சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய மருத்துவத் தொழில்நுட்பக் கண்காட்சி 2023-ஐ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 17 AUG 2023 4:36PM by PIB Chennai

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில்  "மருத்துவ சாதனப் பூங்காக்கள்" மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல்: மத்திய அமைச்சர்

"உலகின் மருந்தகம் என்ற அங்கீகாரத்தை இந்தியா பெற்றுள்ளது. மருத்துவ சாதனங்கள் துறையில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டிய நேரம் இது.  மலிவான விலையில் புதுமையான மற்றும் தரமான மருத்துவ சாதனங்களின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கவேண்டும்" என்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறும்  இந்தியாவின் முதலாவது மருத்துவத் தொழில்நுட்பக் கண்காட்சியான 'இந்தியா மெட் டெக் எக்ஸ்போ 2023'-ஐத் தொடங்கிவைத்துப் பேசிய  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அவருடன் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், குஜராத் அரசின் சுகாதார அமைச்சர் திரு ருஷிகேஷ் படேல் ஆகியோரும்   கலந்து கொண்டனர்.

"மெட்டெக் எக்ஸ்போ 2023, இந்தியாவை தற்சார்பு ஆக்குவதற்கான மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கு பார்வையிலிருந்து உத்வேகம் பெறுகிறது. இது இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்திச்சூழலின் வலிமை மற்றும் திறனை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான, அனைத்தையும் உள்ளடக்கிய தளமாக இருக்கும்" என்று  டாக்டர் மாண்டவியா கூறினார். வளர்ந்து வரும் சந்தைகளில்,  வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ சாதனங்களின் சந்தை இந்தியா என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"மருத்துவ சாதனத் துறையில் தன்னிறைவு பெறுவதும், நமது இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதும் எங்கள் குறிக்கோளாகும். இது தற்சார்பு இந்தியா மற்றும் "இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி" என்ற எங்கள் பார்வையுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது என்று மத்திய அமைச்சர் கூறினார். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் தடையற்ற முறையில் 100 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. "இந்தியாவில் உள்ள மருத்துவ சாதனங்கள் துறையைப் பொறுத்தவரை, மாண்புமிகு பிரதமரின் திறமையான தலைமையின் கீழ் அரசு பல விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தளர்த்துதல்,  வணிகத்தை எளிதாக்குவது, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் முதலீட்டு வழிமுறைகளை எளிமைப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது  என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்தத் துறையில்  மத்திய அரசு எடுத்துள்ள புதிய முயற்சிகளை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, "தேசிய மருத்துவ சாதனக் கொள்கை 2023 தவிர,உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்கவும், நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சோதனை வசதிகளை வலுப்படுத்தவும் மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதி-ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் மருத்துவ சாதன குழுமத்தின் உதவிக்கான திட்டத்தை அரசு அண்மையில்  தொடங்கியுள்ளது" என்று கூறினார். மருத்துவ சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் தொடங்கப்பட்டது, மருத்துவ சாதனங்களின் நான்கு இலக்குப் பிரிவுகளுக்கு மொத்தம் ரூ.3,420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். "பொது உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், உற்பத்திக்கு ஊக்கமளிப்பதற்கும், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் ரூ.400 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் "மருத்துவ சாதனப் பூங்காக்களை மேம்படுத்துதல்" திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார். இத்திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.100 கோடி நிதியுதவி வழங்க இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மெட் டெக் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான எல்லையற்ற திறனுக்கு சான்றாக மெட்டெக் எக்ஸ்போ தொகுப்பு,  இந்தியாவின் மருந்துத் துறை குறித்த காபி டேபிள் புத்தகம் ஆகியவற்றை  இந்த நிகழ்வில் பிரமுகர்கள் வெளியிட்டனர்.

குஜராத் அரசின் தலைமைச் செயலாளர் திரு ராஜ் குமார்; தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,  திரு எஸ்.ஜே.ஹைதர், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத் தலைவர் திரு கமலேஷ் குமார் பந்த்,  ஃபிக்கி (இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் கூட்டமைப்பு) தலைவர், திரு துஷார் சர்மா, டிரான்சியா பயோமெடிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு சுரேஷ் வஜிராணி மற்றும் அரசு, தொழில்துறை மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

                                 *****
ANU/SM/SMB/KRS



(Release ID: 1949999) Visitor Counter : 170