தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

உலக தேர்தல் அமைப்புகள் சங்க நிர்வாக வாரியத்தின் 11வது கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பங்கேற்றார்

Posted On: 12 JUL 2023 1:37PM by PIB Chennai

கொலம்பியாவின் கார்ட்டஜினாவில் நடைபெற்ற உலகத் தேர்தல் அமைப்புகள் சங்க (ஏ-வெப்) நிர்வாகக் குழுவின் 11வது கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு  ராஜீவ் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையப்  பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.

உலகளாவிய சங்கமான ஏ-வெப், தேர்தல் நிர்வாக அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், ஒவ்வொருவரின்   அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொள்ள உதவுகிறது என்றும் கூட்ட விவாதத்தின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் திரு குமார் கூறினார்.  உலக அளவில் தேர்தல் நேர்மையைத் தடம்புரளச் செய்வதற்கு  முயற்சிக்கும் மோசடி செயல்கள் போன்ற கடுமையான சவால்களை எதிர்கொள்ள, தேர்தல் நிர்வாக அமைப்புகள் ஏ-வெப் போன்ற அமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மற்ற நிகழ்ச்சி நிரல்களுடன்  ஏ-வெப் இணையப்பக்கத்தை உருவாக்குதல், தேர்தல் நிர்வாக அமைப்புகளுக்கான உலகளாவிய ஏ-வெப் விருதுகளை நிறுவுதல் என்ற  ஆலோசனைகளைத்  தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் முன்வைத்தார்.  இரண்டு ஆலோசனைகளும் ஏ-வெப்  நிர்வாகக் குழுவால் ஏற்கப்பட்டன.

11 வது ஏ-வெப் நிர்வாகக் குழு கூட்டத்திற்கிடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மின்னணு தபால் வாக்குச் சீட்டு முறை குறித்து, கொரியா குடியரசின் தேசிய தேர்தல் ஆணையத்துடன் இருதரப்பு சந்திப்பும் நடைபெற்றது.

2013, அக்டோபர் மாதம் கொரியக் குடியரசின்  சியோலில் ஏ-வெப் நிறுவப்பட்டது. 2011-12 முதல் ஏ-வெப் உருவாக்க நடைமுறையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. 2013, அக்டோபரில் இதன் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக இரண்டு முறை (2013-15 மற்றும் 2015-17) இதன் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தது. 2017-19 காலத்தில்  இந்தியத் தேர்தல் ஆணையம்  ஏ-வெப்  துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது; 2019-22 காலத்தில்  தலைவராக இருந்த இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது உடனடி முன்னாள் தலைவர் என்ற முறையில்  2022-24 ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938874

***

LK/SMB/AG


(Release ID: 1938961) Visitor Counter : 198