பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் காந்திநகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 MAY 2023 5:00PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, சிஆர் பாட்டீல் அவர்களே, குஜராத்தைச் சேர்ந்த அமைச்சர்களே, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் பயனாளி குடும்பங்களைச் சேர்ந்தவர்களே, இதர பிரமுகர்களே, குஜராத்தின் எனதருமை சகோதர, சகோதரிகளே!

இன்று தங்களின் வீடுகளை பெறுகின்ற குஜராத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, பூபேந்திர பாய்க்கும், அவரது குழுவினருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். கிராமங்கள் மற்றும் நகரங்களோடு தொடர்புடைய, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஏழைகளுக்கு வீடுகள், குடிநீர் திட்டங்கள், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்துறை மேம்பாடு தொடர்பான திட்டங்கள் இவற்றில் அடங்கும். பயனாளிகள் அனைவருக்கும் குறிப்பாக  அனைத்து வசதிகளையும் கொண்ட, தங்களுக்கான வீடுகளை பெறவிருக்கும் சகோதரிகளுக்கு நான் மீண்டும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

நண்பர்களே!

 மாபெரும் தியாகத்தின் மூலம் இந்த தேசம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின் குஜராத்தில் அமைந்த புதிய அரசின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் எடுத்திருப்பது திருப்தி அளிக்கிறது. குஜராத்தின் மாநில பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களை முன்னிறுத்தி நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

25 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம், 2 லட்சம் தாய்மார்களுக்கு பிரதமரின் மகப்பேறு நிதியுதவி, 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நவீன உள்கட்டமைப்பு வசதிக்கான பணிகள் ஆகியவை முனைப்பான நடவடிக்கைகளாகும். இவை இரட்டை என்ஜின் குஜராத் அரசின் பணிகள், இரட்டை வேகம் எடுத்திருப்பதை உறுதிசெய்கிறது.

கடந்த 9 ஆண்டுகளில் எதிர்பாராத வளர்ச்சியை மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் அடிப்படை வசதிகளை பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட்ட குடிமக்கள், தற்போது அந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளனர்.

நண்பர்களே!

அரசின் திட்டப்பலன்கள் நூறு சதவீதம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தப்படுகிறது. வளர்ச்சி என்பது எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பாக பார்க்கப்படுகிறது. ஊழல் மற்றும் பாகுபாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அணுகுமுறை  ஆகும். எங்கும் பாகுபாடு இல்லை என்ற நிலையே மதச்சார்பின்மையின் உண்மையான அடையாளம் என்று நாங்கள் நம்புகிறோம். சமூக நீதி நிலைநாட்டப்படும் போது, அரசு திட்டங்களின் பயன்கள் சமுதாயத்தின் ஒவ்வொருவரையும் சென்றடையும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.  கடந்த ஆண்டு 32,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைகளுக்கான தேடல் குறைந்திருப்பதால், ஏழை மக்களின் தன்னம்பிக்கை உத்வேகமடைந்துள்ளது.

நண்பர்களே!

முந்தைய ஆட்சியில் வீட்டுவசதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 75 சதவீத வீடுகள் கழிப்பிட வசதியை பெற்றுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப் பின் மத்திய அரசின் துரிதமான நடவடிக்கைகளால் ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க பாடுபட்டதுடன், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு மத்திய அரசின் நி்தியுதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பல திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் வீடுகள் இருக்கின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின் வசதி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு, ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் என அனைத்து வசதிகளும் இந்த வீடுகளில் உள்ளன. இவை தவிர ஏழை மக்களுக்கான பாதுகாப்பு கேடயமாக இலவச மருத்துவ சிகிச்சை, இலவச ரேஷன் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

நண்பர்களே!

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மகளிருக்கு அதிகாரமளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள் ஏழை மக்களுக்காக கட்டித்ரப்பட்டுள்ளன.  இவற்றில் 70 சதவீதம் வீடுகள் குடும்ப தலைவிகளின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண் பயனாளிகள் லட்சாதிபதிகளாக மாறியிருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்கள் முதல் முறையாக சொத்துக்கு உரிமையாளராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல், எதிர்கால சவால்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே எங்கள் அரசு பணியாற்றி வருகிறது. ராஜ்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. குறைந்த செலவிலான வீடுகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 6 நகரங்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நவீன வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை விரைவில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்.

நண்பர்களே!

நகரமயமாக்கலை பொறுத்தவரை எளிமையான  மற்றும் தரமான வாழ்க்கை முறைக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.   மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அதிக நேரம் செலவிடுவதைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 250 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, கடந்த 9 ஆண்டுகளில் 600 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியின் வேகத்தை அதே பாதையில் நிர்வகிக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும். நாம் அனைவரும் முயற்சி செய்தால் அமிர்த காலத்திற்கென உருவாக்கியுள்ள இலக்குகளை நிச்சயம் நிறைவேற்ற முடியும்.

 

******

(Release ID: 1923694)

AD/SMB/AG/KRS

 



(Release ID: 1926373) Visitor Counter : 131