பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அமெரிக்க அதிபருடனான இருதரப்பு சந்திப்பின்போது பிரதமரின் தொடக்க உரையின் தமிழாக்கம்

Posted On: 23 JUN 2023 6:46PM by PIB Chennai

அதிபர் அவர்களே,

உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஜில் பைடனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னையும் எங்கள் தூதுக்குழுவையும் அன்புடன் வரவேற்ற விதத்திற்காக நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நீங்கள் வெள்ளை மாளிகையின் கதவுகளை இந்திய சமூகத்திற்குத் திறந்துள்ளீர்கள். அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான எதிர்கால உத்திசார் உறவுகளைக் காண ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நம்மிடையே திரண்டனர்.

 

மேன்மைதங்கிய அதிபர் அவர்களே,

நீங்கள் எப்போதுமே இந்தியாவின் நலன் விரும்பியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எல்லா இடங்களிலும், நீங்கள் இந்தியா-அமெரிக்க உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளீர்கள். 8 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலில் உரையாற்றியபோது, நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறியது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. "இந்தியாவின் சிறந்த நண்பராக மாறுவதே எங்கள் குறிக்கோள்" என்று நீங்கள் கூறினீர்கள். உங்களின் இந்த வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன. இந்தியா மீதான உங்கள் தனிப்பட்ட அர்ப்பணிப்பு பல தைரியமான மற்றும் லட்சிய ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க எங்களைத் தூண்டுகிறது.

இன்று இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளித்துறையில் உயரங்களை அடைந்துள்ளதுடன் பெருங்கடலின் ஆழம் வரை அனைத்து துறைகளிலும் ஒத்துழைத்து செயல்படுகின்றன. பண்டைய கலாச்சாரம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை ஒவ்வொரு துறையிலும் உறுதுணையாக நின்று செயல்படுகின்றன.

ராஜீய ரீதியிலான கண்ணோட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் என்று வரும்போது, அது பொதுவாக, முறையான கூட்டு அறிக்கைகள், பணிக்குழுக்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியதாக இருக்கும். உண்மையில், இது அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான இயந்திரம் எங்கள் வலுவான மக்களுக்கு இடையிலான உறவாகும். இந்த உறவுக்கான பேரொலியை வெள்ளை மாளிகையின் வாயிலுக்கு வெளியே நாங்கள் கேட்கிறோம்.

 

மேன்மைதங்கிய அதிபர் அவர்களே,

நீங்கள் கூறியதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். வேகமாக மாறிவரும் இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், அனைவரின் பார்வையும் உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள், அதாவது இந்தியா மற்றும் அமெரிக்கா மீது உள்ளது. ஜனநாயக விழுமியங்கள், உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக நம்பும் அனைத்து சக்திகளுக்கும் நமது உத்திகள் வகுத்தலில் கூட்டாண்மை முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.

ஒட்டுமொத்த உலகின் திறனை அதிகரிப்பதில் நாம் ஒன்றாக இணைந்து நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்று நம் உரையாடலின் போது, இதுபோன்ற பல பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்போம் மற்றும் நமது உத்திசார் உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்ப்போம். நம் நட்புக்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

AP/PLM/SMB/RS/KRS

***



(Release ID: 1934882) Visitor Counter : 157