சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வுகள் வாரியத்தின் 42-வது நிறுவன தின விழாவில் மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் பங்கேற்பு
Posted On:
29 JUN 2023 9:18AM by PIB Chennai
மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வுகள் வாரியத்தின் 42-வது நிறுவன தின விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இணையமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங் பாகேல், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 9 புதிய முன்முயற்சிகளையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் வளர்ச்சியில் மருத்துவத்துறை அளப்பரிய பங்கு வகிப்பதாகக் கூறியதுடன், வரும் ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியாவைக் கட்டமைப்பதில் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆரோக்கியமான சமூகம் மற்றும் ஆரோக்கியமான நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிறந்த மருத்துவ சேவைகள், நிபுணத்துவமிக்க மருத்துவர்களை உருவாக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மருத்துவ சேவைகளைக் கொண்டு சென்று நலிவடைந்த பிரிவினரும் பயனடையும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ கணக்கு அட்டை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முன்னேற்றங்களுள் ஒன்று என்று குறிப்பிட்டார்.
மகளிர் சக்தி விருதுகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் மருத்துவ நிபுணர்களுக்கு டாக்டர் மாண்டவியாவும், பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேலும் விருதுகளை வழங்கினார்கள். டாக்டர் வி.கே. பாலுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வுகள் வாரிய தலைவர் விருது வழங்கப்பட்டது.
----
PKV/BR/KPG
(Release ID: 1936201)
Visitor Counter : 180