உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

Posted On: 04 AUG 2023 5:02PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம்  கையளிக்கப்படவுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஐந்து உறுதிமொழிகளை நாட்டின் முன் வைத்துள்ளார், அவற்றில் இரண்டு பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் அடிமைத்தனத்தின் அடையாளங்களை அழிப்பதாகும். இவற்றை  100% செயல்படுத்துவதற்கு, அனைத்து இந்திய மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழியும் தங்கள் வலிமையைக் காட்ட வேண்டும் என்று திரு ஷா கூறினார். மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறினார். இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை, அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்று திரு ஷா கூறினார். ஆட்சிமொழியின் வேகம் மந்தமாக இருந்தாலும், எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல், அதற்கான ஏற்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

 

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை 10 மொழிகளில் தொடங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்முயற்சி எடுத்துள்ளார் என்றும், விரைவில் இந்த படிப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கும் என்றும், அந்த தருணம் உள்ளூர் மொழிகள் மற்றும் அலுவல் மொழிகளின் எழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலகளாவிய மேடையில் பெருமையுடன் முன்வைப்பதால், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு வேறு எந்த சாதகமான தருணமும் இருக்க முடியாது என்று அவர் கூறினார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு உரை கூட ஆங்கிலத்தில் ஆற்றியதில்லை, அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர், இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது.

 

அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை, மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது என்று திரு அமித் ஷா கூறினார். அடிமைக் காலத்திற்குப் பிறகும் இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் அப்படியே இருந்தன, இது ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். நமது நாட்டை ஒன்றிணைக்க மொழிகள் வேலை செய்துள்ளன என்று திரு ஷா கூறினார்.

 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் ஒன்பது தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், 2019 முதல் மூன்று தொகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த தொகுதிகள் பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், 12 வது தொகுதியின் கருப்பொருள் 'எளிமைப்படுத்துதல்' என்றும் அவர் கூறினார். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த அமித் ஷா, எதிர்காலத்திலும் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் குழு தொடர்ந்து பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் திரு. பர்த்ருஹரி மஹ்தாப், மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு அஜய் குமார் மிஸ்ரா, திரு நிஷித் பிரமானிக் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

*******



(Release ID: 1945950) Visitor Counter : 184