பிரதமர் அலுவலகம்

தில்லிப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

பல்கலைக்கழகத்தின் அகாடமி கட்டடம், கணினி மையம், தொழில்நுட்பத்துறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் தொகுப்பாக நூற்றாண்டு நினைவு மலர்- தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளின் இலச்சினைகளுடன் இலச்சினைப் புத்தகம்-தில்லிப் பல்கலைக்கழக நூறு ஆண்டுகளின் நினைவுச்சுடர் ஆகியவற்றை வெளியிட்டார்

தில்லிப் பல்கலைக்கழகத்தை அடைய மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்
“தில்லிப் பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, அதுவொரு இயக்கம்”

“இந்த நூறு ஆண்டுகளில், தில்லிப் பல்கலைக்கழகம் அதன் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது, அது தனது விழுமியங்களையும் எழுச்சியுடன் வைத்துள்ளது”

“இந்தியாவின் செழுமையான கல்வி முறை, இந்தியாவின் முன்னேற்றத்திற்கான முக்கிய சாதனம்”

“வலுவான, திறமையான இளைய தலைமுறையை உருவாக்குவதில் தில்லிப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது”

“தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் தீர்மானம் நாட்டை நோக்கியதாக இருக்கும்போது அதன் சாதனைகளும் நாட்டின் சாதனைகளுக்கு சமமாகும்”

“கடந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு

Posted On: 30 JUN 2023 1:29PM by PIB Chennai

தில்லிப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வளாகத்தில் உள்ள பன்னோக்கு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் அகாடமி கட்டடம், கணினி மையம், தொழில்நுட்பத்துறை கட்டடங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் தொகுப்பாக நூற்றாண்டு நினைவு மலர்- தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளின் இலச்சினைகளுடன் இலச்சினைப் புத்தகம்-தில்லிப் பல்கலைக்கழக நூறு  ஆண்டுகளின் நினைவுச்சுடர் ஆகியவற்றை வெளியிட்டார்.

தில்லிப் பல்கலைக்கழகத்தை அடைய பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். விழா நடைபெற்ற இடத்தை அடைந்ததும் நூற்றாண்டுப் பயணம் என்னும் கண்காட்சியைப் பிரதமர் நடந்து சென்று பார்வையிட்டார். சரஸ்வதி வந்தனம், இசை மற்றும் நுண்கலைத்துறை அளித்த பல்கலைக்கழகப் பாடல் நிகழ்விலும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தில்லிப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தாம் உறுதியுடன் இருந்ததாகக் கூறினார். இங்கு வந்திருப்பது சொந்த இல்லத்திற்கு வந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அங்கு வெளியிடப்பட்ட குறும்படம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஆளுமைகளின் பங்களிப்பால் இது தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர், இது ஒரு திருவிழாவின் உணர்வை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். எந்தப் பல்கலைக்கழகத்திற்கு சென்றாலும் சகாக்கள் சேர்க்கையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியப் பிரதமர், இந்த இடத்திற்கு வருவதற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு மகிழ்ச்சியளித்ததாக கூறினார்.

தில்லிப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் சமயத்தில் இந்த விழா நடைபெறுவதாக தெரிவித்தார். எந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் அதன் சாதனைகளின் பிரதிபலிப்பாக உள்ளன” என்று அவர் கூறினார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் நூறாண்டு காலப் பயணத்தில் பல்வேறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்த இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பல வரலாற்றுச் சிறப்புகள் உள்ளதாகப் பிரதமர் தெரவித்தார். தில்லிப் பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் அதுவொரு இயக்கம் என்று கூறிய அவர், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அது நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டார். நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் தில்லிப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு மாணவரையும், ஆசிரியரையும் பிரதமர் பாராட்டினார்.

பழைய மற்றும் புதிய மாணவர்கள் திரண்டிருப்பது பற்றி  குறிப்பிட்ட பிரதமர், இந்தத் தருணம் காண்பதற்கு இனிமையானது என்றார்.  இந்த நூறு ஆண்டுகளில், தில்லிப் பல்கலைக்கழகம் அதன் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது, அது தனது விழுமியங்களையும் எழுச்சியுடன் வைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.  ஞானத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், நாளந்தா, தக்ஷிலா போன்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் துடிப்புடன் இருந்ததாகவும் இந்தக் காலம் வளத்தின் உச்சமென்றும் கூறினார்.  இந்தியாவின் வளமான கல்விமுறை பற்றி எடுத்துரைத்த அவர், அந்த சமயத்தில் உலகளாவிய ஜிடிபி பங்களிப்பில் இந்தியா உயர்ந்திருந்தது என்றார்.  அடிமைக்காலத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தாக்குதல், இத்தகைய முன்னணி கல்வி நிறுவனங்களை அழித்து விட்டதாகவும், இதனால் இந்தியாவின் அறிவோட்டத்திற்கு தடை ஏற்பட்டு வளர்ச்சி ஸ்தம்பித்ததாகவும் அவர் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பின் திறமைமிக்க இளைஞர்களின் வலுவான தலைமுறையை உருவாக்குவதன் மூலம் உறுதியான, உணர்வுபூர்வ வடிவத்தை அளிப்பதில் பல்கலைக்கழகங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதில் தில்லிப் பல்கலைக்கழகமும் முக்கியமானப் பங்கினை வகித்துள்ளது. கடந்த காலத்தைப் பற்றிய இந்தப் புரிதல் தற்காலத்தை நன்றாக வடிவமைத்து எதிர்காலத்திற்கான சிந்தனைகளையும், கண்ணோட்டத்தின் விரிவாக்கத்தையும் வடிவமைக்கிறது என்று பிரதமர் கூறினார்.  

தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் தீர்மானம் நாட்டை நோக்கியதாக இருக்கும்போது அதன் சாதனைகளும் நாட்டின் சாதனைகளுக்கு சமமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.  தில்லிப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, இதன் கீழ் 3 கல்லூரிகள் மட்டுமே இருந்தன, இன்று 90-க்கும் அதிகமான கல்லூரிகள் உள்ளன. ஒரு காலத்தில் சிதறிய பொருளாதாரமாக கருதப்பட்ட இந்தியா தற்போது, உலகின் 5 முதன்மைப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறிவருவதை அவர் கோடிட்டுக்காட்டினார்.  தில்லிப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.  தில்லிப் பல்கலைக்கழகம் முதலில் தொடங்கப்பட்ட போது, அதன் இலக்கு சுதந்திரம் என்பதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்தக் கல்வி நிறுவனம் 125-வது ஆண்டினை நிறைவு செய்யும் போது, சுதந்திரத்தின் 100-வது ஆண்டினை எட்டியிருக்கும் என்றும் அப்போது தில்லிப் பல்கலைக்கழகத்தின் இலக்கு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றார். கடந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது, இப்போது புதிய நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறினார்.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஐஐடிகள், ஐஐஎம்கள், ஏஐஐஎம்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்தக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதிய இந்தியாவைக் கட்டமைப்பவையாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி என்பது வெறுமனே கற்பித்தல் நடைமுறை அல்ல என்பதையும், கற்றலின் வழிமுறை என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.   நீண்ட காலத்திற்குப்பின் ஒரு மாணவர் எதைக் கற்க விரும்புகிறார் என்பதில் கவனம் செலுத்துவதாக மாறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். புதிய கல்விக் கொள்கையில் பாடங்களைத் தெரிவு செய்வதில் நெகிழ்வுத்தன்மை இருப்பது பற்றியும் அவர் பேசினார். 

எதிர்காலத்திற்கு உகந்த கல்விக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் காரணமாக இந்தியப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.  2014-ல் க்யூஎஸ் உலகத் தரவரிசையில் 12 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது இந்த எண்ணிக்கை 45-ஆக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த மாற்றத்திற்கு வழிகாட்டும் சக்தியாக விளங்குவது இந்தியாவின் இளைஞர் சக்தி என்று அவர் குறிப்பிட்டார்.  வேலை மற்றும் பட்டம் என்ற அளவோடு கல்விக் கோட்பாட்டை நிறுத்திக்கொள்ளாத இன்றைய இளைஞர்களின் மனமாற்றத்தைப் பிரதமர் பாராட்டினார்.  ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்  தொடங்கப்பட்டிருப்பதும் 2014-15-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், காப்பீட்டு உரிமைக்கான மனுதாக்கல் 40 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதும், உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக் குறியீடு அதிகரித்திருப்பதும் இந்த சிந்தனை மாற்றத்திற்கு சான்றாக விளங்குகின்றன என்று அவர் கூறினார்.  

தமது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, அந்நாட்டுடன் மேற்கொண்ட முக்கியமான மற்றும் வளர்ந்து வரும்  தொழில்நுட்பமான சிஇடி ஒப்பந்தம், இந்திய இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு முதல் செமி கண்டக்டர் வரையிலான பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் என்று அவர் குறிப்பிட்டார். இளைஞர்களை சென்றடையும்  இந்தத் தொழில்நுட்பங்கள் திறன் மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைக்கும் என்றார். கூகுள், அப்ளை மெட்டிரியல்ஸ், மைக்ரான் போன்ற  நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பது இந்திய இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

