்குமான கொண்டுள்ளது. இத்தகைய பன்முகத்தன்மையுடன், தீர்வுகளுக்கான சிறந்த சோதனை ஆய்வகமாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் வெற்றி பெறும் ஒரு தீர்வை, உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இந்தியா தனது அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது. கொவிட் தொற்றுநோயின் போது உலகளாவிய நன்மைக்காக எங்கள் கோவின் தளத்தை நாங்கள் வழங்கினோம். நாங்கள் இப்போது ஒரு ஆன்லைன் உலகளாவிய பொது டிஜிட்டல் பொருட்கள் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம் - இந்தியா ஸ்டாக். யாரும் குறிப்பாக வளரும் நாடுகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை.
மேதகு தலைவர்களே,
ஜி 20 மெய்நிகர் உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சியத்தை உருவாக்க நீங்கள் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கான பொதுவான கட்டமைப்பில் முன்னேற்றம் அனைவருக்கும் வெளிப்படையான, பொறுப்பான மற்றும் நியாயமான டிஜிட்டல் சூழலை உருவாக்க உதவும். டிஜிட்டல் திறன்களின் நாடு கடந்த ஒப்பீட்டை எளிதாக்குவதற்கான, ஒரு வரைபடத்தை உருவாக்குவதற்கான, டிஜிட்டல் திறன் குறித்த மெய்நிகர் சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான உங்கள் முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். இவை எதிர்காலத்தில் தயாராக இருக்கும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியமான முயற்சிகளாகும். டிஜிட்டல் பொருளாதாரம் உலக அளவில் பரவுவதால், அது பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும். இந்தச் சூழலில், பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்திறன் கொண்ட டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஜி 20 உயர் மட்ட கொள்கைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவது முக்கியம்.
நண்பர்களே,
முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பம் நம்மை இணைத்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உறுதிமொழியை இது கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் பாதுகாப்பான உலகளாவிய டிஜிட்டல் எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைக்க ஜி 20-ல் உள்ள எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும். உலகளாவிய டிஜிட்டல் சுகாதார சூழலை உருவாக்குவதற்கான கட்டமைப்பை நாம் நிறுவ முடியும். செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான கட்டமைப்பையும் நாம் உருவாக்க முடியும். உண்மையில், மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளின் முழு சூழலையும் நாம் உருவாக்க முடியும். நம்பிக்கை, அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகிய நான்கு மட்டுமே எங்களிடமிருந்து தேவைப்படுகிறது. அந்தத் திசையில் உங்கள் குழு எங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள விவாதம் நடக்க வாழ்த்துகிறேன்.நன்றி! மிகவும் நன்றி!
******
ANU/AP/SMB/DL
(Release ID: 1950363)
Visitor Counter : 163
Read this release in:
Assamese
,
Marathi
,
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam