பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகரில் செமிகான்இந்தியா 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்


ஓராண்டில், 'இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்' என்பதில் இருந்து, 'இந்தியாவில் ஏன் முதலீடு செய்யக் கூடாது' என்ற கேள்வி மாறியுள்ளது

"தங்கள் கனவுகளை இந்தியாவின் திறன்களுடன் இணைப்பவர்களை இந்தியா ஏமாற்றுவதில்லை"

"ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் ஈவுத்தொகை இந்தியாவில் வணிகங்களை இரட்டிப்பாக்கும் மற்றும் மூன்று மடங்காகும்"

சுகாதாரம், விவசாயம் அல்லது தளவாடங்கள் எதுவாக இருந்தாலும், ஸ்மார்ட் தொழில்நுட்ப பயன்பாட்டின் தொலைநோக்கு பார்வையை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது

"உலகிற்கு நம்பகமான விநியோக சங்கிலி தேவை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை விட நம்பகமான கூட்டாளி யார் இருக்க முடியும்?

"குறைகடத்தி முதலீடுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த நாடாக மாறி வருகிறது"

"இந்தியா தனது உலகளாவிய பொறுப்புகளைப் புரிந்துகொண்டு, நட்பு நாடுகளுடன் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறது"

Posted On: 28 JUL 2023 1:18PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'இந்தியாவின் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல்' என்பதாகும். குறைகடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் குறைகடத்தி உத்தி மற்றும் கொள்கையை இது வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். செமி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு அஜித் மினோச்சா, இந்திய வரலாற்றில் முதல் முறையாக, புவிசார் அரசியல், உள்நாட்டு அரசியல் மற்றும் தனியார் ரகசிய திறன்கள், குறைகடத்தி உற்பத்தியில் ஒரு சிறந்த நாடாக  மாற இந்தியாவுக்கு சாதகமாக இணைக்கப்பட்டுள்ளன என்றார். மைக்ரானின் முதலீடு இந்தியாவில் வரலாறு படைத்து வருவதாகவும், மற்றவர்கள் பின்பற்றுவதற்கான களத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார். குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்துகொள்ளும் தலைமையைக் கொண்டிருப்பதுதான் தற்போதைய அமைப்பை வேறுபடுத்துகிறது என்று அவர் கூறினார். ஆசியாவிலேயே குறைகடத்தி துறையில் இந்தியா அடுத்த சக்தியாக இருக்கும் என்றார் அவர்.

ஈ.வி.பி மற்றும் சி.டி.ஓ,  ஏ.எம்.டி திரு மார்க் பேப்பர்மாஸ்டர் அண்மையில் வெள்ளை மாளிகையில் பிரதமருடனான ஏ.எம்.டி தலைமை நிர்வாக அதிகாரி சந்திப்பை நினைவு கூர்ந்தார். அடுத்த 5 ஆண்டுகளில் ஏஎம்டி சுமார் 400 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று அவர் அறிவித்தார். ஏஎம்டி அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை மேம்படுத்தும் என்று அவர் கூறினார். "நாங்கள் எங்கள் மிகப்பெரிய வடிவமைப்பு மையத்தை பெங்களூரில் உருவாக்குவோம்", என்று அவர் கூறினார்.

குறைகடத்தி ப்ராடக்ட் குரூப் அப்ளைடு மெட்டீரியல்ஸ் தலைவர் டாக்டர் பிரபு ராஜா கூறுகையில், பிரதமர் மோடியின் வலுவான தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா உலகளாவிய குறைகடத்தி துறையில் முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது என்றார். "இது இந்தியா பிரகாசிக்க வேண்டிய நேரம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்", என்று அவர் கூறினார். எந்தவொரு நிறுவனமும் அல்லது நாடும் இந்தத் துறையில் உள்ள சவால்களை தனியாக சமாளிக்க முடியாது. இந்த துறையில்  கூட்டாண்மைக்கான நேரம் இது. இந்த புதிய கூட்டு மாதிரி இத்துறையில்  ஒரு ஊக்கியாக இருக்க உதவும் என்று அவர் வலியுறுத்தினார். "இந்தியாவின் குறைகடத்தி பார்வையில் எங்களை ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாகக் கருதியதற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்", என்று அவர் மேலும் கூறினார்.

குறைகடத்திகளில் இந்தியா இறுதியாக முதலீடு செய்வதைப் பார்ப்பது மிகவும் நல்லது என்று காட்டென்ஸின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அனிருத் தேவ்கன் கூறினார். முழு சுற்றுச்சூழல் அமைப்பிலும் அரசாங்கம் முதலீடு செய்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு குஜராத் சரியான இடம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை அவர் எடுத்துரைத்தார். "கடந்த தசாப்தத்தில் இந்தியா எவ்வாறு மாறியுள்ளது என்பதை நாங்கள் பார்த்தோம், இளம் இந்தியர்களின் விருப்பங்கள் மிகவும் உயர்ந்தவை ‘’ என்று அவர் கூறினார்.

மைக்ரான் டெக்னாலஜியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சஞ்சய் மெஹ்ரோத்ரா, இந்தியாவை உலகளாவிய குறைகடத்தி மையமாக மாற்றுவதற்கான உலகளாவிய பார்வைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் நினைவாற்றலுக்கான குறைகடத்தி ஒன்றினைப்பது மற்றும் பரிசோதனை வசதியை அமைப்பதில் பெருமிதம் தெரிவித்த மெஹ்ரோத்ரா, இந்த திட்டம் வரும் ஆண்டுகளில் சுமார் 5,000 வேலைவாய்ப்புகளையும், சமூகத்திற்குள் 15,000 கூடுதல் வேலைகளையும் உருவாக்கப் போகிறது என்றார். மாநிலத்தில் குறைகடத்தி தொழிற்சாலை அமைக்க உறுதுணையாக இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்புகள், வணிக வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தின் சூழலை வளர்ப்பதில் உறுதியான முடிவுகளை உருவாக்கும் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். "டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் ஆகியவை உண்மையிலேயே மாற்றக்கூடிய ஆற்றலை உருவாக்குகின்றன, இது தொடர்ந்து நேர்மறையான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும்", என்று அவர் மேலும் கூறினார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு யங் லியு, தைவான் குறைகடத்தி தொழில்துறையின் குறை கூறாமல் கடினமாக உழைக்கும் திறனை கோடிட்டு காட்டினார்.  அதே உணர்வை இந்தியாவிலும் பயன்படுத்தலாம் என்று கூறினார். இந்திய அரசாங்கத்தின் உயர்ந்த 'சொல்-செயல்' விகிதத்தைக் குறிப்பிட்ட திரு லியு, பல ஆண்டுகளுக்கு முன்பு தைவான் செய்ததைப் போலவே சவால்களைச் சமாளிக்க நம்பிக்கை மற்றும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். குறைகடத்தி தொழிலை வழிநடத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் விருப்பம் மற்றும் உறுதிப்பாடு குறித்து திரு லியு நம்பிக்கை தெரிவித்தார். "தகவல் தொழில்நுட்பம் என்பது இந்தியா மற்றும் தைவானை (IIT) குறிக்கிறது" என்று பிரதமரை மேற்கோள் காட்டி திரு லியு கூறினார், மேலும் குறைகடத்தி துறையில் தைவான் இந்தியாவின் மிகவும் நம்பகமான பங்குதார நாடாக  இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், செமிகான் போன்ற நிகழ்வுகள் மென்பொருள் புதுப்பிப்பு போன்றது, அங்கு வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பகிர்ந்து கொள்கிறார்கள் என்று வலியுறுத்தினார். "நமது உறவை ஒருங்கிணைக்க இது முக்கியமானது" என்று பிரதமர் கூறினார். அரங்கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட திரு. மோடி, இத்துறையின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆற்றல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் கண்காட்சியை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் பார்வையிட்டு புதிய தொழில்நுட்பத்தின் சக்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு செமிகானின் முதல் பதிப்பில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், குறைகடத்தி துறையில் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளை எடுத்துரைத்தார். 'இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்' என்பதில் இருந்து 'இந்தியாவில் ஏன் முதலீடு செய்யக் கூடாது' என்ற கேள்வி ஒரு வருட காலக்கட்டத்தில் மாறியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். "தொழில்துறை தலைவர்களின் முயற்சிகளால் ஒரு திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று திரு. மோடி கூறினார், இந்தியா மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக அவர்களை பாராட்டினார். தொழில்துறை தலைவர்கள் இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் திறனை தங்கள் சொந்த எதிர்காலம் மற்றும் கனவுகளுடன் இணைத்துள்ளனர் என்று அவர் கூறினார்.  இந்தியா ஏமாற்றுவதில்லை என்றார் அவர், 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, நாட்டின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் ஈவுத்தொகை ஆகியவை இந்தியாவில் வணிகங்களை இரட்டிப்பாக்கும் மற்றும் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றார்.

அதிவேக வளர்ச்சியை  மூர் விதியின் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையிலும் இதே அதிவேக வளர்ச்சியை நாம் காண்கிறோம் என்று கூறினார். உலகளாவிய மின்னணு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி 30 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது, இது இன்று 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. மின்னணு மற்றும் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக் காட்டிய பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு கைப்பேசி உற்பத்திப் பிரிவுகள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். நாட்டில் பிராட்பேண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 6 கோடியில் இருந்து 80 கோடியாகவும், இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடியில் இருந்து 85 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறிப்பது மட்டுமல்லாமல், நாட்டில் வளர்ந்து வரும் வணிகங்களுக்கான குறிகாட்டியாகும் என்றும் கூறினார். செமிகான் தொழில்துறையின் அதிவேக வளர்ச்சி இலக்கில் இந்தியாவின் முக்கிய பங்கை திரு. மோடி எடுத்துரைத்தார்.

"இன்று தொழில்துறை 4.0 புரட்சியை உலகம் காண்கிறது" என்று குறிப்பிட்ட திரு. மோடி, உலகில் எந்தவொரு தொழில் புரட்சிக்கும் அடிப்படை அந்த குறிப்பிட்ட துறையில் உள்ள மக்களின் விருப்பங்கள் என்று குறிப்பிட்டார். "கடந்த கால தொழிற்புரட்சிகளுக்கும் அமெரிக்கக் கனவுக்கும் ஒரே மாதிரியான உறவு இருந்தது" என்று கூறிய பிரதமர், தொழில்துறை 4.0 புரட்சிக்கும் இந்திய விருப்பங்களுக்கும் இடையிலான ஒப்புமையை எடுத்துரைத்தார்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய விருப்பங்கள் உந்து சக்தியாக உள்ளன என்று அவர் கூறினார். நாட்டில் வறுமை மிக வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் நாட்டில் ஒரு நவ-நடுத்தர வர்க்கம் உருவாவதற்கு வழிவகுக்கப்படுகிறது என்றும் சமீபத்திய அறிக்கையை அவர் குறிப்பிட்டார். மலிவான தரவு விகிதங்கள், தரமான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் கிராமங்களில் தடையற்ற மின்சார விநியோகம் ஆகியவற்றால் டிஜிட்டல் தயாரிப்புகளின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்திய மக்களின் ஆர்வத்தையும் தொழில்நுட்ப நட்பு தன்மையையும்  பிரதமர் குறிப்பிட்டார். "சுகாதாரம், விவசாயம் அல்லது தளவாடங்கள் எதுவாக இருந்தாலும், ஸ்மார்ட் தொழில்நுட்ப பயன்பாட்டின் தொலைநோக்கு பார்வையை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது" என்று திரு மோடி கூறினார். அடிப்படை வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தாதவர்கள், ஆனால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தப் போகிறவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல், ஒரு குறிப்பிட்ட மாணவர் சமுதாயம் இதற்கு முன்பு மிதிவண்டியைப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இன்று ஸ்மார்ட் மின்சார பைக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். "இந்தியாவில் வளர்ந்து வரும் நவ-நடுத்தர வர்க்கம் இந்திய விருப்பங்களின் மையமாக மாறியுள்ளது" என்று பிரதமர் கூறினார். சிப் தயாரிக்கும் தொழில் வாய்ப்புகள் நிறைந்த சந்தை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், சீக்கிரம் தொடங்குபவர்கள் மற்றவர்களை விட முதல்-நகர்வு நன்மையைப் பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் பக்க விளைவுகளைக் குறிப்பிட்ட பிரதமர், உலகிற்கு நம்பகமான விநியோக சங்கிலி தேவை என்று கூறினார். "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை விட நம்பகமான கூட்டாளி வேறு யார் ", என்று அவர் கூறினார். இந்தியா மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். "முதலீட்டாளர்கள் இந்தியாவை நம்புகிறார்கள், ஏனெனில் அது ஒரு நிலையான, பொறுப்பான மற்றும் சீர்திருத்தம் சார்ந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு வளர்ந்து வருவதால் தொழில்துறை இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இங்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் தொழில்நுட்பத் துறை இந்தியாவை நம்புகிறது. குறைகடத்தி தொழில்துறை இந்தியாவை நம்புகிறது, ஏனெனில் எங்களிடம் பெரிய அளவிலான திறமை உள்ளது", என்று அவர் கூறினார். "திறமையான பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் எங்கள் பலம். உலகின் மிகவும் துடிப்பான மற்றும் ஒருங்கிணைந்த சந்தையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் எவருக்கும் இந்தியா மீது நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்று நாங்கள் உங்களிடம் சொல்லும்போது, அதில் இந்தியாவுக்காக தயாரிப்போம் ஆகியவை அடங்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா தனது உலகளாவிய பொறுப்புகளைப் புரிந்துகொண்டு, நட்பு நாடுகளுடன் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். அதனால்தான் இந்தியா ஒரு துடிப்பான குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. சமீபத்தில், தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுபோன்ற 300-க்கும் மேற்பட்ட முக்கிய கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்கு குறைகடத்திகள் குறித்த பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சிப்ஸ் முதல் புத்தொழில் திட்டமானது பொறியாளர்களுக்கு உதவும். அடுத்த 5 ஆண்டுகளில், நம் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பு பொறியாளர்கள்  இன்ஜினியர்கள் உற்பத்தி செய்யப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு குறைகடத்தி துறையை வலுப்படுத்தப் போகிறது", என்று அவர் மேலும் கூறினார்.

மின்கடத்தி மற்றும் இன்சுலேட்டர்கள் மூலம் அல்லாமல், மின்கடத்திகள் வழியாக ஆற்றல் பயணிக்கக்கூடிய ஒரு நடத்துநர் மற்றும் இன்சுலேட்டரின் ஒப்புமையைக் கொடுத்த பிரதமர், குறைகடத்தி தொழில்துறைக்கு ஒரு நல்ல ஆற்றல் இயக்க நாடாக  மாற இந்தியா ஒவ்வொரு சோதனைப்பெட்டியையும் டிக் செய்து வருகிறது என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய மின்சக்தி நிறுவும் திறன் 20 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் என்ற புதிய இலக்கை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். சூரியசக்தி பி.வி தொகுதிகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்திக்கு எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொள்கை சீர்திருத்தங்கள் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் கட்டுமானத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். புதிய உற்பத்தித் தொழிலுக்கு நடைமுறைக்கு வந்துள்ள பல வரி விலக்குகள் குறித்தும், இந்தியாவில் மிகக் குறைந்த பெருநிறுவன வரி விகிதம், முகமற்ற மற்றும் தடையற்ற வரிவிதிப்பு செயல்முறை, பழமையான சட்டங்களை நீக்குதல், வணிகத்தை எளிதாக்குவதற்கான இணக்கங்கள் மற்றும் குறைகடத்தி தொழிலுக்கான சிறப்பு சலுகைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்த முடிவுகள் மற்றும் கொள்கைகள் குறைகடத்தி தொழில்துறைக்கு இந்தியா சிவப்பு கம்பளங்களை விரிக்கிறது என்ற உண்மையை பிரதிபலிக்கிறது என்று திரு. மோடி கூறினார். சீர்திருத்தப் பாதையில் இந்தியா முன்னேறும்போது, புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். குறைகடத்தி முதலீடுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த நாடாக மாறி வருகிறது", என்று அவர் மேலும் கூறினார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி, மூலப்பொருட்கள், பயிற்சி பெற்ற மனிதவளம் மற்றும் இயந்திரங்களின் தேவைகளை இந்தியா புரிந்து கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். "நாங்கள் தனியார் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றிய துறை புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. விண்வெளித் துறையாக இருந்தாலும் சரி, புவியியல் துறையாக இருந்தாலும் சரி, நாம் எல்லா இடங்களிலும் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளோம்", என்று பிரதமர் கூறினார்.  பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் குறித்தும் அவர் தெரிவித்தார். செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை அதிகரிப்பது குறித்து அவர் பேசினார். இனி இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தி ஆலைகளை அமைக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் விளக்கினார். "நாட்டின் குறைகடத்தி துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த நாங்கள் தொடர்ந்து கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம்" என்று திரு மோடி கூறினார்.

'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற இந்தியாவின் ஜி 20 கருப்பொருளைப் பிரதிபலித்த பிரதமர், இந்தியாவை குறைகடத்தி உற்பத்தி மையமாக மாற்றுவதற்குப் பின்னால் அதே உத்வேகம் பயன்படுத்தப்படுகிறது என்று வலியுறுத்தினார். இந்தியா  திறனிலிருந்து முழு உலகமும் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறது என்று அவர் வலியுறுத்தினார். உலகளாவிய நன்மை மற்றும் சிறந்த உலகத்திற்கான இந்தியாவின் திறனை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சியில் பங்கேற்பு, ஆலோசனைகள் மற்றும் எண்ணங்களை வரவேற்ற பிரதமர், ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தொழில்துறை தலைவர்களுக்கு உறுதியளித்தார்.  செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையை நினைவு கூர்ந்து, "இதுவே சரியான நேரம். இதுவே சரியான நேரம். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்த மாநாட்டின் கருப்பொருள் 'இந்தியாவின் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல்' என்பதாகும். தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைகடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் குறைகடத்தி உத்தி மற்றும் கொள்கையை இது வெளிப்படுத்துகிறது.

***

ANU/PKV/KPG


(Release ID: 1943789) Visitor Counter : 216