பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தில் ஆறு வழி பசுமை விரைவுச் சாலை பகுதியை பிரதமர் அர்ப்பணித்தார்

பசுமை எரிசக்தி வழித்தடத்திற்காக மாநிலங்களுக்கு இடையேயான மின் தொடரமைப்பின் முதல் கட்டத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பிகானீர் முதல் பிவாடி வரையிலான மின் பரிமாற்ற வழித்தடத்தையும் அவர் அர்ப்பணித்தார்

பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனையையும் பிரதமர் அர்ப்பணித்தார்

பிகானீர் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பிரிவில் இரட்டை ரயில் பாதைக்கான பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

"தேசிய நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை ராஜஸ்தான் இரட்டை சதம் அடித்துள்ளது" - பிரதமர்

"ராஜஸ்தான் மகத்தான திறன்கள் மற்றும் வாய்ப்புகளின் மையமாகும்"- பிரதமர்

"பசுமை விரைவுச்சாலை மேற்கு இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும்"- பிரதமர்

எல்லையோர கிராமங்கள் நாட்டின் முதன்மை கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன- பிரதமர்

Posted On: 08 JUL 2023 6:03PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08-07-2023 )அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ. 11,125 கோடி செலவிலான அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவு, சுமார் ரூ.10,950 கோடி மதிப்புள்ள பசுமை எரிசக்தி வழித்தடத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற பாதையின் முதல் கட்டம், சுமார் ரூ.1,340 கோடி செலவில் பவர் கிரிட் உருவாக்கும் பிகானீர் முதல் பிவாடி வரையிலான பரிமாற்ற வழித்தடம் ஆகியவை அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும். பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட புதிய தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனை, சுமார் ரூ.450 கோடி செலவில் பிகானீர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், 43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பிரிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வீரர்களின் நிலம் ராஜஸ்தான் என்று கூறி இந்த நிலத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் மக்கள் செயல்படுவதாக அவர் கூறினார். வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பை மக்கள் தமக்கு வழங்குகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். ரூ. 24,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இன்று தொடங்கப்படும் திட்டங்களைக் குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தான் சில மாதங்களுக்குள் இரண்டு நவீன ஆறு வழி விரைவுச்சாலைகளைப் பெற்றது என்று குறிப்பிட்டார். பிப்ரவரி மாதம் தில்லி - மும்பை விரைவு வழித்தடத்தில் தில்லி - தவுசா - லால்சோட் பிரிவை தாம் திறந்து வைத்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். அமிர்தசரஸ் - ஜாம்நகர் விரைவுச்சாலையின் 500 கிலோ மீட்டர் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவை இன்று திறந்து வைக்கும் வாய்ப்பைத் தாம் பெற்றுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒருவகையில், தேசிய நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை ராஜஸ்தான் இரட்டை சதம் அடித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். பசுமை எரிசக்தி வழித்தடம் மற்றும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனை ஆகியவை தொடங்கப்படுவதற்காக பிகானீர் மற்றும் ராஜஸ்தான் மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் எப்போதுமே திறன்கள் மற்றும் ஆற்றல்கள் நிறைந்தது என்று பிரதமர் கூறினார். வளர்ச்சிக்கான இந்த வாய்ப்புகளின் காரணமாகவே, மாநிலத்தில் சாதனை அளவாக அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். தொழில் வளர்ச்சிக்கு இம்மாநிலத்தில் அளவற்ற சாத்தியக்கூறுகள் இருப்பதால் போக்குவரத்து இணைப்பு நவீனப்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.  அதிவேக விரைவுச் சாலைகள் மற்றும் ரயில்வே இணைப்பு ஆகியவை மாநிலத்தின் இளைஞர்களுக்கு பயனளிக்கும் எனவும் சுற்றுலா வாய்ப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று திறந்து வைக்கப்பட்ட பசுமை (கிரீன் பீல்ட்) விரைவுச் சாலையைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இது ராஜஸ்தானை ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் என்று கூறினார். இந்தச் சாலை மூலம், ஜாம்நகர் மற்றும் கண்ட்லா போன்ற முக்கியமான வணிகத் துறைமுகங்களையும் பிகானீர் மற்றும் ராஜஸ்தானில் இருந்து எளிதில் அணுக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிகானீர், அமிர்தசரஸ் மற்றும் ஜோத்பூருக்கு இடையிலான பயண தூரமும், ஜோத்பூருக்கும் குஜராத்துக்கும் இடையிலான பயண தூரமும் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். இது இந்தப் பகுதியின் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். இந்தப் பசுமை (கிரீன்ஃபீல்ட்) அதிவேக நெடுஞ்சாலை மேற்கு இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுடனான போக்குவரத்து இணைப்பையும் இது அதிகரிக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். இது விநியோகத்தை வலுப்படுத்தி நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களுக்கு வேகம் கொடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதை ஆக்குவது குறித்துப் பேசிய பிரதமர், ராஜஸ்தானில் ரயில்வேயின் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முன்னுரிமை குறித்து எடுத்துரைத்தார். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ராஜஸ்தான் மாநில ரயில்வேத் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1000 கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தின் ரயில்வேத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் மிகப்பெரிய வேகம், சிறு வணிகர்கள் மற்றும் சிறுதொழில்துறையினருக்கு மிகப்பெரிய பயன் அளித்துள்ளது என்று பிரதமர் கூறினார். பிகானீரின் ஊறுகாய், அப்பளம், நம்கீன் எனப்படும் நொறுக்குத் தீனி உணவு ஆகியவை பெயர் பெற்றவை என்று குறிப்பிட்ட பிரதமர், சிறந்த போக்குவரத்து இணைப்பின் மூலம், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எளிதில் கொண்டு செல்ல முடியும் என்றார்.

