பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்


புனே மெட்ரோவின் முடிக்கப்பட்ட பிரிவுகளைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் மெட்ரோ ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார்

கழிவுகளில் இருந்து எரிசக்தி நிலையம் திறப்பு

"புனே ஒரு துடிப்பான நகரமாகும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கிறது மற்றும் ஒட்டு மொத்த தேசத்து இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகிறது"

“குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது”

"நவீன இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ புதிய உயிர்நாடியாக மாறி வருகிறது"

"மகாராஷ்டிராவின் தொழில்துறை வளர்ச்சி சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது"

“ஏழையாக இருந்தாலும், நடுத்தர மக்களாக இருந்தாலும், அனைத்துக் கனவையும் நிறைவேற்றுவது மோடியின் உத்தரவாதம்”

Posted On: 01 AUG 2023 3:11PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனே மெட்ரோவின் முடிக்கப்பட்ட பிரிவுகளைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் மெட்ரோ ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பிம்ப்ரி சின்ச்வாட்  மாநகராட்சியில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்  (பிஎம்ஏஒய்) கீழ் கட்டப்பட்ட 1280-க்கும் அதிகமான  வீடுகளையும், புனே மாநகராட்சியால் கட்டப்பட்ட 2650-க்கும் அதிகாமான  பிஎம்ஏஒய் வீடுகளையும் அவர் பயனாளிகளுக்கு வழங்கினார். இம்மாநகராட்சியால்  கட்டப்பட உள்ள சுமார் 1190 பி.எம்.ஏ.ஒய் வீடுகளுக்கும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்படும் 6400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பி.சி.எம்.சி.யின் கீழ் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஆகஸ்ட் மாதம் கொண்டாட்டங்கள் மற்றும் புரட்சிகளின் மாதம் என்று கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் புனே நகரின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், பால கங்காதர திலகர் உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நகரம் நாட்டிற்குத் தந்துள்ளது என்றார். சமூக சீர்திருத்தவாதியாகவும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவருமான மாபெரும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்றும் அவர் தெரிவித்தார். இன்றும் கூட, பல மாணவர்களும் கல்வியாளர்களும் அவரது இலக்கியப் படைப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றும், அவரது பணிகளும் லட்சியங்களும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

"புனே ஒரு துடிப்பான நகரமாகும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கிறது மற்றும் ஒட்டு மொத்த தேசத்து இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகிறது. ரூ.15 ஆயிரம் கோடி  மதிப்புள்ள  இன்றைய திட்டங்கள் இந்த அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்", என்று பிரதமர் கூறினார்.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் குறித்த அரசின் அக்கறையைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தக் காலகட்டத்தில் 24 கி.மீ மெட்ரோ நெட்வொர்க் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளது என்றார். 

ஒவ்வொரு நகரத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைத் திரு மோடி வலியுறுத்தினார். எனவே, மெட்ரோ நெட்வொர்க் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், நாட்டில் 250 கி.மீ மெட்ரோ நெட்வொர்க் மட்டுமே இருந்தது என்றும், பெரும்பாலான மெட்ரோ பாதைகள் தில்லி வரை மட்டுமே வரையறுக்கப்பட்ட நிலையில், இன்று, மெட்ரோ நெட்வொர்க் 800 கி.மீ-ஐத் தாண்டியுள்ளது என்றும், நாட்டில் 1000 கி.மீ புதிய மெட்ரோ பாதைகளுக்கான பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், மெட்ரோ நெட்வொர்க் இந்தியாவில் 5 நகரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது, ஆனால் இன்று, புனே, நாக்பூர், மும்பை உள்ளிட்ட 20 நகரங்களில் மெட்ரோ செயல்படுகிறது, அங்கு நெட்வொர்க் விரிவுபடுத்தப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். "நவீன இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ புதிய உயிர்நாடியாக மாறி வருகிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், புனே போன்ற நகரத்தில் காலநிலை மாற்றத்தை சமாளிக்க மெட்ரோ விரிவாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.  

