எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாள் நேர (டிஓடி) கட்டணம் அறிமுகம்,ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை எளிமைப்படுத்தி, மத்திய அரசு மின்சார (நுகர்வோர்உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்துள்ளது

Posted On: 23 JUN 2023 10:29AM by PIB Chennai

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்வதன் மூலம், நடைமுறையில் உள்ள மின் கட்டண அமைப்பில் இரண்டு மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டைம் ஆஃப் டே (டிஓடி) கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை சீரமைத்தல் ஆகியவை அந்த மாற்றங்களாகும்.

பகல் நேர (டிஓடி) கட்டண அறிமுகம்

ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிப்பதை விட, நீங்கள் மின்சாரத்திற்கு செலுத்தும் விலை நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.  டிஓடி (டைம் ஆப் டே) கட்டண முறையின் கீழ், சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், தற்போது நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக இருக்கும். இந்த டிஓடி நேரம், ஒரு நாளில் 8 மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தைப் பொறுத்தது. அதே நேரத்தில், மற்ற மின்சாரத்தை பயன்படுத்தும் உச்ச நேரங்களில் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும். 2024 ஏப்ரல் 1 முதல் 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கும், 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் டிஓடி கட்டணம் பொருந்தும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடனேயே, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட நுகர்வோருக்கு, பகல் நேர கட்டணம் அமலுக்கு வரும்.

மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே.சிங், டிஓடி திட்டம், நுகர்வோருக்கும் மின் அமைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார். "டிஓடி கட்டணம் உச்ச நேரங்கள், சோலார் மணிநேரங்கள் மற்றும் சாதாரண மணி நேரங்களுக்கு தனித்தனி கட்டணங்களை உள்ளடக்கியதாகும். டிஓடி கட்டண முறையை விழிப்புணர்வுடனும், திறம்பட பயன்படுத்துவதன் மூலம், நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும். சூரிய சக்தி மின்சாரம் மலிவானது என்பதால், சூரிய நேரத்தில் கட்டணம் குறைவாக இருக்கும். எனவே நுகர்வோர் பயனடைகிறார்கள்.   சூரிய சக்தி அல்லாத நேரங்களில் அனல் மற்றும் நீர் மின்சாரம் மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் செலவுகள் சூரிய சக்தி மின்சாரத்தை விட அதிகமாகும். இது பகல் நேர கட்டணத்தில் பிரதிபலிக்கும்.  இப்போது நுகர்வோர் தங்கள் மின் செலவைக் குறைப்பதற்காக தங்கள் நுகர்வைத் திட்டமிடலாம். மின் செலவுகள் குறைவாக இருக்கும் சோலார் நேரங்களில் அதிக நடவடிக்கைகளைத் திட்டமிடலாம் என்று அமைச்சர் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் சிறந்த கட்டமைப்பை ஒருங்கிணைப்பதை டிஓடி முறை உறுதி செய்யும், இதன் மூலம் இந்தியாவுக்கு விரைவான எரிசக்தி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
என்று திரு ஆர்.கே.சிங் கூறினார்.

பெரும்பாலான மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் (எஸ்.இ.ஆர்.சி) ஏற்கனவே நாட்டில் உள்ள பெரிய வணிக மற்றும் தொழில்துறை (சி & ஐ) வகை நுகர்வோருக்கு டிஓடி கட்டணங்களை செயல்படுத்தியுள்ளன. ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம், உள்நாட்டு நுகர்வோர் மட்டத்தில் டிஓடி மீட்டரிங் கட்டணக் கொள்கை ஆணையின்படி அறிமுகப்படுத்தப்படும்.

ஸ்மார்ட் மீட்டரிங் விதியில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பான விதிகள்

ஸ்மார்ட் மீட்டரிங்கிற்கான விதிகளையும் அரசு எளிமைப்படுத்தியுள்ளது. நுகர்வோரின் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட சுமை / தேவைக்கு மேல் நுகர்வோரின் தேவையை அதிகரிப்பதற்கான தற்போதைய அபராதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.  மீட்டர் விதியின் திருத்தத்தின்படி, ஸ்மார்ட் மீட்டரை நிறுவிய பிறகு, நிறுவல் தேதிக்கு முந்தைய காலத்திற்கு ஸ்மார்ட் மீட்டரால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தேவையின் அடிப்படையில் நுகர்வோருக்கு எந்த அபராத கட்டணமும் விதிக்கப்படாது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் மூன்று முறை அனுமதிக்கப்பட்ட சுமையைத் தாண்டினால் மட்டுமே அதிகபட்ச தேவையை மேல்நோக்கி மாற்றியமைக்கும் வகையில் சுமை திருத்தும் நடைமுறையும் சீரமைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு சேவை செய்வதற்காக மின்சார அமைப்புகள் உள்ளன மற்றும் நம்பகமான சேவைகள் மற்றும் தரமான மின்சாரத்தைப் பெற நுகர்வோருக்கு உரிமைகள் உள்ளன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 டிசம்பர் 31 அன்று அரசால் அறிவிக்கப்பட்டன. புதிய மின் இணைப்புகள், பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் பிற சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதையும், நுகர்வோர் உரிமைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதன் விளைவாக சேவை வழங்குநர்கள் மீது அபராதம் விதிப்பதையும், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குவதையும் இந்த விதிகள் உறுதி செய்கின்றன.

மின் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதற்கும், மலிவு விலையில் 24 மணி நேரமும் நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கும், மின்சாரத் துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழலை பராமரிப்பதற்கும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் தொடர்ச்சியே தற்போதைய விதித் திருத்தம் ஆகும்.

2020 டிசம்பரில் விதிகளின் அறிவிப்புகள் மற்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்களை கீழே காணலாம்.

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) திருத்த விதிகள், 2021

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) திருத்த விதிகள், 2022

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) திருத்த விதிகள், 2023

***

(Release ID: 1934673)

AD/PKV/RR/KRS


(Release ID: 1934826) Visitor Counter : 362