ராஜஸ்தானின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறிய பிரதமர், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட எல்லைக் கிராமங்கள் முன்னேறும் வகையில் துடிப்பான கிராமத் திட்டம் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிட்டார். எல்லையோர கிராமங்களை நாட்டின் முதன்மை கிராமங்களாக அறிவிக்கப்பட்டன என அவர் கூறினார். இது அந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்றும் இந்த பகுதிகளுக்குச் செல்வது குறித்து நாட்டு மக்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தானில் கர்ணி மாதா மற்றும் சலாசர் பாலாஜி ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பற்றியும் பிரதமர் பேசினார். இந்த மாநிலம் வளர்ச்சியின் உச்சத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தமது முழு பலத்தை பிரயோகித்து செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகள், ராஜஸ்தானின் அனைத்து வளர்ச்சி இலக்குகளையும் நிறைவேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.  

இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி 
அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச்சாலைப் பகுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08-07-2023) நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தப் பிரிவு ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள ஜக்ராவாலி கிராமத்திலிருந்து ஜலோர் மாவட்டத்தில் உள்ள கெத்லாவாஸ் கிராமம் வரை சுமார் ரூ. 11,125 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். அத்துடன் முக்கிய நகரங்கள் மற்றும் தொழில்துறை வழித்தடங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். இந்த அதிவேக நெடுஞ்சாலை தடையற்ற சரக்குப் போக்குவரத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

இப்பிராந்தியத்தில் மின் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், சுமார் ரூ.10,950 கோடி மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான மின் தொடரமைப்பின் முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பசுமை எரிசக்தி வழித்தடம் சுமார் 6 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஒருங்கிணைத்து, மேற்கு பிராந்தியத்தில் அனல் மின் உற்பத்தி மற்றும் வடக்கு பிராந்தியத்தில் நீர் மின் உற்பத்தியுடன் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சமநிலைப்படுத்த உதவும். இதன் மூலம் வடக்கு பிராந்தியத்திற்கும் மேற்கு பிராந்தியத்திற்கும் இடையிலான பரிமாற்ற திறன் வலுப்படுத்தப்படும். சுமார் ரூ.1,340 கோடி செலவில் பவர் கிரிட் நிறுவனத்தால் உருவாக்கப்படவுள்ள பிகானீர் - பிவாடி பரிமாற்ற வழித்தடத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராஜஸ்தானில் இருந்து  8.1 ஜிகாவாட் சூரிய மின்சக்தியை பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல பிகானீர் முதல் பிவாடி வரையிலான பரிமாற்ற வழித்தடம் உதவும்.

பிகானீரில் கட்டப்பட்டுள்ள, 30 படுக்கைகள் கொண்ட புதிய தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மருத்துவமனை 100 படுக்கைகள் வரை மேம்படுத்தக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. உள்ளூர் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தரமான சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான மருத்துவமனையாக இது செயல்படும்.

பிகானீர் ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ. 450 கோடி செலவில் இந்த மறு சீரமைப்புப் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.  அனைத்து நடைமேடைகள், தரை மற்றும் மேற்கூரைப் பகுதிகள் புதுப்பிக்கப்படும் நிலையில், தற்போதுள்ள ரயில் நிலைய கட்டமைப்பின் பாரம்பரிய தன்மை பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதை ஆக்குவதற்கான அடிக்கல்லையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டினார். இந்த ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக்குவதன் மூலம் போக்குவரத்து இணைப்பு மேம்படும். அத்துடன் ஜிப்சம், சுண்ணாம்புக்கல், உணவு தானியங்கள் மற்றும் உர தயாரிப்புகளை பிகானீர் பகுதியிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு எளிதாக கொண்டு செல்ல இந்த இரட்டை ரயில் பாதை உதவும்.

Release ID: 1938188

 

***

AD/PLM/KRS



(Release ID: 1938234) Visitor Counter : 145