நகர்ப்புற வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தூய்மையின் பங்களிப்பை  திரு. மோடி வலியுறுத்தினார். தூய்மை இந்தியா இயக்கம்  என்பது கழிவறை வசதியுடன் நின்றுவிடாமல், கழிவு மேலாண்மைக்கும் அதிக கவனம் செலுத்தும் பகுதியாகும் என்றார். இயக்க முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன என்று கூறிய பிரதமர், பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியின் கீழ் உள்ள கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலையின் நன்மைகளை  விவரித்தார். 

"மகாராஷ்டிராவின் தொழில்துறை வளர்ச்சி சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு மேற்கொண்டு வரும் முதலீடுகளை எடுத்துரைத்தார். மாநிலத்தில் புதிய விரைவுச் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் விமான நிலையங்களின் வளர்ச்சிக்கான உதாரணங்களை அவர் எடுத்துக்காட்டினார். ரயில்வே விரிவாக்கத்திற்கு, 2014 க்கு முந்தைய காலத்தைவிட 12 மடங்கு செலவு அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களும் அண்டை மாநிலங்களின் பொருளாதார மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில், மகாராஷ்டிராவை மத்தியப் பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இணைக்கும் தில்லி - மும்பை பொருளாதார வழித்தடம், மகாராஷ்டிரா மற்றும் வட இந்தியாவுக்கு இடையிலான ரயில் இணைப்பைக் கொண்ட  தேசிய பிரத்யேக சரக்கு வழித்தடம் மற்றும் சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் இதர  மாநிலங்களுடன் மகாராஷ்டிரா மாநிலத்தை இணைப்பதற்கான  நெட்வொர்க் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். தொழிற்சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், ஔரங்காபாத் தொழில்துறை நகரம், நவி மும்பை விமான நிலையம்,  ஷேந்திர பிட்கின் தொழில்துறை பூங்கா ஆகியவற்றுக்கு இது பயனளிக்கும். இதுபோன்ற திட்டங்கள் மகாராஷ்டிராவின் பொருளாதாரத்தில் புதிய ஆற்றலை ஊக்குவிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

மாநில வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் அரசு முன்னேறி வருவதாகப் பிரதமர் கூறினார். “மஹாராஷ்டிரா வளர்ச்சி அடையும் போது, இந்தியா வளர்ச்சி அடையும். இந்தியா வளரும்போது, மகாராஷ்டிராவும் நன்மைகளைப் பெறும்", என்று அவர் கூறினார். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் மையமாக வளர்ந்து வரும் இந்தியாவின் அடையாளத்தைக் குறிப்பிட்ட பிரதமர்,  9 ஆண்டுகளுக்கு முன்பு சில நூறுகளாக இருந்ததுடன் ஒப்பிடும்போது இந்தியா தற்போது 1 லட்சம் ஸ்டார்ட்அப்களைக் கடந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த வெற்றிக்குக் காரணமான  டிஜிட்டல் உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தைப் பாராட்டிய அவர், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அடித்தளத்தில் புனேயின் பங்களிப்பைப் புகழ்ந்துரைத்தார். “மலிவான டேட்டா, மலிவு விலை தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றடைவது இத்துறையை வலுப்படுத்தியுள்ளது. 5 ஜி சேவைகளை விரைவாக அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்" என்று அவர் கூறினார். ஃபின்டெக், பயோடெக், அக்ரிடெக் ஆகியவற்றில் இளைஞர்களின் முன்னேற்றம் புனேவுக்கு பயனளிக்கிறது என்றும் அவர்  கூறினார். 

கர்நாடகா மற்றும் பெங்களூரில் அரசியல் சுயநலத்தின் விளைவுகள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார். கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் வளர்ச்சி முடங்கியுள்ளதற்கும்  அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

"நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல, கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் விதிகள் சமஅளவு முக்கியம்" என்று திரு மோடி கூறினார். இது வளர்ச்சியை நிர்ணயிக்கும் நிலை என்றார். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் 2 திட்டங்களில் 8 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 50 ஆயிரம் வீடுகள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரமற்றவை என்று பயனாளிகளால் நிராகரிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார். 

