கூட்டுறவு அமைச்சகம்

கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் - சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை https://mocrefund.crcs.gov.in/ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

Posted On: 18 JUL 2023 4:20PM by PIB Chennai

கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் - சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை https://mocrefund.crcs.gov.in/ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். நான்கு கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட சஹாரா குழுமத்தின் உண்மையான டெபாசிட்தாரர்கள் உரிமை கோரல்களை சமர்ப்பிப்பதற்காக இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  சஹாரா குழுமத்தில், பணம் செலுத்தி திரும்ப பெற முடியாதவர்களின் கவலையை மனதில்கொண்டு இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, சஹாரா போன்ற நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதான புகார்கள் அனைவரின் முன்பும் கூட்டுறவு சங்கங்கள் பற்றிய தவறானப் பார்வையை தருவதாக கூறினார். இந்த நிறுவனங்களில் ரூ.10,000 அல்லது அதற்கும் கூடுதலாக டெபாசிட் செய்துள்ள 1 கோடி முதலீட்டாளர்களுக்கு இந்த இணையப்பக்கத்தின் மூலம் முதல் தவணையாக ரூ. 10,000 வரை வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் இதற்கு இந்த இணையப்பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார். தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருப்பதால் இந்த நடைமுறையில் உண்மையான முதலீட்டாளர்களுக்கு நியாயம் கிடைக்காமல் போக எந்த வாய்ப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நிதி நிறுவன மோசடி காரணமாக இழந்த தொகையை முதலீட்டாளர்கள் வெளிப்படையான முறையில் மீண்டும் பெறுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், முதன்முறையாக இத்தகைய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது ஒரு சாதனை என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார். இதன்படி, கடின உழைப்பால் சம்பாதித்து நிதி மோசடியில் பணத்தை இழந்த கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் மீண்டும் அதனைப் பெறவிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.  

சஹாரா குழும நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் இணையதளம் மூலம் இந்த இணையப்பக்கத்தை அணுகி அதில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்துடன் தேவைப்படும் ஆவணங்களையும், பதிவேற்றம் செய்ய வேண்டும்.  உரிமைகோரல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆதார் அட்டை மூலம் சரிபார்க்கப்பட்டபின், நிதி இருப்பைப் பொறுத்து, உண்மையான டெபாசிட்தாரர்களுக்கு 45 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.

***

AP/SMB/RJ/KPG



(Release ID: 1940540) Visitor Counter : 150