உள்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற மற்றும் பல்வேறு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு, சட்ட வரைவு சார்ந்த பயிற்சி முகாமை, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 15 MAY 2023 3:40PM by PIB Chennai

நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற மற்றும் பல்வேறு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு சட்ட வரைவை மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சி முகாமை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இதில் மக்களவைத் தலைவர்  திரு ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் திரு பிரஹலாத் ஜோஷி, திரு அர்ஜூன் ராம் மேஹ்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமித்ஷா, சட்ட வரைவு என்பது நமது ஜனநாயகத்தின் முக்கிய மூலக்கூறு என்றார். ஏனெனில்,  சட்டவரைவு சார்ந்த அறிவாற்றலில் தொய்வு ஏற்பட்டால், அது  சட்டத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையே பலவீனமாக்கிவிடும் என்பதுடன், நீதித்துறைச் செயல்பாட்டையும் சீர்குலைத்து விடும் என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாட்டின் ஜனநாயகத்திற்கும் இது மிக மிக முக்கியமானது என்பதால், சட்டவரைவு சார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொண்டு குறித்த நேரத்தில் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக் கருதப்படும் இந்திய ஜனநாயகம், நம்நாட்டில் பிறந்தது என்பது மட்டுமல்லாமல், அதன் கொள்கை இந்தியாவிலேயே உருவானது என்று கூறுவது சாலப்பொருந்தும் என்றார். இந்திய அரசியலமைப்பு உலகின்  மிகச்சிறந்த அரசியலமைப்பாக கருதப்படுவதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார். நீதி, நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்புகள் ஆகியவையே இந்திய ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள் என்று கூறிய அவர், இந்த மூன்று தூண்களின் அடிப்படையிலேயே, ஒட்டுமொத்த ஜனநாயக ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மக்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சட்டத்தைப் பின்பற்றி தீர்வு காண்பதே சட்டத்தின் கடமை என்று குறிப்பிட்ட அவர், பழைய சட்டங்களை புதுப்பித்தல் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குதல் ஆகிய நடைமுறைகளைக் கையாளும் போது நாடாளுமன்றம், அனைத்து தரப்பினரின் விவாதங்களையும்,  கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும்  கூறினார். நம் நாட்டில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை, பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண சட்டத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மிக சக்தி வாய்ந்த உறுப்பு நாடாளுமன்றம் என்பதுடன், அதன் சக்தியே சட்டங்கள் தான் என்றும் அமித் ஷா கூறினார். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் கருத்துகள் மற்றும் மக்களின் எண்ணங்களை சட்டங்களாக மாற்றும் போது, அரசியலமைப்பு, கலாச்சாரம். வரலாற்றுப் பாரம்பரியம், ஆட்சி முறை, சமூகம், நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாடு, சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சட்ட வரைவு என்பதை அறிவியலாகவோ, கலையாகவோ, பார்க்காமல், திறன் உத்வேகத்துடன் கூடிய திறமையாகவே அதனைக் கருதவேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

அரசின் கொள்கைகளைச் சட்டமாக மாற்றும் போது, பழைய மற்றும் சர்ச்சைக்குரிய சட்டங்களின் சாராம்சங்களை, குறைந்தபட்சம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.  சட்ட வரைவை உருவாக்கும் போது, சட்டத்தை எழுதுவது, திறமையான ஒன்று என்றபோதிலும், அடைமொழிக்குள் போட வேண்டிய வார்த்தைகளை  மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டவரைவில்  மிகவும் எளிமையான, அதே நேரத்தில் தெளிவான புரிதலைக் கொடுக்கும்  வார்த்தைகளை முடிந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், பொதுவான வார்த்தைகளை பயன்படுத்துவது சர்ச்சைகளை உருவாக்கிவிடும் என்றும் அறிவுறுத்தினார்.

பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல், தற்போது வரை, சர்ச்சைக்குரிய பல சட்டங்களை நீக்கியதன் மூலம் வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள், சமூக ஆகியவற்றை பல சட்டங்களிலிருந்து விடுவித்து இருக்கிறது என்று  குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அதே நேரத்தில் நாட்டின் நலன் கருதி அவ்வப்போது பல புதிய சட்டங்களை இயற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

******

AP/ES/RS/KGP



(Release ID: 1924268) Visitor Counter : 194