தொழிற்புரட்சி-4.0 இந்தியாவின் கதவுகளைத் தட்டுவதாகக்  குறிப்பிட்ட பிரதமர், திரைப்படங்களில்  பயன்படுத்தப்பட்ட  ஏஐ (artificial intelligence), ஏஆர் (augmented reality), விஆர் (virtual reality)  போன்ற தொழில்நுட்பங்கள், தற்போது நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.  அதேபோன்று நம் அன்றாட வாழ்வில் இருந்து அறுவை சிகிச்சை வரை ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை நினைவுகூர்ந்தார். இதேபோன்று அனைத்துத் துறைகளும் தற்போது இளைய தலைமுறையினருக்காக புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா பல்வேறு மாற்றங்களைச் செய்திருப்பதாகவும், ட்ரோன்கள் சார்ந்த கொள்கை ரீதியிலான மாற்றங்கள் இளைஞர்கள் முன்னேறிச் செல்ல பாதை அமைத்துக் கொடுத்திருப்பதாகவும்  தெரிவித்தார்.

இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்து வருவது மாணவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகமக்கள் தற்போது இந்தியா பற்றி தெரிந்துகொள்ள பெரிதும் விரும்புகிறார்கள் என்றும், ஏனெனில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு பெரிதும் உதவியது என்றும் இதன் காரணமாகவே எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும், இந்தியா குறித்து மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உலக நாடுகளிடையே உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜி20 நாடுகளுக்கு இந்திய தலைமைத்துவத்தின் மூலம் வளர்ந்துவரும் அங்கீகாரமும், யோகா, அறிவியல், கலாச்சாரம், இலக்கியம், வரலாறு, பாரம்பரியம் உணவு ஆகியவை மாணவர்களிடம் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக கூறினார். எனவே நம்நாட்டு இளைஞர்கள் இந்தியாவை பற்றியும், நம்முடைய செயல்பாடுகள் குறித்தும் உலகுக்கு எடுத்துரைப்பார்கள் என்பதால் இந்திய இளைஞர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் விழுமியங்களான ஜனநாயகம், சமத்துவம், பரஸ்பர மரியாதை ஆகியவை மனிதகுலத்தின் விழுமியங்களாக மாறியிருப்பதால்,  பிற நாடுகளின் அரசு, தூதரகம் போன்றவற்றில் இந்திய இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.   வரலாறு, கலாச்சாரம், பண்பாடு சார்ந்தவற்றில் நமது இளைஞர்கள், தங்களின்  முழுகவனத்தையும் செலுத்தினால்  அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். பழங்குடி அருங்காட்சியகங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பயணம் பிரதமர்களின் அருங்காட்சியகம் மூலம் வெளிப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். “யுகங்கள் தோறும் இந்தியா” எனும் உலகின் மிகப்பெரிய பாரம்பரிய அருங்காட்சியகம் தில்லியில் அமைக்கப்படவிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக  கூறினார். அதேபோன்று இந்திய ஆசிரியர்களின் நன்மதிப்பு உலக மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக உலகத்தலைவர்கள் இந்திய ஆசிரியர்கள் குறித்து தம்மிடம் அடிக்கடி விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.  ஆசிரியர்கள் என்ற இந்தியாவின் இந்த சக்தி, இந்திய இளைஞர்களின் வெற்றிக்கதையாக மாறியிருப்பதாக கூறினார்.    இதனைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகங்கள் தங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தில்லி பல்கலைக்கழகம் தமது 125-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் முக்கிய  இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றார். புத்தாக்க முயற்சிகள் இங்கேயே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், உலகின் மிகச்சிறந்த சிந்தனைகளைத் தலைவர்கள் இங்கிருந்து பெறவேண்டும் என்றும்  குறிப்பிட்ட பிரதமர், இவையனைத்தும் நிறைவேற நாம் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

நம்முடைய வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கை, நம் மனதிலும், இதயத்திலும் பதித்துக்கொள்வது அவசியம் என்றார். அதேபோன்று  தேசத்திற்கான இலக்குக்கு ஏற்ப, நமது மனதையும், இதயத்தையும் தயார்படுத்திக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். நம்முடைய புதிய தலைமுறையினர் எதிர்காலத்திற்காக தயாராக வேண்டும் என்றும் எத்தகைய சவால்களையும் துணிச்சலுடன்  எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், கல்வி நிறுவனங்களின் தொலைநோக்குப் பார்வை மூலமே இதனை சாத்தியமாக்க முடியும் என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தில்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு யோகேஷ் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னணி:

தில்லிப் பல்கலைக்கழகம் 1922 மே 1- அன்று நிறுவப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகம், 86 துறைகள், 90 கல்லூரிகள், 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் என தற்போது வியாபித்து வளர்ந்து, தேசத்தைக் கட்டி எழுப்புவதில் தனது உன்னத பங்களிப்பைத் தந்துள்ளது.

***

(Release ID: 1936363)

AP/PKV/RR/SMB/RJ/ES/AG/KRS

 



(Release ID: 1936444) Visitor Counter : 136