இதன் பின்னர் சரியான நோக்கத்துடன் அரசு செயல்படத் தொடங்கியதாகவும், 2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கொள்கையை மாற்றினோம் என்று பிரதமர் கூறினார். இதையடுத்து கடந்த 9 ஆண்டுகளில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏழைகளுக்காக  4 கோடிக்கும் அதிகமான வீடுகளை அரசு கட்டியுள்ளது என்றும், நகர்ப்புற ஏழைகளுக்காக 75 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். கட்டுமானத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை, அவற்றின் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார். நாட்டிலேயே முதன்முறையாக இன்று பதிவு செய்யப்பட்ட வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வீடுகளின் விலை பல லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் இப்போது 'லட்சாதிபதி'களாக மாறியுள்ளனர் என்று உறுதிபடக் கூறினார். புதிய வீடுகளைப் பெற்ற அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

"ஏழைகளாக இருந்தாலும்,  நடுத்தர குடும்பமாக இருந்தாலும், அனைத்துக் கனவையும் நிறைவேற்றுவது மோடியின் உத்தரவாதம்", என்று அவர் கூறினார். ஒரு கனவை நனவாக்குவது பல தீர்மானங்களின் தொடக்கமாக அமைகிறது. அது அந்த நபரின் வாழ்க்கையில் ஓர் உந்து சக்தியாக மாறுகிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "உங்கள் குழந்தைகள், உங்கள் நிகழ்காலம் மற்றும் உங்கள் எதிர்கால சந்ததியினரைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்", என்று அவர் மேலும் கூறினார். 

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதி இந்த உணர்வின் வெளிப்பாடு என்று அவர் கூறினார். மஹாராஷ்டிராவில் ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்த பல்வேறு கட்சிகளைப் போல ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். "அனைவரின் பங்களிப்புடன் மகாராஷ்டிராவுக்கு சிறந்த பணிகளைச் செய்ய முடியும், மகாராஷ்டிரா வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நோக்கம்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பயஸ்,  முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே,  துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னவிஸ், திரு அஜித் பவார் மற்றும் மகாராஷ்டிர அரசின் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பின்னணி 

புனே மெட்ரோ முதல் கட்டத்தின் இரண்டு வழித்தடங்களில் முடிக்கப்பட்ட பிரிவுகளில் சேவைகளைத் தொடங்குவதைக் குறிக்கும் மெட்ரோ ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு 2016-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். புதிய பிரிவுகள் சிவாஜி நகர், சிவில் நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், புனே ஆர்டிஓ அலுவலகம்,  புனே ரயில் நிலையம் போன்ற  நகரின் முக்கிய இடங்களை இணைக்கும். நாடு முழுவதும் நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த  விரைவான நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை குடிமக்களுக்கு வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒரு முக்கியமான படியாக இந்தத் திறப்பு விழா அமைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள சில மெட்ரோ நிலையங்களின் வடிவமைப்பு சத்ரபதி சிவாஜி மகாராஜிடமிருந்து உத்வேகம் பெறுகிறது. சத்ரபதி சம்பாஜி உத்யான் மெட்ரோ நிலையம் மற்றும் டெக்கான் ஜிம்கானா மெட்ரோ நிலையங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வீரர்கள் அணியும் தலைக்கவசத்தை ஒத்த ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. சிவாஜி நகர் நிலத்தடி மெட்ரோ நிலையம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது சத்ரபதி சிவாஜி மகாராஜால் கட்டப்பட்ட கோட்டைகளை நினைவூட்டுகிறது.

சிவில் கோர்ட் மெட்ரோ நிலையம் நாட்டின் ஆழமான மெட்ரோ நிலையங்களில் ஒன்றாகும், இது 33.1 மீட்டர்  ஆழத்தைக் கொண்டுள்ளது. நடைமேடையில்  நேரடியாக சூரிய ஒளி விழும் வகையில் நிலைய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியின் (பி.சி.எம்.சி) கீழ் உள்ள கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலையை பிரதமர் திறந்து வைத்தார். சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்.    

-----
 

ANU/AP/SMB/GK(Release ID: 1944757) Visitor Counter : 88