ஜல்சக்தி அமைச்சகம்
4-வது தேசிய நீர் விருதுகள் 2023 ஜூன் 17 அன்று வழங்கப்படும்
11 வகைமைகளில் 41 வெற்றியாளர்கள் ஜல்சக்தி அமைச்சகத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Posted On:
23 MAY 2023 2:23PM by PIB Chennai
ஜல்சக்தி அமைச்சகத்தின் நீராதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத்துறை, 4-வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2023 ஜூன் 17 அன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்குமாறு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ‘சிறந்த மாநிலம்’, ‘சிறந்த மாவட்டம்’, ‘சிறந்த கிராமப் பஞ்சாயத்து’, ‘சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு’, ‘சிறந்தப் பள்ளி’, ‘சிறந்த ஊடகம்’, ‘வளாக பயன்பாட்டுக்கான சிறந்த தொழில்துறை’, ‘சிறந்த முறையில் தண்ணீரைப் பயன்படுத்தும் சங்கம்’, ‘சிறந்த தொழில் துறை’, ‘சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்கான சிறந்த தொழில் துறை’, ‘சிறந்த தொண்டு நிறுவனம்’ ஆகிய 11 வகைமைகளில் 2022-க்கான 4-வது தேசிய நீர் விருதுகளுக்கு இணை வெற்றியாளர்கள் உட்பட 41 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வெற்றிப்பெற்றவர்களுக்கு பட்டயம், கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்படும். முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ. 2 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இந்த விருது வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நீராதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் செயலாளர் திரு பங்கஜ் குமார் தலைமை தாங்கினார். நீராதாரங்கள், பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தவும், வெற்றியாளர்கள், பங்கேற்பாளர்கள், பல்வேறு அமைப்புகளிடையே வலுவான ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்தவும் இந்த விழா உதவும் என்று அவர் கூறினார்.
இந்த விழாவில், பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ அமைப்புகள்/ மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள், விருது பெறுபவர்கள், பிரமுகர்கள் உட்பட சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1848661என்ற இணைய தளத்தில் காணலாம்.
-----------
AP/SMB/RS/KRS
(Release ID: 1926670)
Visitor Counter : 205