பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 23 JUN 2023 7:31AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளை மாளிகைக்கு இன்று காலை சென்றபோது அதிபர் திரு.ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடன் ஆகியோர் அவரை பாரம்பரிய முறையில் வரவேற்றனர். ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் பிரதமரை வரவேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வரவேற்புக்குப் பின்னர் பிரதமர் அதிபர் பைடனுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை இரு தலைவர்கள் மட்டத்திலும். பிரதிநிதிகள் மட்டத்திலும் நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, பருவநிலை மாற்றம். மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய விஷயங்களில், இரு நாடுகளுக்கும் இடையே மிக நீண்ட காலமாக இருந்து வரும் நட்புறவு மற்றும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பைப் பராமரிக்க இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.

இருநாட்டு உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான வலுவான அடித்தளம் அமைக்கும் விழுமியங்களை பகிர்ந்து கொண்ட தலைவர்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை தொடர உறுதிபூண்டனர். சிக்கலான உருவெடுத்து வரும் பொருளாதாரங்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம் அபரிமித வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை பாராட்டிய அவர்கள், விரிவான விநியோகச் சங்கிலிகளை கட்டமைக்க பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் விருப்பத்தையும் தெரிவித்தனர். முக்கிய கனிமங்கள் மற்றும் விண்வெளி துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதை அவர்கள் வரவேற்றனர்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும். நிலையான வருங்காலத்தை எட்டவுமான தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தவும், பருவநிலை முன்முயற்சிகளில் இணைந்து செயல்படவும் ஏற்ற வழிமுறைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியா, அமெரிக்கா நாடுகளின் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக சமுதாயத்திற்கும் பயனளிக்கும், பன்னோக்கு விரிவான உலக உத்திபூர்வ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்த தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலக விஷயங்கள் குறித்தும் விவாதம் நடைபெற்றது.

அதிபர் பைடன், முதல் பெண்மணி ஆகியோர் அளித்த அன்பான வரவேற்புக்கு பிரதமர் தமது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். வரும் செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெற உள்ள ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு அதிபர் பைடனை வரவேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.

***

(Release ID: 1934650)

AD/PKV/RR


(Release ID: 1934681) Visitor Counter : 148