பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுமார் ரூ 7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுமார் ரூ 7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

103 கிமீ நீளமுள்ள ராய்ப்பூர் - காரியார் சாலை இரட்டை ரயில் பாதை மற்றும் கியோட்டி – அந்தகரையை இணைக்கும் 17 கிமீ நீளமுள்ள புதிய ரயில் பாதையை அர்ப்பணித்தார்

கோர்பாவில் இந்தியன் எண்ணெய் கழகத்தின் ஆலையை அர்ப்பணித்தார்

அந்தகர் - ராய்ப்பூர் ரயிலை காணொலி மூலம் கொடியசைத்து இயக்கி வைத்தார்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

"இன்றைய திட்டங்கள் சத்தீஸ்கரின் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வசதிக்கான புதிய பயணத்தை குறிக்கின்றன"

"வளர்ச்சியில் பின்தங்கிய குறிப்பிட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது"

"நவீன உள்கட்டமைப்பு சமூக நீதியுடன் தொடர்புடையது"

"இன்று சத்தீஸ்கர்

Posted On: 07 JUL 2023 1:04PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுமார் ரூ. 7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ. 6,400 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.750 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 103 கிமீ நீளமுள்ள ராய்ப்பூர் - காரியார் சாலை ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், கோர்பாவில் ரூ. 130 கோடி செலவில் கட்டப்பட்ட ஆண்டுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்திய எண்ணெய் கழகத்தின் பாட்டிலிங் ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்தகர் - ராய்பூர் ரயிலையும் அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு போன்ற துறைகளில் ரூ. 7000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை சத்தீஸ்கர் மாநிலம் பெற்று வருவதால், இன்றைய நிகழ்ச்சி சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். இன்றைய திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், மாநிலத்தில் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். இந்தத்  திட்டங்கள் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் அதே வேளையில், சத்தீஸ்கரின் நெல் விவசாயிகளுக்கும், கனிம தொழில் மற்றும் சுற்றுலாத் துறைக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "இன்றைய திட்டங்கள் சத்தீஸ்கரின் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வசதிக்கான புதிய பயணத்தை குறிக்கும்" என்று குறிப்பிட்ட பிரதமர்,   மாநில மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எந்தவொரு பிராந்தியத்தின் அபிவிருத்தி தாமதம் அடைகிறதோ, இங்கு உள்கட்டமைப்பு பற்றாக்குறை நிலவும் என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே, இதனைக் கருத்தில் கொண்டுவளர்ச்சியில் பின்தங்கிய குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் அவர். உள்கட்டுமானம் என்பது எளிதாக வாழ்வது மற்றும் எளிதாக வணிகம் செய்வது, உள்கட்டமைப்பு என்பது வேலை வாய்ப்புகள் மற்றும் வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார்பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்தின் ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு சாலை இணைப்பு விரிவடைந்துள்ளதுசத்தீஸ்கரில் நவீன உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் காணப்படுகின்றன என்று அவர் கூறினார். சுமார் 3,500 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அங்கு சுமார் 3000 கிமீ பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ராய்ப்பூர்-கோடெபோட் மற்றும் பிலாஸ்பூர்-பத்ரபாலி நெடுஞ்சாலைகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். "ரயில், சாலை, தொலைத்தொடர்பு என எதுவாக இருந்தாலும், சத்தீஸ்கரில் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு  முன்னெப்போதும் இல்லாத வகையில், அனைத்து வகையான இணைப்பையும் மேம்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

நவீன உள்கட்டமைப்புகளும் சமூக நீதியுடன் தொடர்புடையது என்பதை எடுத்துரைத்த பிரதமர், ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட இன்றைய திட்டங்கள் நோயாளிகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவமனைகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சத்தீஸ்கரில் 20 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்களில் எந்த விதமான மொபைல் இணைப்பும் இல்லை, ஆனால் இன்று அந்த எண்ணிக்கை சுமார் 6 சதவீதமாக குறைந்துள்ளது, மேலும் இப்பகுதியின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகப்பெரிய பயனாளிகளாக உள்ளனர்இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பழங்குடியின கிராமங்களில் பெரும்பாலானவை ஒரு காலத்தில் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்ல 4ஜி இணைப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கம் 700க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களை நிறுவி வருவதாக பிரதமர் தெரிவித்தார். சுமார் 300 கோபுரங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். ஒரு காலத்தில் மௌனமாக இருந்த பழங்குடியின கிராமங்கள் இப்போது ரிங்டோன்கள் என்னும் ஒலியைக் கேட்கின்றன என்று அவர் கூறினார். மொபைல் இணைப்பின் வருகை கிராம மக்களுக்கு பல பணிகளில் உதவியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்இதுதான் சமூக நீதி. மேலும் இது அனைவருக்குமான வளர்ச்சி  என்று பிரதமர் கூறினார்.

"இன்று சத்தீஸ்கர் இரண்டு பொருளாதார வழித்தடங்களுடன் இணைகிறது", ராய்ப்பூர் - தன்பாத் பொருளாதார வழித்தடம் மற்றும் ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடம் ஆகியவை முழுப் பகுதியின் தலையெழுத்தையும் மாற்றப் போகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். பொருளாதார வழித்தடங்கள் ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்ட, வன்முறை மற்றும் அராஜகம் நிலவிய மாவட்டங்கள் வழியாக செல்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடமானது, ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் இடையேயான பயணத்தை  பாதியாகக் குறைக்கிறது. இதனால்இந்தப் பகுதியின் புதிய உயிர்நாடியாக இது மாறும் என்றார். 6 வழிச் சாலையானது தம்தாரியின் நெல் விளையும் பகுதியையும், காங்கரின் பாக்சைட் பகுதியையும்கோண்டகானின் கைவினைப் பொருட்களின் செழுமையையும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சாலை வனவிலங்கு பகுதி வழியாக செல்லும் என்பதால், வனவிலங்குகளின் வசதிக்காக சுரங்கப்பாதைகள் மற்றும் விலங்குகளுக்கான பாதைகள் அமைக்கப்படுவதையும் பிரதமர் பாராட்டினார். "தல்லி ராஜ்ஹாராவிலிருந்து ஜக்தல்பூர் வரையிலான ரயில் பாதை மற்றும் அந்தகரில் இருந்து ராய்பூருக்கு நேரடி ரயில் சேவை ஆகியவை தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதை எளிதாக்கும்" என்று திரு மோடி கூறினார்.

"இயற்கை வளம் உள்ள பகுதிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், புதிய தொழில்களை அமைப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது" எனக் கூறிய பிரதமர், இதற்காக கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். அரசின் கொள்கைகள் காரணமாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக சுரங்கங்கள் மற்றும் கனிமச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, சத்தீஸ்கர் மாநிலம் ராயல்டி வடிவத்தில் அதிக நிதியைப் பெறத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2014-க்கு முந்தைய நான்கு ஆண்டுகளில், சத்தீஸ்கருக்கு ராயல்டியாக ரூ.1300 கோடி கிடைத்ததாக பிரதமர் தெரிவித்தார். 2015-16 முதல் 2020-21-ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலம் ராயல்டியாக சுமார் 2800 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாவட்ட கனிம நிதியை உயர்த்தியதன் மூலம் கனிம வளம் உள்ள மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.  "தற்போது மாவட்ட கனிம நிதி குழந்தைகளுக்கான பள்ளிகள், நூலகங்கள், சாலைகள், தண்ணீர் வசதி போன்ற பல வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படுகிறது" என்று பிரதமர் கூறினார்.

 

சத்தீஸ்கரில் தொடங்கப்பட்டுள்ள 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமான ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.6000 கோடிக்கும் மேல் வைப்பு வைக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்த பிரதமர், இது ஏழை குடும்பங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமானவை என்று கூறினார். ஜன்தன் கணக்குகள் ஏழை மக்கள் அரசின் நேரடி உதவியைப் பெற உதவுவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். சத்தீஸ்கரில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து உழைத்து வருவதாகக் கூறிய பிரதமர், முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு 40,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஏராளமான பழங்குடியின இளைஞர்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெரிதும் உதவி புரிந்துள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் நாட்டின் சிறுதொழில்களுக்கு உதவும் வகையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் சத்தீஸ்கரைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் நிறுவனங்களுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் உதவி கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தெருவோர வியாபாரிகளுக்கு பிணையின்றி கடன் வழங்கும் பிரதமர் ஸ்வானிதி யோஜனா திட்டத்தை குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் போதுமான வேலைவாய்ப்பை வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.25,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

75 லட்சம் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் ஏழை மற்றும் பழங்குடியின குடும்பங்கள் மாநிலத்தின் 1500-க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறமுடியுமெனக் கூறினார். ஏழை, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கைக்கு ஆயுஷ்மான் யோஜனா உதவி வருவதாகவும் அவர் திருப்தி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, உரையை நிறைவு செய்த பிரதமர், சத்தீஸ்கரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரே மாதிரியான சேவை உணர்வோடு சேவை செய்வதாக உறுதியளித்தார்.

