இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டி -2022-ஐ இன்று இரவு 7மணிக்கு காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார்


சிறப்புமிக்க தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தயார் நிலையில் உள்ளன

Posted On: 25 MAY 2023 10:51AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டி -2022-ஐ இன்று இரவு 7 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.  இந்த மூன்றாவது பல்கலைக்கழக கேலோ இந்தியா போட்டிக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தயார் நிலையில் உள்ளன.

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு நிஷித் பிரமாணிக் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.

70 நிமிடங்கள் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மாலை 6.50க்கு பிபிடி பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் தேசிய கீதத்துடன், தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களின் உரை, விளையாட்டு ஜோதியை பெறுதல், வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இந்தப்போட்டியின் சின்னமாக ஜித்து எனப்படும், உத்தரப்பிரதேச மாநில அரசின் விலங்கான பரசிங்கா என்ற சதுப்புமான் அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரபல பாடகர் கைலாஷ்கெர்ரின்  இசைநிகழ்ச்சியுடன் தொடக்க விழா நிறைவு பெறுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச மாநில அரசின் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு நவனீத் சேகல், உத்தரப்பிரதேச வரலாற்றில் இது முக்கியமானது என்று கூறினார். உலகத்தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான நிகழ்ச்சிகள், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டி, முறைப்படி இன்று தொடங்கிவைக்கப்பட்டாலும், ஆடவர் மற்றும்  மகளிருக்கான கபடிப்போட்டிகள் ஏற்கனவே மே 23ம் தேதி நொய்டாவில் தொடங்கியது.  கூடைப்பந்து, கால்பந்து, டென்னீஸ் உள்ளிட்ட 7 விளையாட்டுப்போட்டிகள் லக்னோவில் மூன்று இடங்களில் மே 24ம் தேதி தொடங்கியது.  போட்டிகளின் நிறைவு விழா, வாரணாசியில் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா, பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டியில், 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வீரர்கள் பங்கேற்கின்றனர். லக்னோ, வாரணாசி, கோரக்பூர் மற்றும் நொய்டாவில்  போட்டிகள் நடைபெறுகின்றன.

துப்பாக்கிச் சுடுதலில் மனுபாக்கர், மெகுலி கோஷ் உள்ளிட்டவர்களும், பேட்மிண்ட்னில் மாளவிகா பன்சோத் உள்ளிட்ட வீராங்கனைகளும், மல்யுத்தத்தில் பிரியா மாலிக் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர். இதேபோல் பல்வேறு போட்டிகளில் தேசிய அளவிலான முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

******

AD/PLM/RS/KRS



(Release ID: 1927154) Visitor Counter : 126