பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் ஆதீனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 MAY 2023 10:42PM by PIB Chennai

அனைவருக்கும் வணக்கம்!

ஓம் நமசிவாய! சிவாய நமஹ!

பல்வேறு ஆதீனங்களுடன் தொடர்புடைய மதிப்பிற்குரிய துறவிகளாகிய உங்களை முதலில் வணங்குகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பதை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நாளை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆசி வழங்கவிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

மதிப்பிற்குரிய துறவிகளே,

நமது சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆற்றிய முக்கிய பங்களிப்பை நாம் அனைவரும் நன்கு அறிவோம். வீரமங்கை வேலு நாச்சியார் முதல் மருது சகோதரர்கள் வரையும், சுப்பிரமணிய பாரதியார் முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் கைகோர்த்த பல்வேறு தமிழர்கள் வரையும், பல காலங்களாக இந்திய தேசியவாதத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய கோட்டையைப் போல விளங்குகிறது. பாரத அன்னை மற்றும் இந்தியாவின் நலனில் தமிழ் மக்கள் எப்போதும் சேவை உணர்வை கடைப்பிடித்து வருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் மக்களின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இந்த விசயத்திற்கு பா.ஜ.க தற்போது முன்னுரிமை அளிக்கிறது.

 

விடுதலையின் போது ஆட்சி மாற்றத்தை உணர்த்தும் சின்னம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. அப்போது ராஜாஜி மற்றும் ஆதீனத்தின் வழிகாட்டுதலால் பழமையான தமிழ் கலாச்சாரத்தில் இருந்து செங்கோல் மூலம் ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். தமிழ் கலாச்சாரத்தில், ஆட்சியாளருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோலை வைத்திருப்பவருக்கு நாட்டின் நலனுக்கான பொறுப்பு தமக்கு உள்ளது என்பதையும், கடமையின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகக் கூடாது என்பதையும் அது உணர்த்துகிறது. அதிகார மாற்றத்தை குறிப்பதற்காக 1947- ஆம் ஆண்டு, புனித திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பு செங்கோல் உருவாக்கப்பட்டது.

எனதருமை நாட்டு மக்களே,

ராஜாஜி மற்றும் பல்வேறு ஆதீனங்களின் தொலைநோக்குப் பார்வையையும் இன்றைய தினத்தில் நான் வணங்குகிறேன். 1947-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை குறிக்கும் சின்னமாக விளங்கியதோடு, எதிர்கால சுதந்திர இந்தியாவுடன், பாரம்பரியங்களையும், காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய ஒளிமயமான இந்தியாவையும் இணைத்ததால் இந்தப் புனித செங்கோல் கூடுதல் சிறப்பு பெறுகிறது. எனினும் விடுதலைக்குப் பிறகு இந்த செங்கோலுக்கு உரிய கௌரவமும், மரியாதையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரயாக்ராஜின் ஆனந்த பவனில் ஒரு ஊன்றுகோலாக இந்த செங்கோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நமது அரசு இதனை ஆனந்த பவனில் இருந்து எடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிர்மாணிக்கவுள்ளது.

மதிப்பிற்குரிய துறவிகளே,

ஆதீனம் போன்ற புனித பாரம்பரியத்தின் முக்கிய பங்களிப்பால்தான் பல நூற்றாண்டு காலம் அடிமைப்பட்டிருந்த பிறகும் தமிழ் கலாச்சாரம் இன்னும் துடிப்பாகவும், செழிப்பாகவும் நீடிக்கிறது. 2047-ஆம் ஆண்டில் மிகப்பெரிய இலக்குகளை அடைவதை நோக்கி நாடு தற்போது முன்னேறி வரும் வேளையில் உங்களது பங்களிப்பு மிக முக்கியமாகிறது. இந்தியாவின் ஒற்றுமை அதிகரிக்கும்போது, நாடு மேலும் வலிமை அடையும். இந்தியாவின் வளர்ச்சியைத் தடை செய்ய எண்ணுபவர்கள் முதலில் நமது ஒற்றுமையைத்தான் சீர்குலைப்பார்கள்.  எனினும் உங்களது அமைப்புகளினால் நாட்டிற்கு அளிக்கப்படும் சமூக சேவை மற்றும் ஆன்மீக வலிமையால் அனைத்து சவால்களையும் நாம் வெற்றிகரமாக எதிர் கொள்வோம் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வணங்குகிறேன்.

ஓம் நமசிவாய!

வணக்கம்!

******

 (Release ID: 1927787)

 



(Release ID: 1928542) Visitor Counter : 124