பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுவின் 7-வது கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமை வகித்தார்

புதுதில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது

உச்சி மாநாட்டிற்கு வர 3200-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்

Posted On: 08 AUG 2023 6:15PM by PIB Chennai

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுவின் ஏழாவது கூட்டம் புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (08-08-2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் உச்சிமாநாட்டின் ஆயத்தப் பணிகள் மற்றும் போக்குவரத்து அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி 20 பிரதிநிதி (ஷெர்பா) மற்றும் நிதிக் கட்டமைப்பு என இரண்டு பிரிவுகளின் செயல்பாடுகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ஜி 20 பிரதிநிதி (ஷெர்பா), பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் ஆகியோர் இது தொடர்பாக விளக்கமளித்தனர். பசுமை மேம்பாடு, நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல் (எஸ்.டி.ஜி), வலுவான, நிலையான, சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பாலின சமத்துவம் மற்றும் பலதரப்பு நிறுவனங்களின் சீர்திருத்தம் உள்ளிட்ட இந்திய தலைமைத்துவத்தின் முன்னுரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுவரை, அமைச்சர்கள் நிலையிலான 13 கூட்டங்கள் உட்பட மொத்தம் 185 கூட்டங்கள் நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளடக்கியதாக இந்தியாவின் ஜி 20 பிரதிநிதி (ஷெர்பா) தெரிவித்தார். 12 தீர்மான ஆவணங்களைத் தவிர, ஒருமித்த கருத்துடன் கூடிய மேலும் 12 தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்று இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிரிப்டோ சொத்துகள், நிதி உள்ளடக்கம், பருவநிலை நிதி, மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிதித் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட நிதி தொடர்பான அம்சங்களில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் தெரிவித்தார்.

ஊடக மையம் அமைத்தல், ஊடக அங்கீகாரம் போன்ற ஏற்பாடுகள் குறித்து தகவல் ஒலிபரப்புத்துறைச் செயலாளர் விளக்கினார். இதுவரை, 1800 வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட உள்நாட்டு ஊடகங்கள் உட்பட 3200 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உச்சிமாநாட்டிற்கு வரப் பதிவு செய்துள்ளனர் எனவும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவது குறித்து  முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். மாநாட்டை முன்னிட்டு தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழகுபடுத்தும் நடவடிக்கைகள், போக்குவரத்து மேலாண்மை, விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தில்லி அரசு மற்றும் தில்லி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கினர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட பிரதமரின் முதன்மைச் செயலாளர், ஒத்திகை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அடுத்த சில நாட்களில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

சரியான நேரத்தில் போதுமான முன்னேற்பாடுகளை உறுதி செய்வதில் அரசின் முழுமையான அணுகுமுறை மற்றும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பிகே மிஸ்ரா வலியுறுத்தினார். உச்சிமாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடைசி நிலை வரையிலான  ஏற்பாடுகளுக்கான நேரம் இது என்று அவர் சுட்டிக்காட்டினார். விரிவான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், சுமூகமான நடைமுறைகளுக்காக அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கடமைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதிலுமிருந்து இளம் அதிகாரிகள் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்யும் பணிகளில் பங்கேற்கவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தில்லி துணைநிலை ஆளுநர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***

ANU/SM/PLM/KRS



(Release ID: 1946892) Visitor Counter : 97