 

சத்தீஸ்கர் ஆளுநர் திரு.பிஸ்வபூசன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகேல், சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் திரு.டி.எஸ். சிங் தியோ, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில்பிரதமர் மோடி சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் ஜபல்பூர்-ஜக்தல்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ராய்ப்பூர் முதல் கோடேபோட் வரையிலான 33 கிமீ நீளமுள்ள 4-வழிப்பாதையும் அடங்கும். இந்த சாலை சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, ஜக்தல்பூருக்கு அருகிலுள்ள எஃகு ஆலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், தயாரிப்புகளை எடுத்து செல்லவும்உதவுவதோடு இரும்பு தாது நிறைந்த இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்குகிறது. NH-130  தேசிய நெடுஞ்சாலையில் பிலாஸ்பூரிலிருந்து அம்பிகாபூர் பகுதியில், பிலாஸ்பூர் - பத்ரபாலி இடையேயான 53 கிமீ நீளமுள்ள 4 வழிப்பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இச்சாலை உத்தரபிரதேசத்துடன் சத்தீஸ்கருடனான போக்குவரத்தை மேம்படுத்தவும், அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு இணைப்பை வழங்குவதன் மூலம் நிலக்கரி இயக்கத்தை அதிகரிக்கவும் உதவும்.

 

ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் இடையேயான 6 வழி பசுமைவழிச்சாலையின் சத்தீஸ்கர் பகுதிக்கான 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். NH 130CD-ல் 43 கிமீ நீளமுள்ள ஜாங்கி-சர்கி இடையேயான ஆறுவழிப்பாதை, 57 கிமீ நீளமுள்ள சர்கி - பசன்வாஹி இடையேயான ஆறுவழிப் பாதை மற்றும் 25 கிமீ நீளமுள்ள பசன்வாஹி - மரங்புரி இடையிலான ஆறுவழிப்பாதையும் அடங்கும். இதில், உடந்தி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வனவிலங்கு நடமாட்டத்திற்காக 27 விலங்குகளுக்கான வழிகளை உள்ளடக்கிய 2.8 கிமீ நீளமுள்ள 6-வழி சுரங்கப்பாதை ஒரு முக்கிய அங்கமாகும். இந்தத் திட்டங்கள் தம்தாரியில் உள்ள அரிசி ஆலைகளுக்கும், காங்கரில் பாக்சைட் நிறைந்த பகுதிகளுக்கும் சிறந்த போக்குவரத்தை வழங்குவதோடு, கொண்டகானில் உள்ள கைவினைத் தொழிலுக்கும் பயனளிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டங்கள் இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.

 

ரூ.750 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராய்ப்பூர் - காரியார் இடையிலான  103 கிமீ நீளமுள்ள இரட்டை ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது சத்தீஸ்கரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி, எஃகு, உரங்கள் மற்றும் பிற பொருட்களை துறைமுகங்களில் இருந்து கொண்டு செல்வதை எளிதாக்கும். ரூ.290 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கியோட்டி - அன்டகரை இணைக்கும் 17 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில் பாதையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய ரயில் பாதையானது பிலாய் எஃகு ஆலைக்கு டல்லி ராஜ்ஹாரா மற்றும் ரோகாட் பகுதிகளிலுள்ள இரும்புத் தாது சுரங்கங்களுடன் இணைப்பை வழங்குவதோடும் தெற்கு சத்தீஸ்கரின் அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் பகுதிகளையும் இணைக்கும்.

 

கோர்பாவில் ரூ.130 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, ஆண்டுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், காணொலி காட்சி மூலம் அந்தகர் - ராய்பூர் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

***

SM/ PKV/ CR/ KRS

 


(Release ID: 1938071) Visitor Counter : 140